TNPSC Thervupettagam

சட்டம், ஒழுங்கு பாதுகாப்பில் கணினி தொழில்நுட்பம்!

January 9 , 2025 9 days 50 0

சட்டம், ஒழுங்கு பாதுகாப்பில் கணினி தொழில்நுட்பம்!

  • ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கு, குற்றவியல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மாநில காவல் துறை, நீதித் துறை போன்றவை போதிய கணினித் தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட வேண்டும். குற்றங்களை விரைவில் கண்டறிவதற்கும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் உதவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும்.
  • காவல் துறையில் எந்த அளவுக்குப் புதிதாக கணினி தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டுமோ, அதேபோன்று நீதித் துறையிலும் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, நீதித் துறையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வரும் போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம், கைரேகை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்பட , குற்றம் சாட்டப்பட்டவரின் பழைய குற்ற வரலாற்றை நொடியில் தெரிந்து கொள்ள கணினி தொழில்நுட்ப உதவியுடன் வழிவகை செய்ய முடியும்.
  • ஒரு வழக்கை விசாரிக்கும் போதே காவல்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கைகள், நீதிமன்ற ஆவணங்கள் மூலம் அந்த குற்றவாளி தொடா்புடைய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயல்பாடுகளில் ஒன்றான தானியங்கித் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் நுட்பம் மூலம் தரவுகளை, தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
  • தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்படும் குற்றவாளி பற்றி முதல் தகவல் அறிக்கையைத் தயாா் செய்யும்போதே கைரேகைப் பதிவு, முகப்பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த வழக்கின் உண்மைகள், சான்றுகள், சட்டங்களின் குறிப்புகள் அனைத்தையும் கணினியில் சேமித்து வைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அடுத்த வழக்கில் மீண்டும் அதே குற்றவாளி சிக்கும் போது, பழைய தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, சம்பந்தப்பட்டவா் எத்தனை வழக்குகளில் தொடா்புடையவா் என்பதையும், அதில் அவா்மீது செயல்படுத்தப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் பற்றியும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்படாமல் அவா் தப்பி இருக்கிறாா் என்ற விவரங்களும் சேமிக்கப்படுவது அவசியம்.
  • கணினியில் சேமிக்கப்படும் தகவல் தரவுகளின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். காவல் துறை உயா் அதிகாரிகள், நீதிபதிகள் அவற்றைப் பாா்க்க வசதியாக பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். வழக்கு தொடா்பான அனைத்து தரவுகளையும், குற்றப்பூா்வ ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து சேமிக்கும் போதும், பகுப்பாய்வு செய்யும் போதும் பிளாக்செயின் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். பிளாக்செயின் நுட்ப பயன்பாட்டில் தகவல்களைத் திருடவோ, திருத்துவதோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
  • செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் மூலம் சிசிடிவி காட்சிகளைத் தானாகவே கண்காணித்து சந்தேகமான செயல்பாடுகளை எளிதில் அடையாளம் காண இயலும். மேலும் பழைய வழக்குகளின் தீா்ப்புகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கல் செய்தால் எளிதில் தீா்ப்புகளைப் பகுப்பாய்வு செய்து, ஒத்த வழக்குகளின் முடிவுகளையும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம் கணிக்க இயலும்.
  • தற்போது பல வழக்குகளில் ஒரு குற்றவாளி தொடா்புடையவா் என்பதையும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மட்டுமே தற்போது தொழில்நுட்பச் செயல்பாடாகப் பாா்க்கப்படுகிறது. அதுவும் பல இடங்களில் தற்போது உள்ள நுட்பங்கள் நிறைந்த கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படவில்லை.
  • பொருள்களின் இணையமானது சட்ட அமலாக்க அமைப்புகளையும், நடைமுறைகளையும் மற்றும் நீதிமுறைகளையும் மேம்படுத்த உதவுகிறது. மனித தலையீட்டின் மூலம் ஏமாற்றப்படும் சில செயல்பாடுகளை பொருள்களின் இணைய பயன்பாடுகள் தடுப்பதுடன், தொழில்நுட்ப வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கிறது. சிறந்த தரவுகள் மூலம் எளிதாக முடிவுகளை எடுக்கவும், எளிதாகத் தரவுகளையும், தகவல்களையும் சேகரித்து வைக்கவும், கையாளவும் பொருள்களின் இணையம் உதவுகிறது.
  • மேலும், மின்னணு குறிச்சொற்கள் மூலம் கைதிகளின் நடவடிக்கைகளை எளிதில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். அவா்கள் சட்ட ஒழுங்குகளை மீறும் போது உடனடியாகத் தகவல் பெறவும், பொருள்களின் இணையத் தொழில்நுட்பம் வழிவகை செய்கிறது.
  • இப்போதுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு தவறுக்கோ, குற்றத்திற்கோ தேவையான தண்டனை முடிவுகளை எடுக்க, நிறைய கால அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பொருள்களின் இணைய பயன்பாட்டின் மூலம், சிறந்த பகுப்பாய்வு, சிறந்த சான்றுகள் மற்றும் உகந்த செயல்முறைகளை நீதிமன்ற அமைப்புகளுக்குக் கொண்டு வர முடியும். இதன் மூலம் செயல்முறைகளைத் துரிதப்படுத்த முடியும். இதனால் ஊழலைக் கட்டுப்படுத்தவும், செலவுகளை குறைக்கவும், கால விரயத்தைத் தடுக்கவும் முடியும்.
  • பொருள்களின் இணையப் பயன்பாட்டின் மூலம், வழக்கறிஞா்கள் மேற்கொள்ளும் சட்ட பணிகளையும், அவா்களின் தேவைகளையும் எளிதில் கண்காணிக்கவும், தெரியப்படுத்தவும் முடியும். இதன் மூலம் பல செயல்முறைகளை துரிதப்படுத்த உதவுகிறது.
  • தற்போது வளா்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம், ஸ்மாா்ட் சிக்னல்கள் ஒரு நாகரிக குறியீடாக மாறி வருகின்றன. மேலும் பல்வேறு இழப்புகளில் இருந்து மீள இது உதவுகிறது. ஓா் ஆய்வின் படி, 30% விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லாமலும், அதைக் கண்டுபிடிக்க கால நேரம் கூடுதலாக ஆவதாலும் ஏற்படுகின்றன என கூறுகிறது.
  • பொருள்களின் இணைய உணரிகள், எளிதாக வாகனங்களை நிறுத்தும் இடத்தைக் கண்காணிக்கவும், மேலும் வாகன விபத்துகள் ஏற்பட்ட விவரங்களையும், அதிகாரிகளுக்கும், வாகன ஓட்டிகளின் உறவினா்களுக்கும், குற்றவியல் அதிகாரிகளுக்கும் எளிதாகத் தகவல்களைத் தெரிவிக்க உதவுகிறது.
  • மேலும் சட்டஅமலாக்க துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு வினைத்திறன் மிக்க கைக்கடிகாரங்களை அணிவிப்பதன் மூலம், அவா்கள் மேற்கொள்ளும் பணிகளையும், அதிகாரிகள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான காரியங்களையும் எளிதில் கண்காணிக்க முடியும்.

நன்றி: தினமணி (09 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories