TNPSC Thervupettagam

கோயில் நிர்வாகம் வேறு கல்லூரி நிர்வாகம் வேறு

October 19 , 2021 1013 days 593 0
  • தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையால் ஏற்கெனவே ஐந்து கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும் நடத்தப்பட்டுவரும் நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மேலும் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.
  • அத்தகைய அறிவிப்புகள் உடனடியாகச் செயல்வடிவமும் பெறத் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
  • முதற்கட்டமாக, சென்னை கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தினராக இருக்க வேண்டும் என்ற விதியானது கடுமையான ஆட்சேபங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.
  • இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டாலும் கல்லூரி நிர்வாகத்தில் இந்திய அரசமைப்பின் மதச்சார்பின்மை கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவ்வாறு பின்பற்றப்படவில்லை என்றால், அது அரசமைப்புக்கு விரோதமானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
  • இந்த விமர்சனங்களை மறுத்துப் பதிலளித்துள்ள அறநிலையத் துறை அமைச்சர், 1959-ம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் படியே கல்லூரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். தனது விளக்கத்துக்கு ஆதாரமாக அவர் அச்சட்டத்தின் பிரிவு 10-ஐ மேற்கோள் காட்டியுள்ளார்.
  • தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டத்தின் மேற்கண்ட பிரிவின்படி, அறநிலையத் துறையின் ஆணையாளர் தொடங்கி அத்துறையில் பணியாற்றும் கடைநிலைப் பணியாளர்கள் வரையில் அனைவரும் இந்து மதத்தினராக இருக்க வேண்டியது கட்டாயமானது.
  • ஏற்கெனவே இந்த நடைமுறைதான் வழக்கத்தில் இருந்துவருகிறது. ஆட்சிப் பணித் துறை அதிகாரியை ஆணையராக நியமித்தாலும் அவர் இந்து மதத்தைச் சார்ந்தவராகத்தான் இருந்து வருகிறார்.
  • உதவி ஆணையர், நிர்வாக அலுவலர், ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிற தேர்வுகளுக்கு இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • எனவே, கோயில் நிர்வாகம் என்பது முழுக்க முழுக்க இந்து மதத்தவர்களால்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • அதே நேரத்தில் பிரிவு 10 அறநிலையத் துறையின் கோயில் நிர்வாகம் தொடர்பானதே தவிர, அத்துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது வழிபாடு தவிர்த்த வேறு அறப்பணிகள் தொடர்பானது அல்ல.
  • பிரிவு 10 இடம்பெற்றுள்ள இரண்டாம் அத்தியாயமானது, ஆணையர் மற்றும் கட்டுப்பாடு செய்யும் பிற அதிகாரிகள் தொடர்பிலானது.
  • அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆணையர் முதலானோர்’ என்ற வார்த்தைகள் கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை மட்டுமே குறிக்கும் என்பது மிகவும் வெளிப்படையானது.
  • வழக்கறிஞர்களாலேயே பெரிதும் நிர்வகிக்கப்படும் இந்து சமய அறநிலையத் துறையில், சட்டப் பிரிவுக்கு இப்படி மாறுபட்ட பொருள்விளக்கம் அளிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
  • கோயில் வளாகம் இந்துக்களுக்கு மட்டுமே ஆனது, ஆனால் அதைச் சார்ந்து இயங்கும் மற்ற அறப்பணிகள் அனைவருக்கும் பொதுவானது. அதுவே முறையானது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories