TNPSC Thervupettagam

கொடுமையின் அடித்தளம் மதுப்பழக்கம்!

June 28 , 2019 2010 days 1099 0
  • இளைஞர்கள் போதை விருந்துக்கு அடிமையாகி,  இளம் பெண்களை பாதிப்புக்குள்ளாக்கும் அவல நிலை  பொள்ளாச்சியில் அண்மையில் அரங்கேறியதைக் கண்டு வருந்தாத உள்ளங்கள் எந்த இல்லங்களிலும் இல்லை என்றே கூறலாம். போதையின் விளைவை 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரி முதல்வர் தன் மாணவர்களிடம் சொன்ன குட்டிக் கதை குறிப்பிடத்தக்கது. ஒரு திருடர், கொலைகாரர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர், மதுப்பழக்கம் உடையவர்-இவர்களில் மிகவும் மோசமானவர் யார்? என்ற கேள்விக்கு,  கொலைகாரர் என்று மாணவர்கள் பதிலுரைக்க, அதனை மறுத்த கல்லூரி முதல்வர், மதுப்பழக்கம் உடையவர்தான் மிகவும் மோசமானவர் என்று பதிலளித்தார்.
மதுப்பழக்கம்
  • குடிப்பதற்கு பணம் இல்லாத மதுப்பழக்கம் உடையவர் திருட ஆரம்பித்து திருடனாகிறார். திருடிய பணத்தைக் கொண்டு மது அருந்துகிறார். மது விருந்தின் போதை மயக்கத்தில் பெண்ணை பலாத்காரம் செய்கிறார். அந்தப் பெண் மற்றவர்களிடம் தெரிவித்துவிடுவார் என்ற அச்சத்தில் அந்தப் பெண்ணைக் கொலை செய்கிறார். இந்தக் கதையைக் கேட்ட மாணவர்கள் மதுப்பழக்கம் உடையவர்தான்  மிகவும் மோசமானவர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
  • ஒழுக்கநெறி சார்ந்த கல்வி முறை இன்று கானல் நீராகிவிட்டது என்பது கசப்பான உண்மை. அறிவின் பிறப்பிடம் கல்வி. கல்வி அறியாமை அகற்றும் விளக்கு. அப்போதிருந்த ஆசிரியர்களின் நீதிக் கதைகளின் அற்புதத்தை நாம் உணர முடிந்தது. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு என்றார் திருவள்ளுவர். நாணம் எனும் பெண் மதுப்பழக்கம் உடையவர் முன் நிற்க மாட்டார்.
  • மதுபானம் நம் அறிவை மயக்குகிறது என்று இயம்புகிறது மணிமேகலை. அதாவது, மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் அதாவது, மாலுமி இல்லாத மரக்கலம்போல் நம் வாழ்க்கை நெறி கெட்டு அழியும்.
காரணங்கள்
  • கல்லூரியில் படிக்கும் ஒரு சில செல்வந்தர்களின் மகன்கள் மதுப்பழகத்துக்கு அடிமையாகி படிப்பில் தோல்வியைத் தழுவுகின்றனர்.
  • வாரிசுகளின் தோல்வியை செல்வந்தர்களும் கண்டுகொள்வதில்லை. அவர்களின் வாரிசுகள் வேலைக்குச் செல்லவேண்டிய அவசியமும் இல்லை.
  • மிகப் பெரிய செல்வந்தர்களின் வாரிசுகளுக்கு வேலையில்லை என்ற காரணத்துக்காக பெண் கொடுக்க எவரும் முன்வருவதில்லை. இத்தகைய சூழலில், அவர்கள் இளம் பெண்களுடன் பழகி அவர்களைக் காதலிப்பதுபோல் ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போதைய தலைவர்கள் மதுவின் தீமையை நன்கு உணர்ந்து, மதுவிலக்கை அமல்படுத்தியிருந்தனர்.
  • ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லை. இதனால், மதுப்பழக்கத்துக்கு இளைஞர்கள் எளிதாக அடிமையாகி விடுகின்றனர். மகாத்மா காந்தியும் மதுவிலக்கை வற்புறுத்தினார். ஆங்கிலேயன் செய்த தவறை நாமும் செய்யக்கூடாது என்று உணர்த்தினார் மகாத்மா காந்தி. ஆனால் மதுவிலக்கை அமல்படுத்த அரசு தவறிவிட்டது வருந்தத்தக்கது.
  • சங்க காலத்தில் குடிமக்கள் சில அறப் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குடும்பமும் நாட்டு நலமே குடும்ப நலம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். நல்ல குடும்பத்தை, மக்களை ஈன்று அவர்களை நலமாக வளர்ப்பது தாயின் கடமை என்றார் புலவர் பொன்முடியார். நற்பண்பு, நல்லொழுக்கங்களைப் பயிற்றுவித்து சான்றோர் ஆக்குவது தந்தையின் கடமையாகும் என்றும் கூறியுள்ளார். குடும்பம் என்ற கோயிலின் கோபுரம் தாய். தாயின் அறிவுறுத்தலின்படி ஒழுக்கத்திலிருந்து  தவறக் கூடாது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று உடுமலை நாராயண கவி பாடியுள்ளார்.
  • பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்கள் விடுதலை குறித்து ஆணுக்குப் பெண் நிகர் என்று பாடியுள்ளார் மகாகவி பாரதி. தாய்-தந்தையிடம் ஆலோசிக்காமல் முன்பின் தெரியாத ஆண் இருக்கும் இடத்துக்குச் செல்வதை மகாகவி பாரதி நியாயப்படுத்தவில்லை. ஓர் ஆண் நல்லவரா, கெட்டவரா, எந்த நோக்கத்துக்காக நம்மிடம் பழகுகிறார் என ஆராய்ந்து முடிவு எடுப்பது பெண்களின் கடமையாகும். ஆனால், இனக் கவர்ச்சி காரணமாக எது குறித்தும் சிந்திக்காமல் இன்றைய ஆண்கள், பெண்களில் பெரும்பாலானோர் காதல் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, எத்தகைய சூழ்நிலையிலும் இளைஞர்களும் இளம் பெண்களும் தவறு செய்யக்கூடாது.
வேலைவாய்ப்பு
  • மேலும், படித்து முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதபோது, அவர்களது மன நிலை எப்படியும் வாழலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. மேலும், இன்றைய திரைப்படங்களில் புகை பிடித்தல்-மது அருந்தும் காட்சிகள் திரையிடப்படும்போது, புகை பிடித்தல், மதுப் பழக்கம் உடல் நலனுக்கு தீங்கு என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதால் மட்டும் பலன் இல்லை. மாறாக, புகை பிடித்தல்-மது அருந்தும் காட்சிகளை தணிக்கை குழு மூலம் சமுதாய பொறுப்புணர்ந்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தவிர்ப்பது மிகமிக அவசியம்.
  • எனவே, இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுப்பது அவசியம். இவ்வாறு அரசு செய்யும் நிலையில் பாலியல் கொடுமைகள் தவிர்க்கப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும்.

நன்றி: தினமணி (28-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories