- மலைகளால் சூழப்பட்ட கேரளத்தில் கற்கள், செயற்கை மணலுக்கான மூலப்பொருள்கள் அதிக அளவு இருந்தும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மலைகளை உடைக்க கேரள அரசு தடை விதித்துள்ளது. இதைப் பயன்படுத்தி சில சுயநல சக்திகள் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து கனிமவளங்களைச் சுரண்டி கேரளத்துக்கு கொண்டு சென்று சட்டவிரோதமாக அதிக வருவாய் ஈட்டுகின்றன.
- இது போன்ற சட்டவிரோத செயல்கள் இப்போதுதான் நடைபெறுகின்றன என்பதல்ல, வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதைத் தடுக்க, மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளை மலைதள பாதுகாப்பு குழுமத்தின் வரம்புக்கு உட்பட்டது என தமிழக அரசு கடந்த 1990-ஆம் ஆண்டிலேயே அறிவித்தது.
- கடந்த 2003-ஆம் ஆண்டில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு மலைப் பகுதிக்கு மிக அருகிலுள்ள பகுதிகளை மட்டும் மலைதள பாதுகாப்பு பகுதியாக குறிப்பிட்டுவிட்டு, மற்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த 2017-இல் மத்திய அரசால் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள, கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு ஏராளமான நீரோடைகளுடன், முப்போகம் விளை யக் கூடிய வளமான மண்ணைக் கொண்டிருந்தது. இந்த மண் செங்கல் சூளைகளுக்கு ஏற்றது என்பதால் சிலர் குடிசைத் தொழி லைப்போல செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- கேரளத்தில் ஓடு தயாரிக்கவும், இதற்காக மண் வளத்தைச் சுரண்டவும் 2001-ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. இ னால் கேரளத்தையொட்டியுள்ள தமிழகத்தின் தடாகம் பகுதியில் கனிம வளம் எடுத்து கடத்துவது அதிகரித்தது. மேலும், கேரளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நவீன இயந்திரங்களைக் கொண்டு தடா கம் பகுதியில் செங்கல் சூளை தொழில் சூடுபிடித்தது.
- ஏராளமான செங்கல் சூளைகள் உருவாகி, பல மீட்டர் ஆழத்துக்கு மண் வளம் தோண்டப்பட்டது. தடாகம் பள்ளத்தாக்கு பகுதியானது யானைகள் வழித்தடத்தில் இருக்கும் நிலையில், அதிகப் படியான கனிமவளக் கொள்ளை நடவடிக்கைகளால் யானைகள் வழிமாறி ஊருக்குள் புகுந்து மனித - விலங்கு மோதல்கள் அதி கரித்தன.
- கோவை வனக் கோட்டத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை 243 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்; 198 யானைகள் பலியாகி உள்ளன. வனத்துக்கும் வன விலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதைப்போல, தடாகம் சுற்றுப்பகுதி களில் உள்ள பொதுமக்களுக்கு செங்கல் சூளைகளால் அதிகப்படி யான மாசு காரணமாக சுவாசப் பிரச்னைகள், புற்றுநோய் போன் றவை அதிகரித்தன. மேலும், தூசி படிவதாலும், புகை காரணமாக வும் வேளாண்மை அடியோடு பாதிக்கப்பட்டது.
- பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்களின் சுமார் 30 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் கடந்த 6.1.2021-இல்தான் தற்காலிகத் தீர்வாக, 177 செங்கல் சூளைகளை மூடவும், அவற்றுக்கான மின் இணைப்புகளைத் துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.
- தடாகம் செங்கல் சூளை விவகாரத்தை தானே முன்வந்து விசாரித்துவரும் பசுமைத் தீர்ப்பாயமும், இதுவரை நடைபெற்ற கனிமக் கொள்ளைக்காக கோடிக்கணக்கான ரூபாயை சூளை உரிமையாளர் களிடம் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தலையீடு காரணமாக, தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் தற்போது தொண்டாமுத்தூர், மதுக்கரை சுற்றுவட்டாரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன.
- கோவை மாவட்டத்தில் மொத்தம் 329 சட்ட விரோத செங்கல் குளைகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் 5 வருவாய் கிராமங்களில் 177 சட்ட விரோத சூளைகளும், தொண்டாமுத்தூர், காரமடை, கோவனூர், மதுக்கரை சுற்றுவட்டாரங்களில் 152 சட்ட விரோத செங்கல் சூளைகளும் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதுபோன்றே, கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கோளத்துக்கு கடத்தப்படுகின்றன. பாறைகளை வெட்டி எடுக்க அனுமதி பெற்று அதைவிட அதிக அளவில் வெட்டி எடுப்பது. லாரிகளில் எடுத்துச் செல்ல ஒரு முறை அனுமதி பெற்று பல முறை எடுத்துச் செல்வது. குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் ஏற்றிச் செல்வது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
- கனிம வள கடத்தலுக்கு முட்டுக்கட்டை போட தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனிமங்களை எடுக்க உரிமம் அளிக்கப்பட்ட குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்க ளின் அளவு ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்கள்) மூலமாக கண் காணிக்கப்படுகிறது. எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தேனி ஆகியவற்றில் திடீர் ஆய்வு நடத்த சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஏப்ரல் முதல் ஜூன் 25-ஆம் தேதி வரையிலான காலத்தில், கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 431 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.1.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக கனிமங்களை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 39 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
- தமிழகத்தில் கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
நன்றி: தினமணி (29 – 06 – 2023)