TNPSC Thervupettagam

சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது

November 14 , 2023 377 days 332 0
  • ஒளியைப் பிரதானப்படுத்தும் பண்டிகைக் களியாட்டங்கள், கூடவே பெருத்த ஓசையுடனும் சேர்த்தே கொண்டாடப்படுகின்றன. காதுகளையும் நிசப்தத்தையும் களங்கப்படுத்தும் ஓசைக்கு விடை கொடுப்பதுதான் எப்போது? ஒலிக்கோவைகளை இசையாக ரசிக்கலாம். இந்தச் சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது? பட்டாசுகள் உற்பத்தியும் வியாபாரமும் பெரிய அளவில் மாறிப்போன பின், இந்தக் கேள்விக்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா? குழந்தைகளின் விருப்பம் என்று அவர்கள் மீதே பழி போடப்படுவதும் ஏற்புடையதல்ல. குழந்தைகளின் எல்லா விருப்பங்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றனவா அல்லது அவர்கள் பிடிவாதமாகக் கேட்பவை அனைத்தும் ஏற்கவேண்டியவைதானா? தீபாவளிக்கும் கார்த்திகைத் திருநாளுக்கும் மட்டும் வெடித்துக்கொண்டிருந்த பட்டாசுகள், இப்போது எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் உரியதாக மாறியிருக்கின்றன. எந்த நேரத்தில் வெடிப்பது என்கிற நோக்கம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

பட்டாசு ஏற்படுத்தும் பாதிப்புகள்

  • சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள்... அதிலும் இதய நோயாளிகள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா நோயாளிகளின் பாடு பெரும் திண்டாட்டம். சத்தத்தோடு மட்டும் இல்லாமல், கடும் புகை மூட்டமும் பாடாய்ப்படுத்தும். மனிதர்கள் மட்டுமல்ல, வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளும் அவதிக்குள்ளாகும். அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் புறாக்கள் இந்த வெடிச் சத்தத்தில் பதறிக் கூட்டமாகப் பறந்து அங்குமிங்கும் அலைபாய்வதும் மனதை வருத்தும் காட்சிகள். அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத, ஒளிச் சிதறல்களால் மட்டும் மகிழ்வூட்டும் மத்தாப்புகளைக் குறைந்த அளவில் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதோடு, இது கட்டுக்குள் வந்தால் நன்றாக இருக்கும். எல்லாத் தரப்புக்கும் உவப்பானதாகவும் இருக்கும்.
  • பட்டாசு வெடிப்பதற்கான நேர வரைமுறைகளைச் சில ஆண்டுகளாகவே அரசு வகுத்துக் கொடுக்கத்தான் செய்கிறது. நேரக் கட்டுப்பாடு அமலில் இருந்தாலும், அதை மீறித்தான் பெரும்பாலோர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டம் போட்டு இவற்றை எல்லாம் மாற்றிவிட இயலாது. பல சட்டங்கள் இங்கு அவ்வாறுதான் நியதி மாறாமல் ‘நேர்த்தியாக’ மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுயக்கட்டுப்பாடு மட்டுமே இதைச் சாத்தியமாக்கும். இனி வரும் காலத்தில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசுகள் வாங்குவதற்கும்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலை வரலாம்.
  • ஒரு நாளில் வெடித்துத் தீர்க்கும் பட்டாசுக் குப்பைகள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டின் முன்பும் அம்பாரமாகக் குவிந்து கிடக்கும் நிலையும் அவலம்தானே?! நகரைப் பெருக்கிக் குப்பைகளை அள்ளிக்கொண்டு போகின்ற தொழிலாளர்களையும் கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்குவது குற்றம் என்கிற சிந்தனை எழ வேண்டும். அவர்கள் யாரும் நிரந்தரப் பணியாளர்கள் அல்ல, குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளிகள் மட்டுமே என்கிற கசப்பான உண்மை யாருக்கும் உறைப்பதில்லை.
  • கட்டுப்பாடு, வரைமுறை அவசியம்: பட்டாசு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சிவகாசி பகுதியில் மட்டும்தான் முன்னர் வெடி விபத்துகள், உயிரிழப்புகள் என்றிருந்த நிலை மாறி, தீபாவளிக்குச் சில மாதங்கள் முன்னதாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு சேமிப்புக் கிடங்குகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு, அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். பட்டாசுகளைக் கிடங்குகளில் சேமித்து வைப்பவர்களும் அதற்கான சட்ட வரைமுறையை ஏற்று நடந்துகொள்வதில்லை.
  • குறிப்பிட்ட அளவுக்கு மேலாக இருப்பு வைப்பது, அனுமதியில்லாமல் செயல்படுவது, பொதிகளைக் கட்டுவதிலும் முறைகேடுகள் எனப் பல காரணங்கள். விதி என்று ஒன்று இருந்தால், அதை மீறுவதும் நியதியாக இருந்தால் என்ன செய்வது? அரசு உயிரிழப்புகளுக்கு நிவாரணத் தொகை அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் கூடுதல் கவனத்துடன் அதிகக் கட்டுப்பாடுகளையும் இனி விதித்தே ஆக வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சூழலியல் எப்போதும் மாறலாம்

  • டெல்லி போன்ற நகரங்களில் பட்டாசு வெடிப்பது பல ஆண்டுகளாகவே தடைசெய்யப்பட்டிருக்கிறது. மக்களும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கையே சுற்றுச்சூழல் மாசு, புகை மண்டலங்கள் உருவாவது போன்றவற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. டெல்லிக்கு அருகில் இருக்கும் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் அறுவடைக்குப் பின் வயல்களில் எஞ்சியிருக்கும் கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகைமூட்டம் காற்றுவாக்கில் பரவுகிறது என்றாலும் சுற்றுச்சூழல் சீர்கேடும் காற்று மாசும் பெரும் அச்சுறுத்தல்கள் அல்லவா? பனிக் காலத்தில் ஏற்படும் காற்றின் அடர்த்தியினால் புகைமூட்டம் அவ்வளவு எளிதில் விலகாதது போன்ற காரணங்களுடன், வாகனப் புகையும் சேர்ந்துகொள்கிறது.
  • இதே நிலை இனி பிற மாநிலங்களிலும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எல்லாப் பருவ காலங்களுமே மாறிக்கொண்டிருக்கின்றன. கோடை காலத்தில் உக்கிரமாய்க் கொளுத்தும் வெயிலாக, மழைக் காலங்களில் ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் பெருமழையாக, மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளாக, பனிக்காலங்களில் கடும் மூடுபனியாக என இயற்கையும் தன்னிலை மாற்றம் நோக்கி நகர்ந்துவிட்டது. மக்கள் பொறுப்புணர்வுடன் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய காலமும் சூழலும் உருவாகியிருக்கிறது.

மாறவேண்டிய தருணம்

  • காலம் காலமாக இங்கு பண்டிகைக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இப்போது அனைத்துமே பிரம்மாண்ட வடிவம் பெற்று, எளிமை விடை பெற்றுவிட்டது. போலச் செய்தல்களும் பெருகிப் போனதால் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் என எல்லா மீறல்களும் இங்கு எல்லை மீறுகின்றன. எந்தப் பண்டிகையானாலும் இங்கு சூழலும் சேர்த்தே சிதைக்கப்படுகிறது. ஆயுத பூஜையா? பூசணிக்காயை வீதி எங்கும் போட்டுடைப்பது... விநாயகர் சதுர்த்தியா? பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளைக் கரைத்து, நீர்நிலைகளை மாசுபடுத்துவது... தீபாவளியா? பேரோசையுடன் புகைமண்டலத்தை உருவாக்குவது...
  • போகி என்றால் டயர்களைக் கொளுத்திப் புகையுடன் மூச்சுத் திணறலை ஏற்படுத்துவது என்பதாகத்தான் மாசு நம்மைச் சுற்றிச் சூழ நிற்கிறது. இவை அனைத்தும் இங்கு கடவுளரின் பெயரால் சம்பிரதாயமாக நிகழ்த்தப்படுவதுதான் பேரவலம். சுற்றுச்சூழலியலாளர்கள் சூழலியல் மாசு குறித்து எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் அதை ஏற்க மறுக்கும் மனங்களும் கேட்க மறுக்கும் காதுகளும் பெருகி இருக்கின்றன! அவற்றை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories