TNPSC Thervupettagam

க‌ற்ற‌லு‌ம்... க‌ற்பி‌த்தலு‌ம்...

November 26 , 2021 975 days 536 0
  • கொள்ளை நோய்த்தொற்றால் கல்வித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. 'பிரதம் எஜுகேஷன் பவுண்டேஷன்' என்கிற தன்னார்வ அமைப்பு ஆண்டுதோறும் இந்தியாவின் கல்விநிலை குறித்த ஆய்வு நடத்துகிறது.
  • 'ஏசர்' என்று பரவலாக அறியப்படும் அவர்களது வருடாந்திர கல்விநிலை குறித்த அறிக்கை மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்தும், பள்ளிச் சேர்க்கை குறித்தும் ஆய்வுகள் நடத்தி அறிக்கை வெளியிடுகிறது.
  • 16-ஆவது ஏசர் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அடிப்படைக் கல்வியை கொள்ளை நோய்த்தொற்று கடுமையாகப் பாதித்ததன் பின்னணியில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் 2021-க்கான ஏசர் அறிக்கை ஐந்து முக்கியமான செய்திகளை நமக்கு வழங்குகிறது.

ஏசர் அறிக்கை

  • ஏசர் அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கும் ஐந்து உண்மைகள்: பள்ளியில் சேராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை; அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது; தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறைந்திருக்கிறது; தனியார் பயிற்சி மையங்கள் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல் மாணவர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பும் அதிகரித்திருக்கிறது; மாணவர்கள் மத்தியில் எண்ம தொழில்நுட்ப இடைவெளி பெரிய அளவில் காணப்படுகிறது.
  • மேலே குறிப்பிட்ட ஐந்து பிரச்னைகளும் மிக முக்கியமானவை. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் அதிகரித்திருக்கும் மாணவர் சேர்க்கை குறிப்பிடத்தக்கது. 2018-இல் 64.3% ஆகவும், 2020-இல் 65.8% ஆகவும் இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, 2021-இல் 70.3% ஆக அதிகரித்திருக்கிறது.
  • பெற்றோரின் வருமானம் குறைந்திருப்பது அரசுப் பள்ளிகளில் காணப்படும் வரவேற்புக்கு முக்கியக் காரணம் என்று கருதலாம்.
  • அப்படி இருக்குமானால், பொருளாதரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்போது இப்போது காணப்படும் அரசுப் பள்ளிக்கான வரவேற்பு குறையக்கூடும் என்பதை, திட்டமிடுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளில் அதிகரித்திருக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தாக வேண்டும். அடுத்த சில ஆண்டுகளிலேயே வரவேற்பு குறையுமேயானால், அதிகரித்த கட்டமைப்பு வசதிகள் தேவையற்றதாகிவிடும்.
  • அதைத் தவிர்க்க, அரசுப் பள்ளிகளின் கற்பிக்கும் தரமும், கல்வித் தரமும் அதிகரித்து மாணவர்களை தக்கவைத்துக் கொள்வதுதான் தீர்வு.
  • தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திக்கிறது. மீண்டும் பழையதுபோல மாணவர்களை ஈர்ப்பதற்கு கல்விக் கட்டணத்தை குறைத்தாக வேண்டும்.
  • அப்படிச் செய்யும்போது அதிக முதலீடு செய்து தொடங்கப்பட்டிருக்கும் பள்ளிகள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகலாம்.
  • அதேபோல, தனியார் பயிற்சி வகுப்புகளுக்குக் காணப்படும் அதிகரித்த வரவேற்பும் தனியார் பள்ளிகளைப் பாதிக்கக்கூடும்.
  • அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதும், தனியார் பயிற்சி வகுப்புகளின் மூலம் பயிற்சி பெறுவதும் அதிகரிக்கக்கூடும்.
  • அந்த அறிக்கை இன்னொரு செய்தியையும் வழங்குகிறது. ஆரம்பக் கல்வி அளவிலான அடிப்படைக் கல்வியில் கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று பொதுமுடக்கத்துக்குப் பிறகு மாணவர்களின் கற்கும் திறனில் எதிர்பாராத அளவிலான குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
  • நோய்த்தொற்றுக்கு முன்னர் படித்துத் தெரிந்து கொண்டதை, பல மாணவர்கள் மறந்திருக்கிறார்கள்.
  • அவர்களின் செயல்பாடுகளிலும், உளவியல் அணுகுமுறையிலும் மிகப் பெரிய மாற்றம் காணப்படுவதாக பல ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். கொள்ளை நோய்த் தொற்றுத் தொடர்பான வேலைகளுக்கு நடுவிலும் பல ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
  • அப்படியிருந்தும்கூட, சில மாணவர்களால் முன்பு படித்ததை நினைவில் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
  • இப்போது வெளியாகியிருக்கும் 16-வது ஏசர் அறிக்கை கர்நாடக மாநிலத்திலுள்ள 24 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வை இணைத்திருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் பொருந்தும்.
  • அரசுப் பள்ளியில் படிக்கும் 3-ஆம் வகுப்பு குழந்தைகள், 1-ஆம் வகுப்புப் பாடத்தைப் படிக்கும் திறனில் குறைவு காணப்படுகிறது. 2018-இல், 1-ஆம் வகுப்புப் பாடத்தைத் தவறில்லாமல் படிக்கத் தெரிந்த குழந்தைகளின் எண்ணிக்கை 41% ஆக இருந்தது.
  • இப்போது அதுவே 24% ஆகக் குறைந்திருக்கிறது. அதேபோல, இரட்டை இலக்க எண்களைப் படிக்கத் தெரிந்த குழந்தைகளின் எண்ணிக்கை 78% லிருந்து 60% ஆகக் குறைந்திருக்கிறது.
  • இணையவழிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை.
  • 27% மாணவர்கள் மட்டும்தான் தங்களது படிப்புக்கு அறிதிறன் பேசியை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். 47% மாணவர்கள் தங்களது பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களின் அறிதிறன்பேசியின் மூலம்தான் இணையவழிக் கல்வி பெற்றனர்.
  • முன்பு 90% மாணவர்கள் புத்தகங்கள் மூலம் கற்றதுபோய், இணையவழிக் கல்வி 40% மாணவர்களைத்தான் சென்றடைந்தது.
  • நாடு தழுவிய அளவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஏசர் அறிக்கை குறிப்பிட்டிருக்கும் குறைபாடுகளைக் களைந்து, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மேம்பாட்டின் மூலம் எதிர்கொள்வது தான் இந்த பிரச்னைக்கான தீர்வு.

நன்றி: தினமணி  (26 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories