TNPSC Thervupettagam

கை விரிக்கும் கர்நாடகம்...கைகொடுக்காத அமைப்புகள்!

July 5 , 2024 11 hrs 0 min 17 0
  • ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம், வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்...’ என்று கர்ணனைப் போற்றும் ஒரு பாடல் தொடங்கும். இன்றைக்குக் களத்தில் உழவர்கள் காண்பதும் அதே நிலைதான். மேட்டூர் அணையின் 90 ஆண்டு வரலாற்றில் ஜூன் 12 தண்ணீர் திறப்பதில், 61ஆவது முறையாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
  • மேட்டூர் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து, இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், பயிர்கள் காப்பீடு எனத் தமிழ்நாடு அரசு உழவர்களை முதலில் உற்சாகப்படுத்தியது. எனினும், கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்கும் செயல்பாடுகளில் தமிழ்நாடு தளர்ந்துள்ளது.

தடுமாறும் அமைப்புகள்:

  • 17 ஆண்டுகள் 568 வாய்தாக்கள் என்கிற நீண்ட விசாரணை, தீர்ப்பு, அரசிதழ் வெளியீடு ஆகியவற்றுக்குப் பிறகு, காவிரி நீரை வழங்குவதில் கர்நாடக அரசு அலட்சியம் காட்டிக் கூட்டாட்சி அமைப்பை அவமதிக்கிறது.
  • “காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் முடிவுகளுக்குக் கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். அவற்றின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம்கூடத் தலையிடாது” என 21.09.2023லேயே உச்ச நீதிமன்றம் அவற்றுக்கு அதிகாரம் தந்தது.
  • எனினும் இந்த அமைப்புகளோ வெறுமனே கூடிக் கலையும் சபைகளாகவே இருக்கின்றன. முன்பெல்லாம் அவை தண்ணீர் வழங்கும் அளவை நிர்ணயிக்கும் ஆணைகளை அமல்படுத்துவதில் சிரமம் இருந்தது. இப்போது அவை ஆணைகளை வழங்குவதிலேயே தடுமாறுகின்றன.
  • 2023 ஜூன் முதல் 28-04-2024 வரை தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் 174.497 டி.எம்.சி வழங்கியிருக்க வேண்டும்; ஆனால், 78.728 டி.எம்.சியைக் கொடுத்துவிட்டு 95.710 டி.எம்.சி மிச்சம் வைத்தது என்று 2024 மே மாதம் நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95ஆவது கூட்டத்தில் தமிழ்நாடு தெரிவித்தது.
  • மே மாதத்திற்குரிய பங்கீட்டையும் சுற்றுச்சூழலுக்கான ஒதுக்கீட்டையும் கர்நாடகம் தர வேண்டும் என்றும் தமிழ்நாடு கோரிக்கைவிடுத்தது. ஆனால், வறட்சியைக் காரணமாக்கித் தண்ணீர் தர இயலாது என்ற நிலையை கர்நாடகம் எடுத்தது. ஒழுங்காற்றுக் குழுவோ, “கர்நாடகம் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கும் நிலையில் இல்லை. இந்தப் பிரச்சினையை மே இரண்டாம் வாரத்தில் ஆராயலாம்” எனக் கூறி நழுவியிருந்தது.

கர்நாடகத்தின் பிடிவாதம்:

  • இதேபோல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97ஆவது கூட்டம் 14.06.2024ல் நடந்தது. இக்கூட்டத்தில் “ஜூன் 1 முதல் 11 வரையிலான காலத்துக்கு கர்நாடகம் 3.370 டி.எம்.சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். 1.316 டி.எம்.சி மட்டும் கொடுத்துவிட்டு 2.054 டி.எம்.சியை மிச்சம் வைத்துள்ளது. இதனையும் ஜூன் மாதத்தின் 9.19 டி.எம்.சியையும், கர்நாடகம் தர வேண்டும்” எனத் தமிழ்நாடு கோரிக்கைவிடுத்தது.
  • பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக் காரணம் கற்பித்து கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தது. இவ்வளவுக்கும் அப்போதுதான் பெங்களூரு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகான மாமழையைச் சந்தித்திருந்தது. 16-06-1891க்கு பிறகு 02-06-2024இல் ஓர் இரவில் 111 மி.மீ. மழை பெங்களூருவில் பொழிந்திருந்தது.
  • காவிரியிலிருந்து 90 கி.மீ. அப்பால் பெங்களூரு உள்ளது. அங்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பதையே கர்நாடகம் தொடர்ந்து காரணமாகக் கூறிவருகிறது. தமிழ்நாட்டின் 17 மாவட்டங்கள் குடிநீருக்குக் காவிரியையே நம்பி இருக்கின்றன. தமிழ்நாட்டில் காவிரிக் கரையின் பல கிராமங்களில் காவிரி நீர் கிடைக்காமல் கிணற்று நீரை மக்கள் குடிக்கின்றனர் என்பதுதான் கள யதார்த்தம்.
  • மேற்கூறிய கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை ஆய்வு மைய உறுப்பினர் ஜூன் 1 முதல் 13 வரை கர்நாடகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பொழிந்தது என்றும் அதற்கு மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார். ஆயினும் கர்நாடகம் தண்ணீர் தர இயலாது என்றே பிடிவாதம் பிடித்ததால் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் “அடுத்த கூட்டத்தில் இதனைப் பற்றி ஆராயலாம்” எனக் கூறி நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார்.
  • காவிரி ஒழுங்காற்றுக் குழுவினும் மேம்பட்ட அமைப்பான காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் இதே காட்சிகள்தான். இதன் 31ஆவது கூட்டம் 25.06.2024இல் நடந்தது. மேட்டூரில் 12.490 டி.எம்.சி இருப்பையும் கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 37.490 டி.எம்.சி இருப்பையும் கூறி ஜூன் 24 வரையிலான பாக்கியான 5.367 டி.எம்.சி நீரையும், ஜூலைப் பங்கீடான 31.24 டி.எம்.சி நீரையும் வழங்கிடுமாறு தமிழ்நாடு கோரியது.
  • “மழை பெய்தாலும் குடிநீருக்கு மேலும் தண்ணீர் தேவை; எனவே, தண்ணீர் தர இயலாது” என கர்நாடகம் கூறியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தார் “இரண்டு மாநிலங்களின் நீர் இருப்பு, அவற்றின் தேவைகளை ஆராய்ந்து பிறகு தீர்ப்பு கூறுகிறேன்” என்று கூறி, கூட்டத்திலிருந்து எழுந்தார்.
  • இப்போதுவரை உத்தரவு ஏதும் வரவில்லை. ‘செத்தன்னக்கி வா என்றால் எட்டன்னக்கி வருவது’ என்று கிராமத்திலே பழமொழி உண்டு. இக்கூட்டங்கள் கட்டப்பஞ்சாயத்து மன்றங்களாகிவிடக் கூடாது. செயற்கைக்கோள்கள், டிரோன்கள், விமானங்கள், நிபுணர்கள் இவ்வளவையும் வைத்துக்கொண்டு மேற்கூறிய அமைப்புகள் தீர்ப்பு வழங்குவதைத் தாமதப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? எப்போதும் கர்நாடகம் கூறுவதுபோல் தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தாலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் 9ஆவது அத்தியாயம் பற்றாக்குறைக் காலத் தண்ணீர்ப் பகிர்வுகளை எடுத்துக் கூறுகிறது. அந்தக் கணக்குப்படி தண்ணீரைப் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. பிறகு ஏன் இக்கடமையிலிருந்து அது தவறுகிறது?

வெடிக்கும் குமுறல்கள்:

  • மேற்கூறிய முடிவெடுக்கப்படாத கூட்டங்களுக்குப் பிறகு காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாகத் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் கூறிவிட்டு நித்திரையில் ஆழ்கிறது.
  • வழக்கம்போல் கூட்டாட்சி அமைப்பின் தலைவராக மத்திய அரசு இப்பிரச்சினையை அணுகவில்லை. மத்திய நீர் வளத் துறையின் அமைச்சராக உள்ள சோமண்ணா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல், ‘பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்று அவரும் முட்டுக்கட்டை போடுகிறார்.
  • உலக அளவில் நெல் பயிரிடும் பரப்பில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. மகசூலிலோ சீனா, ஜப்பான் நாடுகளைவிட இந்தியா பின்தங்குகிறது. மேலும் இந்திய அளவில் அரிசி உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம்; தென்னிந்தியாவில் முதலிடம் பெறுவது தமிழ்நாடுதான். எனவே, மத்திய அரசு காவிரிப் பிரச்சினையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்.
  • இத்தகைய பிரச்சினைகளைக் காலத்தில் தீர்க்காமல் விடுவதே இந்தியா பின்தங்குவதற்குக் காரணம். வரும் 2040ஆம் ஆண்டுவாக்கில் கங்கைச் சமவெளியில் பனியாறு வெடிப்புகளால் 40 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறுவர் எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன. படிப்படியாக அந்த வெளியேற்றம், காவிரிச் சமவெளியிலும் சம்பவிக்கிறது.
  • இவ்வளவுக்குப் பிறகும் விளைச்சலில் காவிரிப் பாசனப் பகுதி அவ்வப்போது சில சாதனைகளை நிகழ்த்துவது உண்மைதான். சங்குகளையும் மணிகளையும் பலாக்கனிகளின் சுளைகளையும் தள்ளிக்கொண்டு தண்ணீர் கரை மோதுவதாக கம்பர் வர்ணித்திருப்பார். அதே காவிரிதான், அதே கரைகள்தான். மோதுவது என்னவோ மனதின் குமுறல்களாக இருக்கின்றன. ஆற்றுக்கு மகத்தான ஞானம் உண்டு. அது தன் ரகசியங்களை மனிதர்களின் இதயத்தில் முணுமுணுக்கிறது என்று மார்க் ட்வெய்ன் ஒருமுறை கூறியிருந்தார். அது காவிரிக்கும் பொருந்தும்!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories