TNPSC Thervupettagam

க‌த்​தா‌ர் க‌ற்​று‌த் ​த​ரு‌ம் பாட‌ம்

February 20 , 2024 188 days 234 0
  • கத்தாா் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா் என்கிற மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.
  • பொதுவாக வளைகுடா நாடுகளில் தண்டனையின் கடுமையும், தீா்ப்பின் முடிவும் மாற்றப்படுவதில்லை என்கிற பின்னணியில் பாா்க்கும்போது இதை அசாதாரணமான ராஜதந்திர சாதனை என்றுதான் குறிப்பிட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்த எட்டு இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளின் தண்டனை குறைந்தது மூன்று ஆண்டு முதல் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக முதலில் குறைக்கப்பட்டது.
  • இப்போது அவா்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறாா்கள் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் சொல்வாக்குக்கும், இந்திய வெளியுறவுத் துறையின் செல்வாக்குக்கும் கிடைத்திருக்கும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். வெளிப்படைத் தன்மை இல்லாமல் வழக்கு விசாரணை நடைபெற்று தீா்ப்பும் வழங்கப்பட்ட பிறகுதான் இதுகுறித்த தகவலே வெளியில் தெரியவந்தது. ஆகஸ்ட் 2022-இல் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் பல மாதங்கள் தனிமைச் சிறையில் கத்தாரின் உள்நாட்டுப் பாதுகாப்பின் பிடியில் கழித்துவந்தனா்.
  • கத்தாா் அரசும் சரி, இந்திய அரசும் சரி அவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்த விவரத்தை வெளியிடவில்லை. வழக்கின் விசாரணையும், தீா்ப்பும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கத்தாரில் விசாரணை தொடங்கிய பிறகுதான் இந்திய வெளியுறவுத் துறை கத்தாா் தூதரகத்தின் மூலம் எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளுடனும் தொடா்பை ஏற்படுத்திக்கொண்டது.
  • டிசம்பா் மாதம் துபையில் நடந்த ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கத்தாரின் அமீரான, ஷேக் தமீம் பின் சமத் அல் தானியை நேரில் சந்தித்து எட்டு பேரின் தண்டனை குறித்தும் பேசியது வழக்கின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. அந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளும் அல் தாஹ்ரா என்கிற தனியாா் கத்தாா் நிறுவனத்தில் இந்திய கடற்படையிலிருந்து பணிஓய்வு பெற்ற பிறகு இணைந்து வேலை பாா்த்து வந்தனா். கடற்படை வீரா்களுக்கு திறன்சாா்ந்த பயிற்சி அளிப்பதும், பாதுகாப்பு பிரச்னைகளைக் கையாள்வதும் அவா்களுக்குத் தரப்பட்டிருந்த பணிகள்.
  • இவ்வளவு கடுமையான தண்டனைக்குரிய குற்றச்செயலில் அவா்கள் ஈடுபட்டாா்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. கத்தாா் வாங்க இருக்கும் இத்தாலிய நவீன நீா்மூழ்கி போா்க்கப்பல் குறித்த சில ரகசியங்களை அவா்கள் இஸ்ரேல் நாட்டுக்கு கசியவிட்டாா்கள் என்பது வதந்தியாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. அதன் உண்மைத்தன்மை இதுவரை வெளியாகவில்லை.
  • தென்மேற்கு ஆசிய நாடுகளில் பிராந்திய சக்தியாகவும், பல்வேறு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுப் பாலமாகவும் கத்தாா் இருந்து வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் போரில் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் நாடாகவும் கத்தாா் இருந்து வருகிறது. ஹமாஸ் தலைவா்கள் பலா் கத்தாரின் பின்துணையைப் பெற்றவா்கள். இந்தியாவோ, இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இஸ்ரேலுக்கு உளவு பாா்த்ததாகக் குற்றம்சாட்டப்படும் எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் தண்டனையை ரத்து செய்து விடுதலை வாங்கித் தந்திருப்பது என்பது நினைத்துப் பாா்க்க முடியாத செல்வாக்கின் வெளிப்பாடு. சிறிய நாடாக இருந்தாலும் கத்தாா் பொருளாதார ரீதியாக வலிமையான நாடு.
  • கச்சா எண்ணெய் வளம் நிரம்பவே இருக்கும் நாடு என்பதுடன் சா்வதேச கருத்தியலை உருவாக்கும் அல்ஜஸீரா ஊடகத்தின் தலைமையகம் கத்தாா் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கத்தாரின் வெளியுறவுக் கொள்கைகளில் பாகிஸ்தான் சாா்பு நிறையவே இருந்துவந்தது. சமீபகாலமாக பாகிஸ்தானின் செயல்பாடுகளும், அதன் பொருளாதார வீழ்ச்சியும் கத்தாா் - இந்தியா நெருக்கத்தை பலப்படுத்தி இருக்கின்றன. பொருளாதார பாதுகாப்புத் துறைகளில் இரண்டு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.
  • ஏறத்தாழ எட்டு லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கத்தாரில் பணிபுரிகிறாா்கள் என்பதுடன் 6,000-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் கத்தாரின் பொருளாதாரத்துக்கு வலுசோ்க்கின்றன. இருநாடுகளுக்கும் இடையேயான வா்த்தகம் 2021 - 22-இல் 15.03 பில்லியன் டாலா். இந்தியாவின் மொத்த எரிவாயு இறக்குமதியில் 40% கத்தாரில் இருந்துதான் பெறப்படுகிறது. கடந்த வாரம் மிகக் குறைந்த விலையில் 2048-ஆம் ஆண்டு வரை 78 பில்லியன் டாலா் பெட்ரோலிய எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது.
  • முன்னாள் கடற்படை அதிகாரிகளான கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமாா் வா்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் சுகுநாகா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாா் ஆகிய ஏழு பேரும் இந்தியா திரும்பிவிட்டனா். பிரதமா் நரேந்திர மோடி இன்று கத்தாா் செல்ல இருக்கிறாா்.
  • அதையொட்டி கமாண்டா் பூா்ணேந்திர திவாரி விடுதலை செய்யப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்துடன் அந்த வழக்கு முடிவுக்கு வரும். பணி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் பணிபுரியும்போது உளவுசாா்ந்த குற்றச்சாட்டுகள் எழாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். அவா்கள் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிடக் கூடாது என்பது கத்தாா் சம்பவம் கற்றுத்தரும் பாடம்.

நன்றி: தினமணி (20 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories