- பல வகைகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது 2024 மக்களவைத் தேர்தல். அதற்கு முந்தைய கடைசித் தேர்தலான மிஸோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா - ஐந்து மாநிலத் தேர்தலை அரசியல் ஆர்வமுடைய எவரும் கவனிப்பது அவசியம்.
- பத்தாண்டுகளில் பிரதமர் மோடியும், பாஜகவும் எத்தகைய மாற்றங்களைத் தேர்தல் களத்திலும் சமூகத்திலும் உருவாக்கியுள்ளனர் என்பதை மிக நெருக்கமாகக் காட்டும் தேர்தல் இது. அரிதாக, பாஜகவுக்கு இணையாகவோ, பாஜகவைக் காட்டிலும் பலமாகவோ காங்கிரஸ் உள்ள மாநிலங்கள் இவை.
- 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் நாடு தழுவிப் பயணித்து, ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரை எழுதிய சமஸ், 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிய பயணத்துக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலை ஒட்டிப் பயணித்தார். தேர்தல் மாநிலங்களின் வரலாற்று - சமூக - அரசியல் பின்னணியுடன் அந்தந்த மாநிலத்தவர்களுடனான உரையாடலின் அடிப்படையில் 5 மாநிலங்களின் சூழலையும் இங்கே தருகிறார்.
- முன்னதாக ‘தினமலர்’ இதழில் வெளியான கட்டுரைகளின் முழு வடிவம் இப்போது ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிறது.
- சத்தீஸ்கரில் பயணிக்கும்போதெல்லாம் பல கலாச்சாரங்களும் கலந்து ததும்பும் ஒரு மணம் நாசியில் மோதும். இந்தியாவை வெறுமனே வடக்கு – தெற்கு என்று பிரித்துப் பார்ப்பது அபத்தம். இங்கே பல நீரோட்டங்கள் உள்ளன. மேற்கே ராஜஸ்தானில் ஆரம்பித்து, மத்திய பிரதேசம் – சத்தீஸ்கர் உள்ளடக்கி கிழக்கே ஒடிஷாவில் முடியும் குறுக்கு வெட்டு அப்படி ஒரு தனித்துவப் பிராந்தியம்.
- வரலாற்றில் வெவ்வேறு ஆட்சிகளில், வெவ்வேறு பிராந்தியங்களோடு இவை கலந்திருந்ததும், சமகாலத்தில் பல மாநில எல்லைகளை இவை தொட்டுக்கொண்டிருப்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். மக்கள் குறுக்கிலும் நெடுக்கிலுமாக நெடும் பயணம் சென்றிருக்கிறார்கள். இன்றைய சத்தீஸ்கர் ஏழு மாநிலங்களோடு தன்னுடைய எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்கண்ட், ஒடிஷா, ஆந்திரம், தெலுங்கானா.
- சத்தீஸ்கர் கொண்டிருக்கும் வளங்களைக் கண் கொண்டு நோக்கினால், இங்குள்ள மக்களிடம் வெளிப்படும் ஏழ்மைக்காக நம்முடைய ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனையும் கொடுக்கலாம் என்று தோன்றும். மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசத்துக்கு அடுத்து நாட்டிலேயே பெரும் வனப் பகுதியைக் கொண்டது சத்தீஸ்கர். மாநிலத்தின் பரப்பில் 40%க்கும் மேல் வனம் என்பதோடு, ஏராளமான கனிம வளங்களைக் கொண்டது. நாட்டிலேயே அதிகமான நிலக்கரி இருப்பைக் கொண்டுள்ள மாநிலங்களில் ஒன்று; எஃகு வளமும் அதிகம். நல்ல நீர் வளம்; வளமான நிலம். கேடு கெட்ட நிர்வாகம்தான் முதன்மைப் பிரச்சினை. நெடுங்காலம் ஆட்சியாளர்களால் பாராமுகத்துடன் அணுகப்பட்டது இந்தப் பிராந்தியம்.
- இன்னமும் நான்கில் மூவருக்கு வேளாண்மைதான் வாழ்வாதாரம். மாநிலத்தின் மத்திய பகுதியில் மகாநதி பாய்கிறது. ஷியோநாத், இந்திராவதி, அர்பா, ஹஸ்தியோ, கெலோ, சோன், ரேஹர், கன்ஹர் என்று சிறிதும் பெரிதுமாகப் பல ஆறுகள் இருக்கின்றன. போதுமான அளவுக்கு மழை பெய்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு அபரீத நீர்; பல மாதங்களுக்கு நீர்ப் பற்றாக்குறை எனும் பிரச்சினையில் உழல்கிறார்கள் விவசாயிகள். விரிவான நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு துறையும் இப்படித்தான் இருக்கின்றன.
பஸ்தர் எனும் குறியீடு
- எவ்வளவு அலட்சியமாக சத்தீஸ்கரை நம் அரசுகள் நிர்வகித்தன என்பதற்கு இன்று மாவோயிஸ்ட்டுகளுடன் அடையாளம் காணப்படும் பஸ்தர் பிராந்தியத்தை ஓர் உதாரணமாகக் கூறலாம். வரலாற்றுரீதியாகவே தீவிரமான படையெடுப்புகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளான பிராந்தியம் இது. நம்முடைய சோழர்கள்கூட தம்முடைய ஆளுகைக்குக் கீழ் இதை வைத்திருந்திருக்கிறார்கள்.
- இப்போது பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பஸ்தர், இந்திய அரசால் ஒருகாலத்தில் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டபோது அதன் பரப்பளவு 39,114 ச.கி.மீ. அதாவது, கேரளத்தைக் காட்டிலும் – நாடுகளோடு ஒப்பிட வேண்டும் என்றால் பெல்ஜியம், இஸ்ரேலைக் காட்டிலும் – பெரியதாக இருந்தது. பழங்குடி மக்கள் அங்கே பத்துக் குடும்பங்கள், இங்கே இருபது குடும்பங்கள் என்று சிதறியிருப்பார்கள். என்ன லட்சணத்தில் நிர்வாகம் நடந்திருக்கும் என்று பாருங்கள்.
- சத்தீஸ்கரின் வளர்ச்சிக் கதையை அது மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவெடுத்த 2000க்குப் பிறகே ஆரம்பிக்க வேண்டும். புதிய மாநிலத்தின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்ற காங்கிரஸின் அஜித் ஜோகியின் ஆட்சி நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 2003 தேர்தலில் பாஜக வென்றது; அடுத்த 15 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத முதல்வராக ரமண் சிங் நிலைத்ததற்கு முந்தையவரின் ஆட்சி உண்டாக்கிய ஆழமான அதிருப்தி முக்கியமான காரணம். பாஜகவுக்கு இங்கே ஒரு வலுவான தூணாக ரமண் சிங் இருந்தார்.
நிலைத்த ஆட்சியின் விளைவுகள்
- அரசியல் ஸ்திரத்தன்மை நீடித்ததால், அதே காலகட்டத்தில் சத்தீஸ்கரோடு புதிதாக உருவாக்கப்பட்ட அண்டை மாநிலமான ஜார்கண்ட் அல்லது தாய் மாநிலமான மத்திய பிரதேசத்தோடு ஒப்பிட சத்தீஸ்கர் வளர்ச்சி மேம்பட்டதாக இருந்தது. ஆனால், பிராந்தியங்கள் இடையிலான சமநிலையின்மை, சமூகங்களுக்கு இடையிலான சமநிலையின்மையை ரமண் சிங் அரசு சீரமைக்கத் தவறியது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே, சமூகங்களுக்கு இடையே பாரதூர வேறுபாடுகள். ஊழல் புகார்களும் இருந்தன. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக பழங்குடியின மக்களைக் கொண்டே அவர் உருவாக்கிய ‘சல்வாஜுடும்’ எதிர்ப்படை நாடு முழுவதும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
- சத்தீஸ்கரில் மாறிவரும் அரசியல் சூழலுக்கும் ரமண் சிங் பின்புலம் பொருத்தமானதாக இல்லை. காங்கிரஸில் திக்விஜய் சிங் போன்ற ராஜபுத்திர சமூகத் தலைவர் கோலோச்சிய காலகட்டத்தில் பாஜகவும் அதே சமூகத்தைச் சேர்ந்த ரமண் சிங்கை வளர்த்தெடுத்தது. காங்கிரஸ் ஆட்டக்காரர்களை மாறும்போது பாஜகவும் ஆட்டக்காரர்களை மாற்ற முற்படுகிறது. 2018இல் சட்டமன்றத்தின் 90 இடங்களில் 68 இடங்களைக் காங்கிரஸ் வென்றபோதே ரமண் சிங் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. 2023 தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அவர் இல்லை என்பதை ஓராண்டுக்கு முன்பே தேசியத் தலைமை அறிவித்துவிட்டது.
சமூகநீதிக் கேள்விகள்
- மக்கள்தொகையில், 93% இந்துக்கள், வெறும் 2.2% முஸ்லிம்கள், 1.9% கிறிஸ்தவர்கள் என்பதால், இங்கே வழக்கமான கதையாடல் செல்லுபடி ஆகவில்லை. தவிர, காங்கிரஸ் எல்லா வகைகளிலும் இங்கே பாஜகவோடு மல்லுக்கு நிற்கிறது. பாஜக தலைவர்கள் உத்தர பிரதேசத்தில் 2024இல் திறக்கப்படவுள்ள ராமர் கோயிலைப் பற்றிப் பேசினால், தங்களுடைய ஆட்சியில் 2020இல் சத்தீஸ்கரில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்துகொண்டிருக்கும் கௌசல்யா கோயிலைப் பற்றி காங்கிரஸார் பேசுகிறார்கள்.
- சமூகரீதியாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரே அதிகம் – 43%. சாதி சார்ந்து பார்த்தால், குர்மி, சாஹு இரண்டும் இங்கே பெரியவை. பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் வரும் இந்த இரு சாதிகளும் மாநில மக்கள்தொகையில் 35% அளவுக்கு இருக்கிறார்கள். ஆக, காங்கிரஸில் குர்மி சமூகத்தைச் சேர்ந்த புபேஷ் பெகல் முதல்வராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் என்றால், பாஜகவில் சாவோ சமூகத்தைச் சேர்ந்த அருண் சாவோ மாநிலத் தலைவராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்.
- இரு கட்சிகளுமே பிற்படுத்தப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறுகின்றன. சத்தீஸ்கரில் 58% இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. பழங்குடிகளுக்கும் (30%), தலித்துகளுக்கும் (12%) கிட்டத்தட்ட அவர்களுடைய மக்கள்தொகைக்கு இணையாக இந்த ஒதுக்கீடு உள்ள அதேசமயம், பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே (14%) பிரதிநிதித்துவம் உள்ளது.
- பெகல் தன்னுடைய ஆட்சியில் இடஒதுக்கீட்டின் அளவை 76% ஆக உயர்த்த முயன்றார்: பழங்குடியினர் 32%, தலித்துகள் 13%, பிற்படுத்தப்பட்டோர் 27%, முற்பட்ட சாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு 4% என்று அவருடைய முன்மொழிவு இருந்தது. சத்தீஸ்கர் சட்டமன்றம் நிறைவேற்றிய இதற்கான தீர்மானத்தை ஆளுநர் அனுஷுயா கிடப்பில் போட்டார். இந்த விவகாரத்தை வைத்து பாஜகவை விளாசுகிறார் பெகல். தவிர, ‘சத்தீஸ்கர் அரசியலை சத்தீஸ்கரிகளே தீர்மானிக்க வேண்டும்’ என்பதும் உரக்கப் பேசப்படுகிறது.
- எல்லாப் பகுதிகளுக்கும் அரசின் சேவை சென்றடைய வேண்டும்; ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு திட்டத்தின் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற கணக்கில் பெகல் தெளிவாக இருக்கிறார். நிலமற்றவர்களுக்கு வருஷத்துக்கு ரூ.7,000 வழங்கும் ‘பூமிஹின் கிருஷி மஸ்தூர் யோஜனா’ பெகல் கொண்டுவந்திருக்கும் ஒரு முன்னோடி திட்டம் என்று சொல்லலாம். கிராமப் பகுதிகளில் வாரம் ஒரு பிரமாண்ட சந்தையைக் கூட்டுவதோடு, அங்கு நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட அரசின் சேவைகளைக் கொண்டுசெல்லும் ‘முக்கிய மந்திரி ஹாட் பஜார் யோஜனா’வுக்கும் அரசு சார்பில் புதிதாகத் தொடங்கப்படும் ஆங்கிலப் பள்ளிகளுக்கும் மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டுசேர்ப்பதில் பெகல் அரசு சுணக்கம் காட்டியது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது; பாஜக இதை ஒரு பேசுபொருள் ஆக்கியிருக்கிறது.
பகிர்வின் அடுத்த கட்டம்
- பாஜகவில் ரமண் சிங்குக்கு இணையாக ஒரு தலைவர் உருவெடுக்கவில்லை. மாநிலத்தில் கட்சியின் பழங்குடி சமூக முகமாக இருந்த மூத்தத் தலைவர் நந்த்குமார் சாய் சில மாதங்களுக்கு முன் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். மூன்றாவது வரிசையில் உருவெடுத்திருக்கும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தன்னுடைய வாக்கு வங்கியைப் பதம் பார்க்கலாம் என்ற அச்சமும் அதற்கு இருக்கிறது.
- இவ்வளவுக்கு மத்தியிலும் மிகத் தீவிரமாகத் தேர்தல் பணிகளை பாஜக கையாண்டது. மூன்று மாதங்களுக்கு முன், ‘பெரும் வெற்றி பெறுவோம், என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் ‘கடுமையான போட்டிதான்’ என்றார்கள். இரு கட்சிகளும் ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துள்ளன. யார் வென்றாலும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டார்கள்.
- பழங்குடி சமூகப் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘எந்தக் கட்சியாகவும் இருக்கட்டுமே; எங்களுக்கு ஏற்ப அது மாற வேண்டும்; அதிகாரம் இன்னும் பரவலாக வேண்டும்; பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் வர வேண்டும்’ என்றார். எனக்கு எல்லாவற்றினும் அவர் குரல் முக்கியமாகத் தோன்றியது!
நன்றி: அருஞ்சொல் (29 – 11 – 2023)