TNPSC Thervupettagam

கொசுக்களை வளர்த்தெடுக்கும் காலநிலை மாற் றம்!

September 26 , 2024 5 hrs 0 min 27 0

கொசுக்களை வளர்த்தெடுக்கும் காலநிலை மாற்றம்!

  • தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்க இருக்கும் காலம் இது. வழக்கம்போல் கொசுக்களுக்குக் கொண்டாட்டம் கூடும் நேரம். டெங்கு, ஸிகா, சிக்குன்குனியா போன்ற கொசுக்கடி நோய்கள் அதிகரிக்கும் வேளை இது. இவற்றில் டெங்குவின் ஆட்டம் இப்போதே தொடங்கிவிட்டதாகத் தமிழக அரசு எச்சரித்திருக்கிறது.
  • கடந்த எட்டு மாதங்​களில் தமிழகத்தில் 14,560 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்​டிருக்​கிறது. ஏழு பேர் உயிரிழந்​திருக்​கிறார்கள். சென்னை, கோயம்​புத்​தூர், கிருஷ்ணகிரி, திருப்​பூர், திருவள்​ளூர், தேனி, மதுரை, திருநெல்​வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்​டங்​களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக அரசின் புள்ளி​விவரம் தெரிவிக்​கிறது. ஆறு வருடங்​களுக்குப் பிறகு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைக் கடந்திருக்​கிறது. 2012இல் 13,204 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, 66 பேர் உயிரிழந்​தனர். 2017இல் 23,294 பேர் பாதிப்​படைந்​தனர்; 65 பேர் உயிரிழந்​தனர். கடந்த ஆண்டில் 9,121 பேருக்குப் பாதிப்பும், 12 பேருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டன. இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு இப்போதே ஏறுமுகத்தில் இருப்​பதுதான் நம்மை அச்சுறுத்து​கிறது.

எது டெங்கு?

  • ‘டெங்கு’ என்னும் வைரஸ் கிருமிகளால் டெங்கு காய்ச்சல் ஏற்படு​கிறது. இந்தக் கிருமிகளில் நான்கு வகைகள் உள்ளன. ‘டென்​வி-2’ (DENV-2) வகைதான் அதிக ஆபத்தானது. டெங்கு கிருமிகளைச் சுமந்து திரியும் ‘ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) கொசுக்கள் நம்மைக் கடிக்​கும்​போது, டெங்கு காய்ச்சல் வருகிறது. இந்தக் கொசுக்கள் தமிழ்​நாட்டில் பல மாவட்​டங்​களில் பரவலாக இருக்​கின்றன. வீடுகளிலும் பிற இடங்களிலும் தேங்கி​யிருக்கும் சுத்தமான தண்ணீரில் இவை உற்பத்​தி​யாகின்றன.

டெங்குவை ஒழிக்க முடிய​வில்​லையே, ஏன்?

  • இப்போதெல்லாம் தமிழ்​நாட்டில் மட்டுமல்​லாமல் இந்தியா​வெங்கும் டெங்கு பெருநகரக் குறுந்​தொற்​றாகக் (Urban Epidemic) காணப்​படு​கிறது. சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகம் இந்திய டெங்கு அறிக்கையை (2023) சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, இந்தியாவில் டெங்கு பாதிப்பு பெருநகரங்​களில்தான் அதிகம்.
  • 2022இல் இந்தப் பாதிப்பு 58 சதவீதமாக இருந்து, 2023இல் 68 சதவீதமாக உயர்ந்​திருக்​கிறது. தொடர்ச்​சியான மக்கள்​தொகைப் பெருக்கம், நாடெங்கும் அதிகரித்து​வரும் நகரமய​மாக்கல், பெருநகர் விரிவாக்கம், நெருக்கடி மிகுந்த குடியிருப்புகள் போன்ற​வற்றால் கொசுக்​களின் வசிப்​பிடங்கள் அதிகரித்​துள்ளன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்​திருக்​கிறது.
  • உதாரணமாக, நெருக்கடி மிகுந்த சென்னையில் மெட்ரோ ரயில், அடுக்​கு​மாடிக் கட்டிடங்கள், சாலை விரிவாக்கம் போன்ற நகர விரிவாக்கப் பணிகளின்போது திடக் கழிவுகள் சேர்வதும் அதிகரிக்​கிறது. அதேசமயம், இந்தக் கழிவு மேலாண்​மையில் - வளர்ந்த நாடுகள் கொடுக்கும் முக்கி​யத்து​வத்தை நம்மவர்​களிடம் எதிர்​பார்க்க முடியாது. இதனால் தண்ணீர் தேங்கும் இடங்கள் அதிகரிக்​கின்றன. முறையான நீர்ச் சேமிப்பு நடைமுறைகள் இருப்​ப​தில்லை.
  • இந்தப் போக்கு கொசுக்கள் வளர்வதற்கு வசதி செய்து கொடுக்​கிறது. மேலும், கட்டிடப் பணிகளில் இருக்கும் நம் கவனம், அந்த இடங்களில் வெப்பத்தைத் தணிக்க மரங்களை நட்டுப் பசுமையைக் கூட்ட வேண்டும் என்கிற சமூக அறம் சார்ந்த பணிகளில் இருப்​ப​தில்லை. இதன் விளைவாக, வெப்பத் தாக்குதல் இப்போது பெருநகரங்​களில் கடுமை​யாகிறது. சூறாவளி போன்று பரவி வந்த டெங்கு, சுனாமி போன்று பரவுவதற்கு இது இடமளிக்​கிறது.
  • ஒரு கொசு, ஒரே நேரத்தில் ஆறு பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. கொசுக்​களின் எண்ணிக்கை அதிகரிக்​கும்போது டெங்கு பாதிப்பும் அதிகரிக்க இது காரணமாகிறது. முன்பெல்லாம் இந்தியா, பாகிஸ்​தான், ஆப்ரிக்க நாடுகள் போன்ற வெப்ப மண்டல நாடுகளில்தான் டெங்கு கொசுக்கள் பரவும். தொடர்ச்​சியான மரபணு மாற்றம் காரணமாக அதிகக் குளிரையும் தாங்கும் சக்தியை இப்போது அவை பெற்று​விட்டன.
  • இந்த ஆண்டின் ஆரம்பத்​திலிருந்தே ஐரோப்​பாவில் குளிர்ப் பிரதேச நாடுகளிலும் டெங்கு கொசுக்கள் பரவிவருவது இந்தத் தகவலை உறுதிப்​படுத்து​கிறது. தமிழகத்தில் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டப் பகுதி​களிலும் டெங்கு பரவுவது இந்தத் தகவலுக்குக் கூடுதல் வலுசேர்க்​கிறது.

காலநிலை மாற்றத்தின் பங்கு!

  • தற்போது கொசுக்களை வளர்த்​தெடுப்​பதில் காலநிலை மாற்றமும் முக்கியப் பங்காற்றுகிறது என்று ‘காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழு’ (Intergovernmental panel on climate change -IPCC) சமீபத்தில் அறிவித்​திருக்​கிறது. ‘நேச்சர் மைக்ரோப​யாலஜி’ (Nature Microbiology) என்னும் ஆய்விதழில் வெளிவந்​துள்ள கட்டுரை இதை உறுதிப்​படுத்து​கிறது. அதன் சாராம்சம் இதுதான்: உலக அளவில் புவிவெப்பம் கூடியிருப்​பதும், வழக்கத்​துக்கும் அதிகமான மழைப்​பொழிவும் கொசுக்​களின் இனப்பெருக்கக் காலத்​தை​யும், ஆயுள் காலத்​தையும் நீட்டித்துள்ளன; கொசுக்கள் பரவும் எல்லைகளையும் கூட்டி​யுள்ளன.
  • இந்த நிலைமை நீடித்தால் 2050இல் உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு ஆதிக்கம் செலுத்​தும். இதுவரை டெங்கு அவ்வளவாகப் பரவாத ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளி​லும்கூட அது தீவிர​மாகப் பரவும். மேலும், காலநிலை மாற்றத்தால் திடீர் வெள்ள ஆபத்து​களும், சூறாவளி​களும், வெப்ப அலைகளும் உலகமெங்கும் அதிகரித்து​வரு​கின்றன. இவை கொசுக்களின் பரவும் வேகத்தைப் பல மடங்கு உயர்த்தி​விடு​கின்றன.
  • வெளிநாட்டுப் பயணங்கள் எளிதாகி​விட்ட இந்தக் காலக்​கட்​டத்​தில், புதிய நாடுகளுக்கு டெங்கு பரவுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். இந்தியாவில் இதுவரை டெங்கு பரவல் மிகவும் குறைவாகக் காணப்பட்ட குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்​களில்கூட இப்போது டெங்கு பரவல் அதிகரித்​திருக்​கிறது என்றால், அதற்குப் புவி வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் காரணம் என்கிறது காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழு.
  • அடுத்து, காலநிலை மாற்றத்தால் புவி வெப்பம் அடையும்போது நிலப் பகுதிகள் வறட்சி அடைவதையும் தடுக்க முடியாது. அப்படியான சூழலில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். மக்கள் தண்ணீரைச் சேமிக்கத் தொடங்​கு​வார்கள். இது கொசுக்​களுக்கு மிகவும் வசதியான இனப்பெருக்க இடமாக மாறும். இது டெங்கு பாதிப்பைப் பரவலாக்​கும். 2018 – 2019 காலத்தில் டெல்லியைச் சுற்றி​யுள்ள 40 பகுதி​களில் கொசுக்கள் பிறப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்​பட்டது.
  • அப்போது ஞெகிழி, உலோகம், கண்ணாடிப் பாத்திரங்​களில் சேமிக்​கப்பட்ட தண்ணீரில் முட்டை​யிடு​வதைவிட மண் பானைத் தண்ணீரில்தான் அதிக அளவில் கொசுக்கள் முட்டை​யிடு​கின்றன என்பது தெரிய​வந்​திருக்​கிறது. நிறைய இந்தியக் கிராமங்​களில் மண் பானைகளில் தண்ணீரைச் சேமிக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்​கிறது. இது கொசுக்​களின் ஆதிக்​கத்​துக்குத் துணைபோகிறது. இந்தியாவில் டெங்கு ஒரு நிலைத்​தொற்றாக (Endemic) இருப்​ப​தற்கு இது ஒரு காரணம் என்கிறது அந்த ஆராய்ச்சி.

கொசுக்​களுடன் ஒரு பனிப்​போர்! 

  • கொசுக்​களுக்கு எதிரான பனிப்போர் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்து​விட்டது. இன்னும் நம்மால் அதை வெல்ல முடிய​வில்லை. நவீன மருத்துவ அறிவியல் கொடுத்த ‘டி.டி.ட்டி’ (D.D.T), ‘டெல்​டா​மெத்​ரின்’ (Deltamethrin) பூச்சி மருந்​துகள், கொசுக்​களின் லார்வாக்​களைத் தின்னும் ‘கேம்பூசா அஃபினிஸ்’ (Gambusia affinis) மீன்கள், கொசுக்​களின் இனவிருத்​திக்குத் தடை போடும் ‘வால்​பேகியா’ (Wolbachia) பாக்டீரி​யாக்கள் என எல்லா முயற்சி​களையும் தற்காலக் கொசுப் படை முறியடித்து​விடு​கிறது.
  • இப்போது காலநிலை மாற்றமும் கொசுக்களை வளர்த்​தெடுக்​கிறது என்னும் தகவல் கொசுப் பரவலின் தீவிரத்தை உணர்த்து​கிறது. கொசுக்​களால் பரவும் நோய்களால் ஏற்கெனவே நாடெங்கும் பொதுச் சுகாதாரத் துறைக்கு நோய்ச்சுமை அதிகரித்​துள்ளது. இச்சூழலில், வழக்கமான கொசு ஒழிப்பு நடவடிக்கைகளோடு காலநிலை மாற்றத்​துக்கும் நாம் முகம் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் கொசுக்கடி நோய்களைக் கட்டுப்​படுத்த முடியும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories