TNPSC Thervupettagam

சட்டவிரோத மனநலக் காப்பகங்கள் களையெடுக்கப்பட வேண்டும்

July 17 , 2024 179 days 178 0
  • நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தனியார் மனநலக் காப்பக வளாகத்தில் 20 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
  • நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உள்பட்ட குந்தலாடி என்னும் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவரும் ‘லவ்ஷோர் தொண்டு அறக்கட்டளை’, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகமாகச் செயல்பட்டுவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மனநலக் காப்பகம் நடத்துவதற்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநலக் காப்பகம் அல்லது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அமைப்பு அத்தகைய அனுமதியைப் பெறாமல் மனநலம் பாதிக்கப்பட்டோரைத் தங்கவைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • காப்பக வளாகத்துக்குள் 20 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்ததன் பேரில், சோதனை நடத்திய தமிழ்நாடு வருவாய்த் துறை அதிகாரிகள், காப்பகத்தை மூடி சீல் வைத்தனர். புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சடலங்கள் எதுவும் தோண்டி எடுக்கப்படவில்லை. ஆனால், காப்பகத்துக்குள் சடலங்களைப் புதைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • காப்பகத்தில் வசித்தவர்கள் இறந்த பிறகு, அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காப்பகத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேர் கோயம்புத்தூரில் உரிய உரிமத்துடன் இயங்கிவரும் காப்பகத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அறக்கட்டளையை நடத்திவரும் கேரளத் தம்பதியினரிடம் காவல் துறை விசாரணை நடத்திவருகிறது.
  • கடந்த ஆண்டு விழுப்புரத்தில் ‘அன்பு ஜோதி’ என்னும் தனியார் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், முதியோர் என அனைவரும் பாலியல் துன்புறுத்தல் அல்லது உடல்ரீதியிலான சித்ரவதைக்கு உள்ளானது கண்டறியப்பட்டது.
  • அந்த இல்லமும் உரிய சட்ட அனுமதி இன்றி இயங்கிவந்தது. குந்தலாடி இல்லத்தில் வசித்துவந்தவர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் விசாரணை முடிவில்தான் முழு உண்மைகள் தெரியவரும்.
  • தனியார் மனநலக் காப்பகங்கள், முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லங்கள், குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்கள் பாலியல் வன்முறை, உடல்ரீதியான சித்ரவதை போன்ற கொடுமைகளை எதிர்கொள்வதும் உயிரிழப்பதும் புதிதல்ல.
  • இதுபோன்ற குற்றங்கள் அரசு மற்றும் அருகில் இருப்போரின் கவனத்துக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் நடைபெற்றுவருவதும் திடீரென்று பொதுப் பார்வைக்கு வந்து அம்பலப்படுவதும் சட்டங்களிலும் கண்காணிப்பு வழிமுறைகளிலும் நிலவும் போதாமைகளையே உணர்த்துகின்றன.
  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் நடைமுறையில் பரிந்துரைகளை வழங்குவதாக மட்டுமே இருப்பதாகவும், சட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலான விதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் குந்தலாடி விவகாரத்தை அடுத்து மனநலப் பாதிப்பு கொண்டோருக்கான சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
  • உரிய அனுமதி பெறாமல் மனநலக் காப்பகம் நடத்துவோரைத் தண்டிப்பதற்குச் சட்டத்தில் வழிமுறை இல்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதோடு, குந்தலாடி காப்பகத்தில் புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து, தடயவியல் பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் நியாயமானவை.
  • மனநலக் காப்பகங்களில் நிகழும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது, இல்லத்தை மூடுவதும் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் மட்டும் போதாது. உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் மனநலக் காப்பகங்களைக் கண்டறிந்து களையெடுப்பதும் அவசியம். சட்டப்படி இயங்கிவரும் காப்பகங்களும் சீராகக் கண்காணிக்கப்பட வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அரசும் சமூகமும் துளியும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories