- புவி வெப்பமடைதல் மிக வேகமாக நிகழ்ந்துகொண் டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவ்வாறான சூழலில் - குறிப்பாகக் கோடைக்காலத்தில் நம் உடல் நிலை சார்ந்து ஆரோக்கியமான வழிமுறை களைப் பின்பற்றுவது அவசியம்.
- உடலின் வெப்பம் அதிகரிக்கவோ குறையவோ அக, புறக் காரணிகள் செயல்படுகின்றன. மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். இந்த வெப்ப நிலையில் தான் உடலில் உள்ள எல்லா உயிர் வேதியியல் இயக்கங்களும் சீராக நடைபெறும். இதில் 0.5 டிகிரி கூடுத லாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
மூளை இடும் உத்தரவு
- நமது உடலின் வெப்பநிலையைத் தொடர்ந்து பராமரிக்கவும் முறைப் படுத்தவும் மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் என்கிற பகுதி பொறுப்பு வகிக்கிறது. உடலில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள (குறிப்பாகத் தோல், ரத்த நாளங்களில் உள்ள) சென்சார்கள் மூலம் தட்ப வெப்பம் உணரப்பட்டு நரம்புகள் வழியே தகவல்கள் ஹைபோதலாமஸ் பகுதிக்குக் கடத்தப்படுகின்றன.
- உடல் வெப்பம் கூடுகிறதா, குறைகிறதா என்பதைப் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் ஆராய்ந்து, ஹைபோதலாமஸ் போர்க்கால அடிப்படையில் பல்வேறு உறுப்பு களுக்கும் உத்தரவு பிறப்பிக்கும்.உதாரணமாகத் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிக்கும் மூளையில் உள்ள ஹைபோதலாமஸுக்குமான உரையாடல் இவ்வாறு இருக்கும்.
ஹைபோதலாமஸ்
- உடல் சூடு அதிகரிக்கிறது, ஸ்டார்ட் ஆக்ஷன். வியர்வையை வெளியேற்றுங்கள்.
வியர்வைச் சுரப்பிகள்
- வியர்வை வெளியேறிக்கொண்டிருக்கிறது.
- அதேநேரத்தில் ஹைபோதலாமஸ் ரத்த நாளங்களுக்கு வேறு ஓர் உத்தரவைப் பிறப்பிக்கும்: ‘சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் சற்றே விரிவடைந்து தோலுக்கு அதிக ரத்தம் பாய்ச்சுங்கள்.’
- உத்தரவுகள் மில்லி விநாடிகளில் நிறைவேற்றப்படும். உடலின் வெப்பம் சமநிலை அடைந்தவுடன் உத்தரவு நிறுத்தப்படும்.
சமநிலை வேண்டும்
- ஒரு சந்தர்ப்பத்தில் வெப்பத்துக்கான காரணி (உதாரணமாகச் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து வேலை செய்வது) நீடித்துக்கொண்டே இருக்கும்போது, ஹைபோதலாமஸ் அதைக் குறைக்க உத்தரவு பிறப்பித்துக்கொண்டே இருக்கும். வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும்.
- வியர்வை என்பது நீரும் எலெக்ட்ரோலைட்களும் உள்ளடங்கிய உயிர்வேதியியல் திரவம். எதுவும் உண்ணாமல், பருகாமல் வியர்வை வெளியேறிக் கொண்டிருந் தால் ஒருகட்டத்தில் உடல் சோர்வடையத் தொடங்கும். எலெக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மையால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் குன்றத் தொடங்கும். திரவங் களுக்காக உடல் ஏங்கும்.
- நீர் ஆகாரங்கள் பருகி இந்த உடல் தேவையைப் பூர்த்தி செய்தால், மீண்டும் உடல் சீராக இயங்கத் தொடங்கும். உடலின் வெப்பம் சமநிலை அடையும். ஒருவேளை இந்த நீர்த் தேவை பூர்த்தியாகாவிட்டால் எண்ணெய் இல்லாமல் ஓடும் இன்ஜின் எவ்வாறு நின்றுவிடுமோ, அவ்வாறு உடலின் செயல்பாடுகள் முடங்கிவிடும்.
- ஹைபோதலாமஸ் ஓர் எரிந்த ஸ்விட்சைப் போல் செயலிழந்து நிற்கும். உடல் வெப்பம் கட்டுப்பாடின்றி அதிகரித்துக்கொண்டே இருக்கும். நீர், எலெக்ட்ரோலைட்கள் கலவையை உடலுக்குள் செலுத்தாவிட்டால் மரணம்கூட நேரலாம்.
மூன்று படிநிலைகள்
- நேரடியாக வெப்பத்தினால், குறிப்பாகச் சூரிய வெப்பத்தால் உடலில் ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு அறிகுறிகள் அடிப்படையில் மூன்றுபடிநிலைகளாகப் பெயரிடப்பட்டுள்ளன. அவை முறையே உஷ்ண பிடிப்புகள் (Heat Cramps), வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion) மற்றும் வெப்ப மயக்கம் (Heat Stroke) என்றழைக்கப்படும்.
- இந்த வகை களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆரம்பத்தில் அதிக தாகம், அதிக வியர்வை, கை, கால் வலி மற்றும் வயிற்று வலி. படபடப்பு, லேசான மயக்கம் ஆகியவை இருக்கும்.
- இதற்குரிய சிகிச்சையை அளிக்காவிட்டால் இந்த அறிகுறிகள் மேலும் அதிகமாகி, ஒருகட்டத்தில் உடலின் வெப்பம் மிகவும் அதிகரித்துத் தோல் காய்ந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டுத் தன்னுணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.
எவ்வாறு தவிர்ப்பது
- அடுத்த மூன்று மாதங்களுக்கு மதிய வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். காலை வெயில் இதமாகவும் மதிய வெயில் கடுமையாகவும் இருக்கும். ரத்த அழுத்தம், இதய பலவீனத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் வெயில் குறையும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
- இறுக்கம் இல்லாத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகல் நேரத்தில் அதிகமாக நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும். தண்ணீர் மட்டுமே பருகுவது போதுமானதாக இருக்காது. மோர், இளநீர், பழச்சாறுகள் ஆகியவற்றைப் பருகலாம்.
- அதேபோல் நீர்ப் பழங்களான வெள்ளரி, தர்பூசணி மற்றும் நீர்க் காய்களான சுரைக்காய், வெண்பூசணி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பதப்படுத்திய குளிர்பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சங்க கால மக்கள் முந்நீர் என்று ஒரு பானத்தைப் பருகியிருக்கின்றனர். பதநீரும் கரும்புச் சாரும் இளநீரும் சேர்ந்ததுதான் இந்த முந்நீர் என்கிறது புறநானுறு. இதை நாமும் பின்பற்றலாம்.
- கோடையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து மிரட்டிக்கொண்டிருக்கிறது. அதை அலட்சியம் செய் யாமல் எளிய வழிமுறைகளில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 03 – 2024)