TNPSC Thervupettagam

சத்திரத் தொழிலாளர்களுக்கு விடியல் எப்போது?

September 26 , 2024 112 days 128 0

சத்திரத் தொழிலாளர்களுக்கு விடியல் எப்போது?

  • மண்​டபங்​களில் நிகழும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வு​களின்போது அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர்​களைக் கவனித்​திருக்​கிறீர்களா? விருந்​தினருக்கான உணவைச் சமைக்கும் சமையல் கலைஞர்கள், பந்தியில் உணவைப் பரிமாறு​பவர்கள், விருந்தினர் சாப்பிட்ட பின்னர் இலையை எடுக்கும் பணியாளர்கள் போன்றோரின் உழைப்புதான் சுபநிகழ்வை முழுமைபெற வைக்கிறது.
  • அமைப்பு​சாராத் தொழிலா​ளர்​களிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் சத்திரத் தொழிலா​ளர்​களுக்கு என்று நிரந்தர வேலையோ வருமானமோ இல்லை. இவர்களின் உரிமை​களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இல்லை. இவர்களுக்​கென்று தனித் தொழிற்​சங்கமோ, வாரியமோ இல்லை. அரசுக்குப் புலப்படாத சத்திரத் தொழிலா​ளர்​களின் வலிகளைச் சமூகம் அடையாளம் காண வேண்டியது அவசியம்​.

நிரந்​தரமற்ற வேலை:

  • சத்திரத் தொழிலா​ளர்​களுக்கு மாதத்தின் முப்பது நாள்களும் மண்டபங்​களில் வேலை இருக்​காது; முகூர்த்த நாள்களில் மட்டுமே வேலை கிடைக்​கும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் 10 முதல் 15 நாள்கள் வேலை இருக்​கும். மண்டபத்தில் திருமண நிகழ்வு​களின்​போது, முதல் நாள் காலை வேலைக்குச் சென்றால் மறுநாள் மாலைதான் வீடு திரும்ப முடியும். பிறந்​தநாள், வளைகாப்பு போன்ற நிகழ்வாக இருந்தால் காலை 10 மணிக்குச் செல்பவர்கள், அதே நாள் இரவில் எந்நேரமானாலும் வீட்டுக்குத் திரும்​பி​விடுவர்.
  • மண்டபத்​துக்கு அருகிலேயே தொழிலா​ளர்​களின் வீடு இருக்​கும்​பட்​சத்தில் இரவிலேயே வீடு திரும்​புவதற்கு வாய்ப்​பிருக்​கிறது. ஆனால் ஊராட்​சிகள், பேரூராட்​சிகளி​லிருந்து சத்திர வேலைக்கு நகரங்​களுக்குச் செல்பவர்கள் மண்டபத்தில் இரவு தங்கி​விட்டு, மறுநாள்தான் செல்வார்கள். நிகழ்​வொன்​றுக்குச் சம்பளமாக ரூ.700 முதல் ரூ.1,000வரை கிடைக்​கும். காலை 10 மணியி​லிருந்து இரவு 12 மணி நேரம் வேலை பார்த்​தா​லும்கூட இதைவிடக் கூடுதலாக ஊதியம் கிடைத்து​விடாது.

என்னென்ன வேலை?

  • சத்திரத் தொழிலா​ளர்​களின் வேலைகள் கடினமானவை. மிக முக்கிய​மாகக் காலையில் வேலைக்குச் சென்ற​வுடன் ஒட்டுமொத்த மண்டபத்​தையும் கூட்டிப் பெருக்கித் துடைக்க வேண்டும். விழா நடைபெறும் மேடை, சாப்பாடு பரிமாறும் இடம், மணமகன் / மணமகள் அறைகள், விருந்​தினர்​களின் அறைகளையும் தூய்மையாக வைத்திருக்க உழைக்க வேண்டும்.
  • இரவு பந்திக்குப் பின்னர் பாத்திரங்​களைக் கழுவ வேண்டும். சுப நிகழ்வு​களில் வழக்கமாக வீட்டில் பயன்படுத்​தப்​படும் பாத்திரங்​களை​விடப் பன்மடங்கு அதிகமான பாத்திரங்கள் இருக்​கும். அவற்றைக் கழுவுவதற்குள் பலர் களைத்து​விடு​வார்கள். இரவு வேலை முடிக்க இரண்டு மணி ஆகலாம். அதன் பின் தூங்கி​விட்டுக் காலை நாலரை மணிக்குள் எழ வேண்டும். விடியற்​காலை​யிலேயே வேலை தொடங்கி​விடும்.
  • சில நேரம் தூங்கு​வதற்​குக்கூட நேரமில்​லாமல் இரவு முழுவதும் வேலை இருக்​கும். சட்டம் வலியுறுத்தும் 8 மணி நேர உழைப்பு என்பது, இவர்களைப் போன்ற உதிரித் தொழிலாளர்களுக்கு எட்டாக்​க​னி​தான். 14 மணி நேரத்​துக்கு மேலாக உழைக்கும் இவர்களுக்குக் கூடுதல் நேரம் உழைப்​ப​தற்கான தனிச் சம்பளமெல்லாம் கிடையாது.
  • பெண் தொழிலா​ளர்​களின் நிலை: சத்திரத் தொழிலா​ளர்​களில் பெரும்​பாலோர் பெண்கள்​தான். இந்தியச் சமூகக் கட்டமைப்பில் பாத்திரம் கழுவுவது, இன்னொருவர் சாப்பிட்ட எச்சில் இலையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகள் பெண்கள் மீதே திணிக்​கப்​பட்​டிருப்​பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்​கலாம்.
  • அரசு அலுவல​கங்​களி​லும், தனியார் நிறுவனங்​களிலும் வேலை செய்யும் பெண்களுக்கே பாதுகாப்பான பணியிடம் இல்லாத​போது, யார் கண்ணுக்கும் தெரியாமல் அதிக அளவிலான உழைப்பைச் செலுத்தும் இவர்களின் நிலையைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டிய​தில்லை. பெரும்​பாலான சத்திரத் தொழிலா​ளர்​களுக்கு இரவு தூங்கு​வதற்​கென்று தனி அறைகளோ, படுக்கை வசதிகளோ மண்டப உரிமை​யாளரால் வழங்கப்​படு​வ​தில்லை. உணவு பரிமாறும் இடத்தில் அல்லது மணமேடைக்கு அருகில்தான் தூங்கியாக வேண்டும்.
  • ஒரே பகுதியைச் சேர்ந்த ஆண் - பெண் என்று இருபாலர் கொண்ட குழுவாகச் சத்திர வேலைக்குச் செல்லும்போது அங்குள்ள பெண்களுக்கு, விருந்​தினர்​களால் தொந்தரவு நேர்ந்​து​விடாது. ஆனால், பெண்கள் மட்டுமே தனிக் குழுவாகச் சத்திர வேலைக்குச் செல்லும்​போது, அவர்களுக்குப் பாதுகாப்​பில்லாத சூழல் நிலவு​கிறது. உடலளவிலும் மனதளவிலும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் புகார் அளிப்​ப​தற்கான ஐசிசி - உள்ளகப் புகார் குழு போன்ற அமைப்பு அவர்களுக்கு இல்லை.
  • பொதுவாகவே, அமைப்பு​சாராத் தொழில்​களில் ஈடுபடும் பெண்கள் மீது நிகழ்த்​தப்​படும் வன்முறைக்கு நீதி பெறுவதற்கு எந்தவித அமைப்பும் இல்லை. நள்ளிரவில் வேலை முடிந்தால் அதே ஊரில் வீடு இருக்​கும்​பட்​சத்தில் நள்ளிர​விலும் இவர்கள் தனியாக நடந்துசெல்ல நேர்கிறது. பாதுகாப்பான போக்கு​வரத்து வசதியை ஏற்படுத்தித் தர மண்டப உரிமை​யாளர்கள் முன்வருவதில்லை.
  • குழந்தைகளை வீட்டில் விட்டுவர முடியாத​தால், இத்தொழிலா​ளர்கள் அவர்களைத் தங்களுடனே அழைத்து​வரு​கின்​றனர். இதனால், பெற்றோர் அனுபவிக்கும் சிரமங்​களைக் குழந்தை​களும் அனுபவிக்​கிறார்கள். சத்திரத் தொழிலா​ளர்கள் தொடர்ச்​சி​யாகத் தண்ணீரில் வேலை செய்வதால் காய்ச்சல் ஏற்படலாம், வழுக்கிக் கீழே விழுவதும் நேர்கிறது. இதனால் சிறிய அல்லது பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏற்படு​கின்றன. அதற்கான மருத்​துவச் செலவுக்கு மண்டப உரிமை​யாளர்கள் பொறுப்​பெடுத்​துக்​கொள்​வ​தில்லை. சொற்பத் தொகையைக் கொடுத்துப் பேரிழப்பைச் சரிகட்டப் பார்க்​கிறார்கள்.

சமூகம்​-அரசின் கடமை என்ன?

  • ஏனைய அமைப்பு​சாராத் தொழிலா​ளர்​களைப் போலவே சத்திரத் தொழிலா​ளர்​களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்​கப்​படு​கின்றன. சட்டப் பாதுகாப்பும் இல்லை. இந்நிலை மாற வேண்டும். சத்திரத் தொழிலா​ளர்​களுக்குத் தனி வாரியம் அமைக்​கப்பட வேண்டும் அல்லது வீட்டு வேலை வாரியத்தில் இவர்களையும் இணைத்​துக்​கொள்ள வேண்டும். குறைந்​தபட்ச ஊதியம் நிர்ண​யிக்​கப்பட வேண்டும்.
  • இரவு நேரம் மண்டபத்தில் தங்கு​கிறார்கள் என்றால், அவர்களுக்​கென்று தனி அறையும் படுக்கை விரிப்பு​களும் கொடுக்​கப்பட வேண்டும். பாலியல் புகார்களை விசாரிக்க மண்டல அளவிலான ஐசிசி குழுவை நிறுவ வேண்டும். சத்திரத் தொழிலா​ளர்​களின் சுயமரி​யாதையை உறுதிப்​படுத்தும் கடமை அரசுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்​துக்கும் உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories