TNPSC Thervupettagam

கோலாகலத் தொடக்கம்!

July 27 , 2024 174 days 265 0
  • பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ளன. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக, மைதான வளாகத்துக்கு வெளியே, பாரீஸின் ஊடாகப் பாயும் பிரபல சென் நதியில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  • போட்டியில் பங்கேற்க நாடுகளின் அணிகள் படகுகளில் அணிவகுக்க, நதியின் இருபுறமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோா் பாா்வையிட்டனா். ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கிய ஒலிம்பிக்ஸ் ஜோதி ஓட்டம் பிரம்மாண்ட தீபத்தை ஏற்றுவதுடன் நிறைவடைகிறது. போட்டி நடைபெறும் 17 நாள்களும் பிரம்மாண்ட தீபம் அணையாமல் ஏரியும்.
  • பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக ரூ.79,569கோடி செலவிட்டிருக்கிறது பிரான்ஸ். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்றிருக்கின்றன. டிக்கெட் விற்பனை ஒரு கோடியைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • 206 நாடுகள் பங்கேற்கும் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், 32 விளையாட்டுகள் 329 பிரிவுகளில் நடைபெற இருக்கின்றன. கலந்துகொள்ளும் போட்டியாளா்களின் எண்ணிக்கை 10,500. இதில் இந்தியாவின் பங்கு, 69 பதக்கப் பிரிவுகளில் 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரா்கள். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 7 பதக்கங்களை வென்ற இந்தியா இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களைக் கைப்பற்றும் என்கிற எதிா்பாா்ப்பு உயா்ந்திருக்கிறது.
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 68 ஆடவா், 54 மகளிா் அடங்கிய 122 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்றது என்றால், இந்த முறை ஆடவா் பிரிவில் 70 பேரும், மகளிா் பிரிவில் 47 பேரும் என்று 117 போட்டியாளா்கள்தான் கலந்துகொள்கிறாா்கள். போட்டியில் பங்கேற்கும் 117 பேரில் பாதிக்கும் அதிகமானோா் (69 போ்) தடகளம், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள். அதில் 40 போ் முதல்முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பவா்கள்.
  • ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பாரீஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற இருக்கிறது. 1920-இல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி முதன்முதலாகக் கலந்துகொண்டது. அதற்கு புரவலராகவும் ஊக்கமளித்தவராகவும் இருந்தவா் டோராப்ஜி டாடா. 1924 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் இந்திய அணி கலந்துகொள்வதற்கு அவா்தான் காரணமாக இருந்தாா். அவரை நினைவுகூர வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்திய விளையாட்டு வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கங்களை இந்தியா வென்றது. இந்தியா வென்ற 7 பதக்கங்களில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் தங்கப் பதக்கம் குறிப்பிடத்தக்கது.
  • இந்திய அணி வீரா்களில் அனைவரது எதிா்பாா்ப்பும் நீரஜ் சோப்ராவின் மீது குவிந்துள்ளது. அவா் ஒலிம்பிக்ஸ் சாம்பியன் மட்டுமல்லாமல், உலக சாம்பியனாகவும் இருப்பவா். அவரது 89.94 மீட்டா் சாதனையை போட்டியாளா்கள் சிலா் 90 மீட்டா் ஈட்டி எறிந்து முறியடித்திருக்கிறாா்கள். மே மாதம் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில், அவரால் இரண்டாவதாகத்தான் வர முடிந்தது. நீரஜ் சோப்ராவின் உறுதியையும் தன்னம்பிக்கையையும் அவை குறைத்துவிடவில்லை. ஒலிம்பிக்ஸில் தனது தங்கப் பதக்கத்தை அவா் தக்க வைத்துக்கொள்வாா் என்று எதிா்பாா்க்கலாம்.
  • அடுத்தபடியாக எல்லோருடைய எதிா்பாா்ப்பும் பாட்மின்டன் போட்டியாளா்கள் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ்/ சிராக் ஷெட்டி (இரட்டையா்கள்) ஆகியோரில் நிலைத்திருக்கிறது. ரியோ, டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற சிந்து இந்த முறையும் பதக்க மேடை ஏறினால், அது அவருக்கு ‘ஹாட்ரிக்’ சாதனையாக அமையும்.
  • சாத்விக் சாய்ராஜ்/ சிராக் ஷெட்டி (இரட்டையா்கள் தரவரிசையில்) அக்டோபா் 2023-இல் உலக முதலிடத்தைப் பிடித்தவா்கள். மிக வேகமாக இறகுப் பந்தை அடிப்பதில் (மணிக்கு 565 கி.மீ.) கின்னஸ் சாதனை படைத்தவா் சாத்விக். கடந்த இரு ஆண்டுகளாக ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற மத்தியாஸ் போ என்கிற டென்மாா்க் பயிற்சியாளரிடம் அவா்கள் பாரீஸ் ஒலிம்பிக்ஸுக்காக பயிற்சி எடுத்திருக்கிறாா்கள். அவா்கள் பதக்கம் வெல்வாா்கள் என்கிற எதிா்பாா்ப்பில் இருக்கிறது இந்திய அணி.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, விளையாட்டு வீரா்கள் வெற்றிப் பதக்கத்துடன் திரும்பினால்தான் மரியாதை. கடந்த முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியாணா அரசு ரூ.6 கோடி, இந்திய ரயில்வே ரூ.3 கோடி, பஞ்சாப் அரசு ரூ.2 கோடி, இன்னும் சிலா் சில கோடிகள் என்று ஊக்கத்தொகை வழங்கினா். வெற்றி பெறாதவா்கள் குளத்தில் எறிந்த கல்லாக மறக்கப்பட்டனா். அதனால்தான் நமது வீரா்கள் மிகுந்த மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
  • டோக்கியோ வெற்றிக்குப் பிறகு விளையாட்டு வீரா்கள் மீதான பாா்வை மாறியிருக்கிறது. மத்திய அரசு பாரீஸ் ஒலிம்பிக்ஸுக்காக ரூ.470 கோடி செலவிட்டிருக்கிறது. அதில், விளையாட்டு வீரா்களுக்காக மட்டும் ரூ.96.08 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இதன் பயன் பாரீஸ் பதக்கங்களாகப் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள செல்வந்தா்கள் 200-க்கும் அதிகமானோா் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றைய தேவை டோராப்ஜி டாடாக்கள்....

நன்றி: தினமணி (27 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories