- சரிந்துவரும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் விதமாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் பணமாக்கும் திட்டமானது கொள்கை அளவில் வரவேற்கத்தக்கதாகவே தோன்றுகிறது. “சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை என்பதன் நோக்கம் அவற்றை விற்பது இல்லை. சொத்துகளின் உரிமை அனைத்தும் அரசிடமே இருக்கும். அதேசமயம், சொத்துகளைத் திறம்படப் பயன்படுத்தி நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- இதன் மூலம் ரூ.6 லட்சம் கோடியைத் திரட்ட முடியும். இப்படித் திரட்டப்படும் நிதியின் வாயிலாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும்” என்று சொல்லியிருக்கிறார் அவர். இப்படிச் சொல்லப்பட்டிருப்பது அப்படியே செயலாற்றப்படுமானால் அதில் குறை சொல்ல ஏதும் இல்லை.
- ஏனென்றால், இங்கே ‘சொத்துகள்’ என்று குறிப்பிடப்படுவது அரசின் நிலங்களைக் குறிக்கவில்லை; அதேபோல, அரசு ஏற்கெனவே முழு லாபத்தில் இயங்கிவரும் நிறுவனங்களையும் குறிக்கவில்லை. பயன்பாட்டில் இல்லாத அல்லது போதிய வருமானம் ஈட்டாத அதேசமயம் அவற்றைப் பயன்படுத்தி மேலும் லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்புள்ள விஷயங்களையே சொத்துகள் எனும் சொல் குறிக்கிறது. இதை நிதியமைச்சர் தெளிவுபடுத்துகிறார். சொத்துகளைக் குறிக்கையில், ‘பிரௌன்ஃபீல்ட்’ எனும் சொல்லை அவர் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார். அப்படியானால், இது நல்ல விஷயம்தான்.
- சென்னை மாநகரிலுள்ள பறக்கும் ரயில் நிலையங்களை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பல கோடி முதலீட்டில் பல அடுக்குக் கடைகளுடன் நகரின் முக்கியமான இடங்களில் கட்டப்பட்ட நிலையங்கள் இவை. இந்த நிலையங்களிலுள்ள கடைகள் கால் நூற்றாண்டு காலமாக மூடியே கிடக்கின்றன. அரசால் முறையாக நிர்வகிக்கப்படாததும், கட்டுபடியாகக்கூடிய தொகையில் இந்தக் கடைகளின் வாடகை நிர்ணயிக்கப்படாததுமே காரணம். இதற்காக எந்த அதிகாரியைப் பொறுப்பாக்குவது?
- இப்படிப் பயன்படுத்தப்படாத, பயன்படுத்தக்கூடிய வளங்கள் அரசிடம் நிறையவே இருக்கின்றன. தேர்ந்த நிர்வாகிகளைக் கொண்ட ஓர் அரசு இதற்கென்று தனிக் கொள்கையை உருவாக்கி சிறந்த நிர்வாகத்தின் கீழ் அதுவே இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். புதிய நிறுவனங்கள், நிறைய வேலைவாய்ப்புகளுடன் இதில் கிடைக்கும் கூடுதல் வருவாயும் முழுமையாக அரசுக்குக் கிடைக்கும்.
- இந்தியச் சூழலில் இதையெல்லாம் பேசுவது அபத்தம். நன்கு நிர்வகிக்கப்படும் நிறுவனங்களையே விற்கும் ஆட்சியாளர்களின் காலத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட முடியாது. மேலும், அரசு - தனியார் கூட்டு சேவைக்கு நாம் மாறி பல காலம் ஆகிவிட்டது. ஒட்டுமொத்த சூழலோடு நடைமுறை யதார்த்தங்களை ஒப்பிட்டு விஷயங்களை அணுகுவதே சிறந்த வழிமுறை.
- இந்த விஷயத்தில் மாநில அரசுகளையும் இணைக்க முற்பட்டிருப்பதும் ஆக்கபூர்வமானது. மாநில அரசுகளுக்குத் தங்களுடைய சொத்துகளை இப்படிப் பணமயமாக்க முன்வந்தால், அந்தச் சொத்து எவ்வளவு குத்தகைத் தொகையைப் பெறுகிறதோ, அதற்கு 33% அளவுக்கு ஊக்கத் தொகையையும் ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது, மாநில அரசு தனக்குச் சொந்தமான ஒரு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை ரூ.1 கோடி குத்தகைக்கு விட்டால், ஊக்கத் தொகையும் சேர்ந்து ரூ.1.33 கோடி மதிப்பை அது பெறும். மாநில அரசுகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தைக் குறை கூறியிருக்கின்றன. அவர்களுடைய குற்றச்சாட்டுகளிலும் நியாயமான அக்கறைகள் இல்லாமல் இல்லை. “இத்திட்டத்தை சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் விவாதிக்கவில்லை; எந்த ஒரு திட்டமிட்ட அளவுகோலும் இல்லாமல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி. இது நியாயமான குற்றச்சாட்டு.
- எந்த விஷயத்தையுமே மாற்றுத் தரப்புகளுடன் விவாதிக்காமல் செயலுக்குக் கொண்டுவருவதை இந்த அரசு ஒரு கலாச்சாரமாகவே பின்பற்றுவது கண்டனத்துக்குரியது. ஓர் உதாரணத்துக்கு, மாநில அரசுகளையும் இத்திட்டத்தில் பங்காளிகளாகச் சேர்த்துள்ளது ஒன்றிய அரசு. ஏன் இது தொடர்பில் அவர்களுடன் விவாதித்திருக்கக் கூடாது? “பாஜகவுக்கு நெருக்கமான தொழில் நிறுவனங்களுக்கே இது தொடர்பான எல்லா ஒப்பந்தங்களும் கிடைக்கலாம்; விளைவாக, அவர்களுடைய ஏகபோகம் உருவாகும்” என்கிற குற்றச்சாட்டையும்கூட எதிர்க்கட்சிகளின் வெறும் அடையாள அரசியல் குற்றச்சாட்டு என்று ஒதுக்கிவிட முடியாது.
- இந்த விஷயங்களையெல்லாம் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்துகையில் அனைத்துத் தரப்புகளையும் உள்ளிணைக்க வேண்டும். தொடர் கண்காணிப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும். முக்கியமாக, நாட்டின் சொத்துகள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, நாட்டின் சொத்துகளாகவே நீடிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்!
நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)