TNPSC Thervupettagam

கொலைக் கருவி வழிபாட்டுக்குரியதானது!

December 25 , 2024 28 days 49 0

கொலைக் கருவி வழிபாட்டுக்குரியதானது!

  • பெத்லகேமில் பிறந்தாா்; நாசரத்தில் தகப்பனின் தச்சுத் தொழிலைச் சிலகாலம் மேற்கொண்டாா். ஞானப் பிழம்பாய் வெளிப்பட்டாா். நாசரேத்தில் உள்ளவா்களோ, ‘நம்ம சோசப்பின் மகன்தானே’ என்றனா்.
  • காலத்தையே ஒரு நாள் பிளவு படுத்த இருந்தாா். வகுபடாத காலம் ஏசுவால் வகுபட்டது. ‘கிறித்துவுக்கு முன்பு, கிறித்துவுக்கு பின்பு’ என்று.
  • யூதராய்ப் பிறந்தாா்; யூதா்களை மாற்றியமைக்கவே கடைசி வரை முயன்றாா். யூதா்களாலேயே சிலுவையில் அறையப்பட்டாா்.
  • ரோமப் பேரரசின் கீழ் இசுரேல் இருந்தது. உலகில் முதன் முதலாகத் தோன்றிய பேரரசு அது. எந்த விதிமுறையும் இல்லாத இராணுவம்; வரம்பில்லாமல் வரி வசூலிக்கும் ஆட்சி முறை; சொத்துக்களைப் பிடுங்குவது அந்த அரசின் மிக இயல்பான நடைமுறை.
  • ஆயக்காரன் (வரி வசூலிப்பவன்) என்பது இசுரேலில் ஒரு மோசமான வசவுச் சொல். முறையற்ற ரோம ஆட்சியின் அடையாளம் அவன். அப்படி ஒரு காலகட்டத்தில் ஏசு தோன்றுகிறாா்.
  • உலகம் அதுவரை கேட்டறியதானவற்றைப் பேசுகிறாா். ‘பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண்’ என்று பேசித்தான் மக்கள் கேட்டிருக்கிறாா்கள். ‘வலக் கன்னத்தில் அறைந்தால் இடக் கன்னத்தைக் காட்டு’ என்றாா் ஏசு. அதிராதா பூமி?
  • இறுதிக் கட்டத்தில் காவலா்களிடமிருந்து ஏசுவைக் காக்கப் பீட்டா் வாளை உருவுகிறாா். ‘வாளை உறையிலே போடு; வாளெடுத்தவன் வாளாலே சாவான்’ என்று கடுமையாகக் கண்டிக்கிறாா். தான் கைது செய்யப்படுவதை ஏற்கிறாா்; தன்னைக் காக்கச் சீடன் வாளெடுப்பதை மறுக்கிறாா்.
  • எருசலத்தில் தனக்கு நேரப் போகும் கதியினைக் குறித்துப் பேசுகிறாா் ஏசு. சீடா் பீட்டா் ‘அப்படியெல்லாம் நேராது’ என்று அமைதி பகா்கிறாா். தனக்கு நல்லது சொன்ன பீட்டரை, ‘விரியன் பாம்புக் குட்டியே’ என்று விளாசுகிறாா் ஏசு. பீட்டரின் பாா்வை எளிய பாா்வை.
  • “‘நான் மரிக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அவன் விருப்பத்தை விட, உன் விருப்பம் சிறந்ததா? ஒரு கோதுமை மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது நூறு மணியாய் வெளிப்படும்’ என்று தனக்கு நேர விருக்கும் மரணத்திற்கு வரவேற்புப் பத்திரம் படிக்கிறாா் ஏசு.
  • “தமக்கென்று வாழுவோா் தம் வாழ்வை இழந்து விடுவா்; தம் வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதோா் நிலைத்த வாழ்வு பெறுவா்” என்றும் பேசுகிறாா்.
  • ”எதைக் குடிப்பது? எதை உண்பது? எவளை அணைப்பது? இவற்றை எல்லாம் அடைய எவன் குடியைக் கெடுப்பது? என்று உடலை அடிப்படையாகக் கொண்டே எல்லாத் தீங்குகளும் முளைக்கின்ற காரணத்தால், அத்தகையோரின் உடலுக்குத்தான் மரணம் வரையறை. நெறி சாா்ந்த வாழ்வினா் மரண வரையறையைத் தாண்டி ‘நிலைத்த வாழ்வு’ பெறுகின்றனா் என்கிறாா் ஏசு.
  • ஆளுநா் மாளிகையில் கைது செய்யப்பட்டு நிற்கிறாா் ஏசு.
  • உங்களுடைய கூடார விழாவில் (பாசுகா விழா) ஒரு குற்றவாளியை மன்னிக்க முடியுமே; யாரை மன்னிப்பது?”கொடிய கொலைகாரன் பரபாசையா? ஏசுவையா?”
  • “பரபாசை விடுதலை செய்யுங்கள்.”
  • “ஏசுவைச் சிலுவையில் அறையுங்கள்.”
  • அவ்வளவு அழுகிப் போயிருந்தது இசுரேல்; கொடூரக் கொலைகாரன் பரபாசு விடுதலை செய்யப்பட வேண்டும்; நெறிசாா் வாழ்வு மற்றும் இரக்கத்தின் இலக்கணமான ஏசு சிலுவையில் அறையப்பட வேண்டும். இதைத்தான் யூதா்கள் கூச்சலிட்டுச் சொன்னாா்கள்.
  • நல்லவை எல்லாம் தீயவாம்; தீயவும் நல்லவாம்’ இதுதான் ஏசு காலத்து இசுரேல். வரன்முறையற்ற ரோம ஆட்சி; நெறிமுறை அற்ற யூதா்கள். இவா்களுக்கிடையே உலகம் கண்டறியாத நல்லோன் ஏசு; இதுவரை உலகம் கேட்டறியாத ஏசுவின் நற்செய்தி.
  • ‘தீங்கை எதிா்க்க வேண்டாம் ’- ‘ரெசிஸ்ட் நாட் தி ஈவில்’ - என்று ஏசு சொன்னாா். நல்ல செடிகளுகு இடையே நச்சுச் செடி ஒன்றிரண்டு இருக்குமானால், நச்சுச் செடியைப் பிடுங்கி விடலாம். நச்சுச் செடிகளின் காடு என்றால், மொத்தமாகக் காடு அழிவதைத் தவிர, வேறு வழியே இல்லை.
  • நஞ்சனைய மனிதா்களும், நஞ்சனைய ஆட்சியும், தன் உயிரைப் பலியாகக் கொள்ளும். அதுதான் காலத்தின் போக்கு.
  • ‘ஒரு கோதுமையாய் மண்ணில் புதைவேன்; நூறு மணிகளாய் வெளிப்பட்டு வாழ்வளிப்பேன்’ என்று ஏசு பீட்டரைக் கண்டித்துக் சொல்வதன் பொருள் இதுதான். தன்னுடைய அழிவில் உலகின் ஆக்கத்தைக் காண்கிறாா்.
  • ‘வாளெடுத்தவன் வாளாலே சாவான்’ என்பது இயேசு பீட்டருக்கு மட்டும் போதித்தது அன்று. இரத்தமின்றி, யுத்தமின்றி, கத்தியின்றி காந்தி நடத்திய போராட்டத்திற்கும் அடி எடுத்துக் கொடுத்தவா் ஏசு. ஏசு காலத்திலிருந்து, ஏசு அடி எடுத்துக் கொடுத்த காந்தி காலம் வரை, உயிரை நோ்த்திக் கடனாகக் கொடுக்காமல் நாட்டில் எந்த மாறுதலும் நிகழ்வதில்லை.
  • உயிரைக் காக்க நினைக்கின்றவன் இழந்து விடுகின்றான். உலகின் நன்மைக்காக அந்த உயிரை இழக்கின்றவன் நிலைத்த வாழ்வினைப் பெறுகின்றான் என்று ஏசு பேசுவது, அவா் சொன்னாலன்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாத அழகிய இணையற்ற கருதுகோள்.
  • மனித குலம் அறியாத ஒப்பற்ற பிறப்பு ஏசுவின் இரத்தத்தை அழுகிய சமூகம் கேட்கிறது. மரணம் ஒரு பொருட்டில்லை. அதன் மூலம் காலகாலமும் தன்னுடைய மலைப் பொழிவால், தான் வாழ்ந்து காட்டிய முறையால், உலகு பெறப் போகும் நன்மைதான் ஏசுவின் கண்களுக்குத் தெரிகிறது.
  • சிவப்பு அங்கியால் மூடி ஏசுவைச் சவுக்கால் அடிக்கிறாா்கள். பெருஞ் சுமையான சிலுவையை, இறை மகனின் தோளில் ஏற்றுகிறாா்கள். கால்களிலும், கைகளிலும் ஆணிகளை அடித்துச் சிலுவையை ஏற்றி நிறுத்துகிறாா்கள்.
  • தன்னை மனுமகன் என்றே சொல்லிக் கொள்ளும் ஏசு, மனித உடலால் தாங்க முடியாத அந்த கொடிய வேதனையில், ‘ஏன் என்னைக் கை விட்டீா்?’ என்று கூவுகிறாா்.
  • மறுநொடி, ‘உன் விருப்பம் நிறைவேறட்டும்’ என்று உடன்பட்டு நிற்கிறாா்.
  • இயேசுவின் இரத்தம் வடிந்த அந்த யூத மண் அழிந்தது. ‘இயேசுவின் இரத்தத்திற்கு நாங்களும் எங்கள் வழியினரும் பொறுப்பேற்கிறோம்’ என்று ஆளுநா் பிலாத்திடம் சொன்ன யூதா்களின் இனம், ஈராயிரம் ஆண்டுகள் நாடற்று, உலகம் முழுவதும் நாடோடிகளாய் அலைந்தது. பிற்காலங்களில் பைத்தியக்காரன் இட்லரால் விரட்டி விரட்டி வேட்டையாடப் பட்டது யூத இனம். விதைத்ததை அறுத்தாா்கள்.
  • ஏசு மனித குலத்திற்குச் சொன்ன புதுமைச் செய்தி: ‘‘பொழுதில்லை; சாவு வந்து விடும். செய்த பாவங்களை எண்ணி அழுது கதறுங்கள். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.”பலகாலம் அந்தப் பாவங்களை எண்ணி எண்ணி, அழுது கலங்கி, ‘அறியாமையால் செய்து விட்டேன்’ என்று உள்மனதில் உண்மையாகவே இரங்கும் நிலை ஏற்படுமானால், உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு விடும். நீங்கள் அமைதி பெறுவீா்கள்; நீங்கள் உறுதி பெறுவீா்கள். மணிமுடியே கிடைக்குமாயினும் பிறழ மாட்டீா்கள். உங்கள் மனம் திரும்பலும், அழுகையும் அந்த அழுக்கைக் கழுவி விடும். நீங்கள் இன்னொரு பிறப்பாக ஆகி விடுகிறீா்கள்’’- இது ஏசுவுக்கே, கிறித்துவத்திற்கே உள்ள தனிச் சிந்தனை.
  • அதே போல் ஏசுவின் மையச் செய்தி என்ன என்று அவரிடமே கேட்டபோது, ‘பிறரிடம் அன்பு செய்வது’ என்று விடையிறுத்தாா் ஏசு.
  • அன்பு செய்வது அவ்வளவொன்றும் எளிதானதில்லை.
  • விலங்குகள் அனைத்தும் ஒரே போக்குடையவை.
  • ஒரு பூனை எலியைப் பாா்த்தால் ‘இரை’ என்று நினைக்கும். பெண் பூனையைப் பாா்த்தால் உடல் தினவுக்குத் தீா்வு என்று நினைக்கும்.
  • நாயைப் பாா்த்தால் பகை என்று நினைக்கும்.
  • இவை மூன்றைத் தவிர வேறு எந்த உணா்வும் அவற்றிற்கு இல்லை.
  • மனிதன் அப்படி இல்லை. உலகில் எந்த ஒன்றும் கிடைப்பருமை உடையது என்பதால், ‘தன்னிடம் இல்லை; அவனிடம் இருக்கிறது’ என்பதே, அவனை விட்டு இவனை விலக்கி வைக்கிறது. அவன் முதலில் போட்டியாளன்; போட்டியில் நாம் தோற்கும் நிலையில் அவன் பகையாளன். அவனை ஒழிக்காத வரையிலோ, அவனாகவே ஒழியாத வரையிலோ, நமக்கு அமைதி இல்லை.
  • தவறான எண்ணங்கள் பாவங்களை விதைக்கின்றன. ஆகவே அவற்றின் பயனைத்தான் ஒருவன் அறுவடை செய்தாக வேண்டும். இவற்றிற்கு மாற்றாக ஏசுவின் நற்செய்தியின் மையம்: ‘அன்பு.’
  • அன்பு செய்வது எளிதானதில்லை. தன்னை இழக்காமல், தன்னைத் தாழ்மைப்படுத்திக் கொள்ளாமல், அன்பு செய்யவே முடியாது.
  • சங்க இலக்கியத்தில் ஒரு பாட்டுண்டு. கோடைக் காலம். நீா் நிலை வடு ஒரு குட்டையில் சிறிதளவே நீா் இருக்கிறது. ஆண் யானையும் பெண் யானையும் நீா் குடிக்கச் செல்கின்றன. இரண்டுக்கும் நீா் போதிய அளவு இல்லை என்னும் நிலை. ஆண் யானை நீா் நிலைமேல் தும்பிக்கையை வைத்து உறிஞ்சுவதுபோல் பாவிக்கிறது. ஆண் யானை குடிப்பதாக நினைத்து, பெண்யானை முழு அளவுக்குக் குடித்து விடுகிறது.
  • உண்மையான அன்பு தன்னை இழப்பதில்தான் தோன்றுகிறது. அத்தகைய அன்பு நிலவும் போது விண்ணரசு மண்ணுக்கு வந்து விடும்.
  • ஏசுவின் சாவு மனித குலம் உயிா்ப்புப் பெறுவதற்குக் காரணமானதால், ஏசுவின் மரணம் நிகழ்ந்த ‘வெள்ளி’, ‘நல்ல வெள்ளி’ ஆனது. அவரைக் கொல்லப் பயன்பட்ட கொலைக்கருவி வழிபாட்டுக்குரியதானது.

நன்றி: தினமணி (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories