TNPSC Thervupettagam

சட்டங்களை இயற்றுகையில் சம்பந்தப்பட்ட மக்களுடன் பேசுங்கள்!

July 2 , 2019 2006 days 1179 0
  • மோடி அரசின் முதலாவது ஆட்சியின் கடைசி கட்டத்தில் சர்ச்சைக்குரிய சில மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்றைய அரசியல் சூழல் அவற்றை அப்படியே சட்டமாக்க முடியாமல் தடுத்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள் மாநிலங்களவையில் தடுக்கப்பட்டன. வேறு சிலவற்றை வலியுறுத்த வேண்டாம் என்று அரசே முடிவெடுத்தது. பழைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தபோது, இந்த மசோதாக்களும் காலாவதியாகிவிட்டன. இப்போது அதே அரசு மீண்டும் அமைந்திருக்கும் நிலையில், அந்த மசோதாக்கள் மீண்டும் கொண்டுவரப்படும் சூழல் உருவாகியிருக்கிறது; அரசு அதுபற்றி பரிசீலிக்க வேண்டும்.
  • மூன்றாம் பாலினர் மசோதா, வாடகைத்தாய் மசோதா, பாலியல் தொழிலுக்காக மகளிர்-குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் மசோதா ஆகியவை கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. இப்போதுள்ள சட்டங்களில் உள்ள குறைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன்தான் இம்மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. தங்களுடைய உரிமைகள் வரையறுக்கப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மூன்றாம் பாலினத்தவரின் நீண்ட நாள் கோரிக்கை. அதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் அந்த மசோதா. வாடகைத்தாய் என்பவரை சட்டரீதியாக வரையறுக்கவும் அவர்களுடைய உரிமைகள், நிலைமை ஆகியவற்றைத் திட்டவட்டமாக நிர்ணயிக்கவும் மசோதா கொண்டுவரப்பட்டது. பாலியல் தொழிலுக்காக இளம் பெண்களையும் சிறுமிகளையும் கடத்துவதைத் தடுக்கவும் பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது இம்மசோதா.
ஊறு விளைவிக்கும் தெளிவில்லாத மசோதா
  • பிரச்சினை என்னவென்றால், இந்த மசோதாக்களின் வாசகங்கள் தெளிவில்லாமலும் வெவ்வேறு பொருள்களைக் கொள்ளும்படியாகவும் இருந்தன. இதனால், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீதே குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வழக்கு தொடரும் சாத்தியத்தையும் அவை கொண்டிருந்தன. இந்த மசோதாக்களைத் தயாரித்தவர்கள் இவற்றுடன் தொடர்புள்ள சமூகங்களிடம் பேசி, ஆலோசனை கலந்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டுத் தீர்மானிக்காமல் தவறிழைத்தனர். எனவே, யாருக்காக இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டனவோ அவர்களைக் காப்பாற்றுவதற்குப் பதில், ஊறு விளைவிப்பதாக அமைந்திருந்தன.
  • ஓர் உதாரணம், மூன்றாம் பாலினத்தவர் மசோதாவில், ஒருவர் தான் எந்த பால் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளும் சுயஉரிமையையே நாசப்படுத்துவதாக வாசகம் இருந்தது. அதற்குப் பதிலாக, அரசு நிர்ணயிக்கும் குழுதான் அவர் எந்த பாலினம் என்பதைத் தீர்மானிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் பாலினம் எது என்பதைக்கூடத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசு தரப்புக்குச் சென்றுவிட்டது. ஆக, மக்களைத் தளைகளிலிருந்து விடுவிப்பதற்குப் பதில், அவர்களை மேலும் சிக்கவைப்பதாக மசோதா மாறிவிட்டது. பாலினம் எது என்று மீள் வகைப்படுத்தல் தொடர்பாக ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே சில பிரிவுகள் மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்தன.
வாடகைத்தாய் வணிகம் சீராகட்டும்
  • அடுத்து, வாடகைத்தாய் மசோதாவின் வரம்பிலிருந்து ‘பால் புதுமையினர்’ (எல்ஜிபிடி) விலக்கப்பட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், அவர்களும் ‘மற்றவர்களைப் போல சம உரிமையுள்ள குடிமக்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் பாலினத்தவருக்கு வெவ்வேறு வயது வரம்புகளும் விதிக்கப்பட்டிருந்தன. பணத்துக்காக வாடகைத்தாயாக இருக்கக் கூடாது, அது சட்ட விரோதம் என்று மசோதா கூறியது. உண்மையில், பணம் கொடுத்தால்தான் வாடகைத்தாயாக இருக்க பெரும்பாலானோர் சம்மதிப்பார்கள். அந்த வணிகத்தை முறைப்படுத்துவதற்குப் பதிலாக அதை முற்றாக நிறுத்தும் விதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டிருந்தது.
  • சட்ட விரோத ஆள் கடத்தல் மசோதாவும் இப்படித்தான் அரைகுறையாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. பிச்சை எடுப்பது குற்றச்செயல் என்பது மசோதாவின் வாசகம். பிச்சை எடுக்காமல் கவுரவமாகப் பிழைக்க மாற்று வழிகள் ஏதும் அரசால் கூறப்படவில்லை. அடுத்ததாக, சட்ட விரோதமாக ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு ஈடுபடுகிறவருக்கும், சுயமாகத் தொழிலில் ஈடுபடுகிறவருக்கும் உள்ள வேறுபாட்டை மசோதா கண்டுகொள்ளவில்லை. ஆள்கடத்தலைத் தடுக்க வேண்டிய மசோதா குறுகிய, தார்மீக நோக்கங்களால் கட்டமைக்கப்பட்டுவிட்டது.
  • சர்ச்சைக்கிடமான இந்த மூன்று மசோதாக்களையும் இணைக்கும் அம்சங்கள் சில உள்ளன. முதலாவது அம்சம், ஒவ்வொரு தனிமனிதனும் தனது உடல், தனிப்பட்ட சுயகண்ணியம், சுயேச்சையான முடிவெடுத்தல், பாலின அடையாளம் தொடர்பானவைதான் இம்மூன்று மசோதாக்களும். இரண்டாவதாக, இம்மசோதாக்கள் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள, விளிம்புநிலையில் உள்ள மக்கள் தொடர்பானவை. மூன்றாவதாக, இந்த மசோதாக்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்டோருடன் கலந்து பேசாததால், அவற்றை எதிர்த்து அந்தந்தச் சமூகத்தினரே நாடெங்கிலும் போராட்டங்களை நடத்தும் சூழலை அவை உருவாக்கின.
அரசின் கொள்கைக்கே முரணானது
  • குடிமக்கள் (திருத்த) மசோதாவைக் கொண்டுவந்து அதைச் சட்டமாகவும் நிறைவேற்ற அரசு மேற்கொண்ட முயற்சிகள் அதன் தோழமைக் கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளாலேயே கைவிடப்பட நேர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நன்மை செய்வதற்காகவே கொண்டுவரப்படுவதாக மசோதா குறித்துப் பேசப்பட்டது. பக்கத்து நாடுகளால் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமையை விரைந்து வழங்குவதற்கு வகைசெய்யும் இந்த மசோதா, முஸ்லிம்களை மட்டும் விலக்கியது சட்ட விரோதம் மட்டுமல்ல; அரசு அறிவித்த கொள்கைக்கே முரணானது. ஒருவேளை, இந்த மசோதா உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்குச் சென்றால் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அநேக ஆண்டுகள் வழக்கு விசாரிக்கப்படுவது நிச்சயம். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த மசோதா எதிர்க்கப்பட்டது. முதலாவது, இது மக்கள் தொகையமைப்பில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்துவிடும் என்றொரு ஆட்சேபம். அடுத்ததாக, முஸ்லிம்களுக்கு இடம் கிடையாது என்று கூறுவதன் மூலம் இது மதச்சார்புள்ளதாகவும் கருதப்பட்டது.
  • சமீபத்திய மக்களவைத் தேர்தலில் மேடையில் அதிகம் பேசப்பட்டது அஸ்ஸாமில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறும் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணிதான். அஸ்ஸாமில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் இது அமல்படுத்தப்படும் என்று சில பாஜக தலைவர்கள் பேசினர். அஸ்ஸாமில் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அந்நியர்கள் ஊடுருவியுள்ளனர் என்பதே இதற்குப் பொருள். ஆக, தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்று நிரூபிக்கும் பொறுப்பு மக்களுடையதாகிறது. இதை நாடு முழுக்க அமல்படுத்தினால் வேண்டாத பணச் செலவுடன் மக்களிடையே பீதியும் பதற்றமும் மோதலும் அதிகரிக்கும். அரசு நிர்வாகமும் இதைத் தொடரவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் தவிக்கும்.
  • தங்களுடைய மூதாதையர்கள் இன்னின்ன இடங்களில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பது கல்வியறிவற்ற, சொத்துகள் ஏதும் இல்லாத ஏழை, சிறுபான்மையின மக்களுக்கு மிகவும் கடினமான செயல். அந்நியர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடுவர் மன்றமும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணியும் ஒன்றையொன்று இடைமறிப்பதால் அஸ்ஸாமிலேயே குழப்பங்களுக்கு வழிகோலிவருகின்றன. இன்னார் இந்தியர் இல்லை என்று மற்றவர்கள் ஆட்சேபம் கிளப்ப வாய்ப்பு இருப்பதால், தனிநபர்கள் பலர் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் வேண்டுமென்றே ஆட்சேபித்துவருகின்றனர். தயாரான குடிமக்கள் பதிவேட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு இடங்களில் இடம்பிடித்துள்ளன. இந்தச் சோதனைகளின் விளைவு எப்படியிருக்கும் என்று புரியாத பாமர மக்கள், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.
மக்களுடன் பேசுங்கள்
  • ஒரு மாநிலத்திலேயே (அஸ்ஸாம்) இத்தனை குழப்பங்கள், தற்கொலைகள் என்றால் நாடு முழுவதும் விரிவுபடுத்தினால் என்ன ஆகும்? இதைவிட முக்கியம், மிகப் பெரிய எண்ணிக்கையில் அந்நியர்கள் சட்ட விரோதமாகக் குடியேறியதற்கு நம்மிடம் ஒரு ஆதாரமும் இல்லை. அரசமைப்பு தரும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு பிரிவினரையே சந்தேகிக்கிறோம் என்பதுடன் ஏராளமான பணத்தையும் மனித உழைப்பையும் இதில் செலவழிக்கவே இது உதவும். இப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க அவசியம் இருப்பதாகக்கூடத் தெரியவில்லை.
  • மக்களுடைய மகத்தான ஆதரவுடன் பெரும்பான்மை வலு பெற்று ஆட்சிக்கு வந்திருப்பவர்களுக்குத் தாங்கள் விரும்பும் வகையில் சட்டமியற்ற உரிமை இருக்கிறது என்று சொல்லக்கூடும். அரசுக்கு அப்படி உரிமை இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், எந்த லட்சியத்துக்காகச் சட்டம் இயற்றினாலும் சில வரம்புகளுக்கு உட்பட்டே அதை நிறைவேற்ற வேண்டும். யாருக்காகச் சட்டம் இயற்றப்படுகிறதோ அவர்களுடன் பேசி ஆலோசனைகளைப் பெற்று, அதன் பிறகே சட்டமியற்ற வேண்டும் என்பது இதில் அடிப்படை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் மதிக்கப்பட வேண்டும். இதுவரை கட்டிக்காத்துவந்த மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories