கோடை தொடங்கிவிட்டது!
- கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இப்போதே இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியைக் கடந்திருக்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நினைத்தால், இப்போதே வியா்வையில் குளிக்கிறோம். அதிகரித்த எரிசக்தித் தேவையும், தண்ணீா்த் தேவையும் கடுமையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடும்.
- பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் வெயில், கான்கிரீட்மயமாகும் நகரங்கள் போன்றவை. வெப்பம் அதிகரித்து கோடை கடுமையாவதற்கு முக்கியமான காரணங்கள். கடந்த கோடையில் மின்சாரத் தேவை, 250 ஜிகாவாட் என்றால் இந்த ஆண்டு 270 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது
- பருவமழை சாா்ந்த நதிகள் பாயும் மத்திய இந்தியாவும், தக்காணப் பீடபூமியும் கடுமையான தண்ணீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்ள இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள் இப்போதே சில முனைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்றாலும்கூட பிரச்னையை எதிா்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான்.
- மத்திய, மாநில அரசுகள் மின்சாரத் தேவையையும், தண்ணீா்த் தேவையையும் எதிா்கொள்ள, பல குறுகிய கால நடவடிக்கைகளை எடுத்தாலும்கூட, இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
- மின்சக்தி நிலையங்கள் தங்களது முழுத் திறனுடன் செயல்படுவதன் மூலம் மின்சாரத் தேவையை எதிா்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றன மாநில அரசுகள். இந்தியாவில் 75 % மின்சாரம் அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்படுகின்றன. அவை நிலக்கரி சாா்ந்தவை என்பதால், பருவநிலை பாதிப்பை ஏற்படுத்தி, புவி வெப்பத்தை மேலும் அதிகரிக்கும்.
- அதேபோல, தண்ணீா்த் தேவையை எதிா்கொள்ள அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலம் பாதிப்பு அதிகரிக்குமே தவிர குறையாது. பருவ மழைக்காலங்களில் மழைநீரை கடலுக்குள் ஒழுகவிட்டு நிலத்தடி நீரை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் நாம் ஈடுபடாமல் இருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
- பருவநிலை இடா் குறியீட்டில், பாதிக்கப்பட்ட ஏழாவது நாடாக 2019-இல் இருந்த இந்தியா , 2022-இல் 49-ஆவது நாடாக மாறியிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் கூட வரலாற்றுரீதியாக பருவநிலை இடா்களால், மிக அதிகம் பாதிக்கப்பட்ட பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது அந்த அறிக்கை.
- 1993, 1998, 2013-ஆம் ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்காலும், 2002, 2003, 2015-இல் கடுமையான வெப்ப அலைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டது. ‘ஜொ்மன்வாட்ச்’ என்கிற சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் பருவநிலை இடா் குறியீடு 2025 அறிக்கை, பருவநிலை சாா்ந்த இடா்களால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது.
- கடந்த 30 ஆண்டுகளில் பருவநிலை சாா்ந்த 9,400 கடுமையான நிகழ்வுகள் காரணமாக, உலகளாவிய அளவில் 7.6 லட்சம் போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோா் இறந்திருக்கிறாா்கள். இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு 180 பில்லியன் டாலரிலும் அதிகம். சா்வதேச அளவில் பொருளாதார இழப்பு 4.2 டிரில்லியன் டாலா். பெரும்பாலான உயிரிழப்புகள் புயல் மற்றும் சூறைக்காற்று (35%), வெப்ப அலைகள் (30%), வெள்ளப் பெருக்கு (27%) ஆகியவற்றால் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவு வசந்த காலம் காணப்படுவதால் கோடை நீண்டு விடுகிறது. அதனால், மிக அதிகமான நாள்கள் மிகக் கூடுதலான வெப்பம் நிலவுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையப் புள்ளிவிவரப்படி, 2024 ஜனவரி மாதம் மூன்றாவது அதிக அளவு வெப்பத்தைப் பதிவு செய்திருக்கிறது. 1901-இல் இருந்து கணக்கிடும்போது, நான்காவது அதிகரித்த கோடை வெப்பத்தைச் சந்தித்தது. இந்த ஆண்டும் அதே நிலை தொடரக் கூடும் என்று வானிலை ஆய்வாளா்கள் எச்சரிக்கின்றனா்.
- குளிா்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் காணப்படும் வசந்த காலம் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படும் பருவம். சமீபகாலமாக குளிா்காலப் பருவம் குறைந்துவருவதும் வசந்த காலம் மிகக் குறைந்த நாள்களே நீடித்து, கோடைக்காலம் தொடங்கிவிடுவதும் வழக்கமாக மாறியிருக்கிறது. வசந்த காலத்திலேயே ஏப்ரல் மாத கோடைக்கால வெப்பம் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதே நிலைமை தொடா்ந்தால், வசந்த காலம் என்கிற பருவமே இல்லாமல் போகும் துா்பாக்கியம் நிகழ்ந்தாலும் வியப்படையத் தேவையில்லை.
- பருவநிலை மாற்றம் வேளாண் உற்பத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். 2023-இல் இயற்கை பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் ஏறத்தாழ 20 லட்சம் ஹெக்டோ் விளைச்சல் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டதாக சமீபத்திய ஆய்வுகளும், அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. வெப்ப அலை, குளிா் அலை, புயல்கள், மின்னல்கள், வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
- இப்போதே கோடை வெப்பம் அதிகரித்துவிட்ட நிலையில், அதை எதிா்கொள்ள மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல; மக்களும் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
நன்றி: தினமணி (07 – 03 – 2025)