TNPSC Thervupettagam

க்வாட் நாற்கரக் கூட்டணி குறித்த தலையங்கம்

October 25 , 2021 1126 days 670 0
  • காமன்வெல்த், நேட்டோ, ஜி20, ஆசியான், சார்க் போன்ற
  •  பன்னாட்டுக் கூட்டணிகளின் காலம்  முடிவடைந்துவிட்டது என்று தோன்றுகிறது. இது நாற்கரக் கூட்டணிகளின் காலம்.
  • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து "பிரிக்ஸ்' கூட்டணி ஏற்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து சிறிய கூட்டணிகள் பல சர்வதேச நாடுகளுக்கிடையே உருவாகத் தொடங்கின. சமீபத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட "க்வாட்' நாற்கரக் கூட்டணியும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து உருவாக்கிக்கொண்ட "ஆக்கஸ்' முத்தரப்புக் கூட்டணியும் சர்வதேச அரசியலில் புதிய  முனைப்புகள். 
  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இஸ்ரேல் விஜயத்தையொட்டி புதியதொரு கூட்டணி உருவாகியிருக்கிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் "க்வாட்' போலவே இதுவும் ஒரு நாற்கரக் கூட்டணி. 
  • அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து உருவாக்கியிருக்கும் இரண்டாவது 'க்வாட்' சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  • மேற்கு ஆசிய அரசியலில் இந்தக் கூட்டணியின் தாக்கம்  காணப்படும் என்பதில் சந்தேகமில்லை.  இஸ்ரேல் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் யாயிர் லபிட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
  • அந்த சந்திப்பைத் தொடர்ந்து புதிய நாற்கரக் கூட்டணியின் காணொலி மாநாடும் நடைபெற்றிருக்கிறது. அந்தக் கூட்டணியில் உள்ள ஏனைய மூன்று நாடுகளுடனும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் உறவு வலுப்பட்டிருப்பதன் பின்னணியில் இந்தக் கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது. 
  • முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முனைப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ, சூடான் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு சீரமைக்கப்பட்டது. ஆப்ரகாம் ஒப்பந்தம் என்பதன் அடிப்படையில் அந்த நாடுகள் தங்களது விரோதத்தை மறந்து ராஜாங்க உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
  • யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பொதுவான தேவதூதர் ஆப்ரகாம்  என்பதால் அவரது பெயரில் அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
  • வளைகுடா அரபு நாடுகளுடனும் இஸ்ரேலுடனும் தனித்தனியாக இந்தியா தனிப்பட்ட முறையில் சுமுகமான உறவைக் கொண்டிருப்பதால் அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் புதிய கூட்டணியில் இடம்பெறுவது இந்தியாவுக்கு பிரச்னையாக இருக்கப்போவதில்லை. அதன்மூலம் மத்திய கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் நலனை பாதுகாக்கவும் முடியும்.
  • புதிதாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டாவது நாற்கரக் கூட்டணியால் அமெரிக்க - இந்திய உறவு மேலும் வலுவடையும். அதன்மூலம், சீனாவை ஓரளவுக்கு அடக்கிவைக்க முடியும். 80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். அப்படியிருந்தும் மேற்கு ஆசியாவிலோ மத்திய கிழக்கு ஆசியாவிலோ அதிகாரபூர்வமாக  இதுவரை எந்த பிராந்திய அரசியல் கூட்டணியிலும் நாம் இணையவில்லை. இப்போது அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் உறவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியா அதிகாரபூர்வமாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுடன் தன்னை இணைத்துக் கொள்வது அவசியமாகிறது. 
  • இந்திய ஏற்றுமதிகளுக்கு மத்திய கிழக்கு ஆசியா ஏற்கெனவே ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் படித்த இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முடியும். இஸ்ரேலின் மேம்பட்ட தொழில்நுட்பப் பொருளாதாரம் இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடும். கச்சா எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பல்வேறு துறைகளில் விரிவாக்கம் அடைய விரும்பும் வளைகுடா, அரபு நாடுகளின் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இந்திய நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்க முடியும். 
  • இந்தியா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்தப் புதிய நாற்கரக் கூட்டணியால் சில  பிரச்னைகள் எழக்கூடும். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து நமது நலனைப் பாதுகாக்க ஈரானுடனான நட்பு அவசியம். ஷியாக்களின் நாடான ஈரானும், வளைகுடா நாடுகளும், இஸ்ரேலும் ஒன்றிணைய முடியாதவை. இஸ்ரேல் - அரபு நாடுகள் உறவும்கூட இப்போதுபோலவே தொடருமா என்பதும் தெரியாது. அதனால் இந்தியாவின் அணுகுமுறை மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும்.
  • அதேபோல, அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்தவொரு கூட்டணியும் நட்பும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதற்காகத்தானே தவிர, மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல என்பதை நாம் உணரவேண்டும். சமீபத்தில் அமெரிக்காவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் வென்டி ஷெர்வ்னன், உஸ்பெகிஸ்தான் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வந்திருந்தார். பாகிஸ்தானில் தலைமை ராணுவ தளபதி கமர் பாஜ்வாவை சந்தித்தது மட்டுமல்ல விரைவிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் இம்ரான்கானை அழைத்துப் பேசுவார் என்றும் தெரிவித்தார்.  
  • இந்தியாவுடன் நாற்கரக் கூட்டணி அமைத்துக்கொண்டது போலவே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை இணைத்து இன்னொரு நாற்கரக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

நன்றி: தினமணி (25 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories