TNPSC Thervupettagam

சட்டச் சீர்திருத்தம் சகலர் ஆலோசனை கலந்து நடக்க வேண்டும்

July 21 , 2020 1645 days 1139 0
  • குற்றவியல் சட்டங்களைச் சீர்திருத்துவதற்கான குழுவைச் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர் சமூகத்தினர் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. சீர்திருத்தம் மிக அவசியமானது; ஆனால், அதற்கான காலகட்டம் இதுவல்ல.

  • குற்றம், விசாரணை, நீதிமன்ற விசாரணை போன்றவற்றைக் கையாளும் தற்போதைய சட்டங்களில் சீர்திருத்தம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

  • 1860-ம் வருடத்திய இந்திய தண்டனைச் சட்டம், 1973-ல் திருத்தப்பட்ட குற்ற நடவடிக்கைச் சட்டம், 1872-ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய சாட்சிச் சட்டம் போன்றவற்றைச் சீர்திருத்தம் செய்ய சமீப காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • எனினும், ஒட்டுமொத்தமான சட்டச் சீர்திருத்தம் என்பதற்கு ஆழ்ந்த பரிசீலனையும் விவாதங்களும் தேவைப்படுகின்றன.

  • சமீபத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் மீது உள்ள விமர்சனங்களில் ஒன்று கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது செயல்பட ஆரம்பித்தது என்பதுதான்.

  • பரந்த அளவிலான கருத்துத் திரட்டலுக்கு இது உகந்த தருணம் இல்லை. பிரதான நகரங்கள் சாராத வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களின் பங்களிப்புகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

  • இந்தக் குழுவின் நோக்கம் மிகவும் விரிவானதுபோல் தோன்றுகிறது: “குற்றவியல் சட்டங்களில் ஒழுங்குடனும் திறன்மிக்க விதத்திலும் சீர்திருத்தங்கள் செய்யவும் அதன் மூலம் தனிமனிதர், சமூகம், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பரிந்துரைத்தல்; அதன் மூலம் நீதி, கண்ணியம், தனிமனிதருக்கான மதிப்பு ஆகியவற்றின் அரசமைப்புச் சட்டரீதியான விழுமியங்களை முதன்மைப்படுத்துதல்.”

  • இது குழப்பமானதாகவும், பல்வேறு விளக்கங்களுக்குச் சாத்தியம் கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. இந்தப் பணியைச் செய்து முடிக்க ‘சட்டக் குழு’ ஏன் நியமிக்கப்படவில்லை என்பதும் புரியவில்லை.

  • இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லாததுடன் அனைவரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். கூடவே, பெரும்பாலும் டெல்லியைச் சேர்ந்தவர்களே இந்தக் குழுவில் இருக்கிறார்கள்.

  • இதெல்லாமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. குற்றவியல் சட்டங்களெல்லாம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால் விசாரணைகளை விரைவுபடுத்தல், சாட்சிகளைக் காப்பாற்றுதல், பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் களைதல், விசாரணை வழிமுறைகளை மேம்படுத்துதல், மிக முக்கியமாகச் சித்ரவதையைத் தவிர்த்தல் போன்றவை குறித்த பரந்த அளவிலான கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டும்.

  • மிகவும் குறுகிய காலத்தில், மக்கள் பங்களிப்பில்லாமல் இந்தச் சீர்திருத்தம் செய்யப்படும் நிலை ஏற்பட அனுமதிக்கப்படலாகாது. சீர்திருத்தம் என்பது மிகவும் கவனமாகவும் பல தரப்புகளையும் பல கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் இருப்பது அவசியம்.

நன்றி: தி இந்து (21-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories