TNPSC Thervupettagam

சனாதன தர்மமும் பெண்ணியமும்

September 16 , 2019 1897 days 1258 0
  • பெண்ணியம் என்பது பெண்ணின் சுதந்திரமான செயல்பாடு அல்லது பெண்ணின் பார்வையில் இருந்து ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்கிறார்கள். இரண்டுமே ஏற்புடையதுதான் என்றாலும் ஒரு பெண், தான் என்னவாக இருக்க விரும்புகிறாள், எதைச் செய்ய முற்படுகிறாள் என்பதைப் பொருத்து அதிலும் தரம் பிரிக்கும் நிலை தோன்றிவிட்டது. இதனால் பெண்ணியம் என்னும் கருத்தாக்கமே நீர்த்துப் போகிறதோ என்று தோன்றுகிறது.
  • கட்டற்ற சுதந்திரம் என்பது சமூக வாழ்வில் சாத்தியமில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விதத்தில் செயலாற்றுவது என்பதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழு வாழ்க்கையில் சாத்தியமில்லாதது. குழு வாழ்க்கை என்பது மனித சமூகத்திற்கு மிக அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தனிப்பட்ட நபரின் விருப்பம்

  • அரவணைத்துச் செல்லுதல்  என்பது  அத்தியாவசியமான பண்பாடு.  மனித இனத்துக்கு அரவணைத்துச் செல்ல வேண்டிய பண்பு அத்தியாவசியம் எனில் தனிப்பட்ட நபரின் விருப்பம் என்பது இரண்டாம் இடத்தில்தான் வருகிறது. தனிப்பட்ட நபரின் விருப்பத்தை மட்டுமே மனதில் கொள்வோமேயானால் அங்கே குழு வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
  • தமது விருப்பத்திற்கேற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான உரிமை இரு பாலருக்கும் இருக்க வேண்டும். பெண்களுக்கு அத்தகைய உரிமை சில காலங்களாக மறுக்கப்பட்டிருக்கிறது.
  • அதே நேரத்தில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஒரு பெண் எத்தகைய கல்வியை  தான் பெற வேண்டும் என்று விரும்புகிறாள், தன்னை என்னவாகச் செய்து கொள்கிறாள் என்பது அவளது தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில் குழு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் ஆண் - பெண் இரு பாலருக்கும் பொறுப்பு உண்டு.
  • பெண் என்பவள் மனித சமூகத்தின் மிகச் சிறந்த பாதி என்கிறார் மகாத்மா காந்தி. சிறந்த பாதியோ என்னவோ, ஆனால் அவளும் இந்தச் சமூகத்தில் பாதி. அவளது விருப்பங்களுக்கும் லட்சியங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். 
  • ஐ.நா. பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்பதை தனது வாழ்வின் லட்சியம் என்று ஒரு பெண் சொல்லும்போது அவளை மிகுந்த பெருமையோடு, சிறந்த லட்சியவாதியாக அடையாளப்படுத்தும் சமூகம், இல்லத்தரசியாக இல்லம் பேண வேண்டும் என்றும் அதிகாலையில் எழுந்து கோலம் இட்டு பாசுரம் பாடி குழந்தைகள் பேணி இன்பமாய் வாழ வேண்டும் என்றும் கருதும் பெண்ணை அவமதிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரது விருப்பம் எப்படியோ அப்படி வாழ்வதற்கான உரிமை உண்டு.

பெண்ணியக் கருத்தாக்கம்

  • இரு பெண்களுமே சமமாகப் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெண்ணியக் கருத்தாக்கம் தரும் தீர்வாக இருக்க வேண்டும். பெண்ணியம் என்பது சமூக வாழ்வில் பெண்கள் காட்டும் தீவிரம் அல்லது சமூக வாழ்வில் அவர்கள் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளுதல் என்ற நிலையில் உயர்ந்ததாகவும் இல்லத்தரசியாக தங்களை வைத்துக் கொள்ள விரும்பும் பெண்களைத் தாழ்வாகவும் கருதுவது எவ்விதத்திலும் நியாயமற்றது. இல்லம் பேணும் பெண்களும் இருந்தாக வேண்டும்; அப்போதுதான் சமூகம் மிகச் சிறந்த பாதையில் நடைபோட முடியும்.
  • உயர்  கல்வி பெற்ற பெண் இல்லத்தரசியாக இருக்கும் நிலையில், அவரை இவ்வளவு படித்துவிட்டு ஏன் சும்மா இருக்கிறாய் என்று கேட்கிறது இந்தப் பெண்ணியச்  சமூகம். அவள் சும்மா இருக்கவில்லை என்பதைக் கூட உணர முடியாத நிலையில் இருக்கும் நாம், அவளைவிட எவ்விதத்தில் உயர்வானவர்கள்? அவள் சும்மா இருக்கவில்லை; ஒரு மிகச் சிறந்த தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்;
  • நம்முடைய பாரம்பரியங்களை கலாசார நிகழ்வுகளைப் பேணுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறாள். இது எவ்விதத்திலும் தவறு இல்லை. வேலைக்குச் செல்லும் பெண்கள் உயர்வானவர்கள் என்றோ வீட்டில் இருந்து குடும்பம் பேணும் பெண்கள் அவர்களைவிட ஒருபடி குறைவானவர்கள் என்றோ எண்ணுவது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துமே தவிர வேறு எந்தப் பலனையும் தராது.
  • இத்தகைய பெண்களைக் கட்டுப்பெட்டித்தனமானவர்கள் என்றும் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் என்றும் கருதுகிறார்கள். இது எவ்விதத்திலும் சரியல்ல. இல்லத்தரசிகளாக வாழும் பெண்களிலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் உண்டு.
  • முற்போக்கு சிந்தனை என்பது நம் சமூகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது அல்லது ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவது. இத்தகைய செயலில் ஏறத்தாழ நம் தேசத்தின் எல்லாப் பெண்களுமே ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பல சீர்திருத்தங்களுக்கும் புதுமைகளுக்கும் வழிகோலியவர்களும் ஏற்றுக்கொண்டவர்களும் இந்த இல்லத்தரசிகளே.
  • இப்படி இல்லத்தரசிகளாக வாழும் பெண்கள் மீது ஒரு விமர்சனம் அண்மைக்காலமாக வைக்கப்படுகிறது. அவர்கள் சனாதன தர்மத்தின் பிடியில் சிக்குண்டு வெளியேற முடியாத நிலையில் இருப்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. ஒரு பெண் பெண்ணிய சித்தாந்தமோ அல்லது சனாதன தர்மத்தின் வழி வாழ்வதோ எதுவாயினும் அது அவள் மனதிற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அவள் அதிலே விருப்பம் கொண்டு ஈடுபட வேண்டும் அவ்வளவே.
    பெண்ணியம் போன்ற கருத்தாக்கங்களைப் பிரதானமாக தங்கள் வாழ்வில் பின்பற்றுவதாகக் கூறும் பெண்கள், அவர்களுக்கு அத்தகைய உரிமை இருக்கும்போது சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதனைப் பின்பற்ற விரும்பும் பெண்களிடத்தில் குறை காண்பதில் அர்த்தமில்லை. ஒவ்வொருவரும் தத்தமது கருத்தாக்கங்களை அறத்தைப் பின்பற்ற முயல்வதில் அவர்களுக்கான சுதந்திரம் இருக்கிறது.

சனாதன தர்மம்

  • சனாதன தர்மம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நம் தேசத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஓர் உயர்ந்த அறம். காலப்போக்கில் எல்லாக் கோட்பாடுகளிலும் பிரச்னைகளும் நீர்த்துப்போகும் தன்மையும் ஏற்படுவதைப் போலவே சனாதன தர்மத்திலும் தர்மத்தைப் பின்பற்றுபவரிடமும் பிரச்னைகள் எழுந்துள்ளன என்பது உண்மை. அதே நேரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வாழ்வியல் முறையை முற்றிலுமாகத் தவறானது என்று ஒதுக்கிவிட முடியாது. அந்த விதிமுறைகளையும் அறத்தையும் ஏற்று இந்த தேசம் பல காலம் மிகச் சிறப்பான நிலையில் இருந்திருக்கிறது. சனாதன தர்மத்தின் பெயரால் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கும் குறைகளைக் களைந்து விட்டு உன்னதமான வளர்ச்சிக்கு வழிகோலும் அல்லது அமைதியான வாழ்வியல் முறையை நமக்கு போதிக்கும் அறத்தைப் பின்பற்றுவதில் தவறு என்ன?
  • இன்றைய கல்வி அறிவு கொண்ட பெண், இதனைப் பகுத்தறிந்து சனாதன தர்மத்தின் அறங்களை மீண்டும் தெளிவாகப் பின்பற்றுவதில் தவறு இல்லை. நமது கலாசாரத்தை, பண்பாட்டைப் பேணுகிறார்கள் என்னும் உயர்ந்த நிலையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
  • பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வியும் வாழ்வும் சாத்தியப்பட வேண்டும். இந்த உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படைச் சித்தாந்தமாகவும், வளர்ச்சிக்கான பாதையாகவும் இருக்க முடியும். இதனை சனாதன தர்மம் அளிக்குமெனில், அதைப் பின்பற்றுவதில் என்ன தவறு?

தமிழகத்தில்....

  • தமிழகத்தைப் பொருத்தவரை திராவிடம் என்ற சிந்தனை இங்கே ஒரு பிரிவினரிடம் மேலோங்கி இருக்கிறது. தமிழன் என்றாலே அவன் சனாதன தர்மத்தில் இருந்து மாறுபட்டவன் என்ற கருத்தை இந்தத் திராவிட சிந்தனை முன்வைக்கிறது. இதற்கு பல மறுப்புகளைக் கூற முடியும்.
  • பெண்கள், அவர்களது உரிமைகள், விருப்பங்கள் என்பதைப் பொருத்தவரை சங்க காலம் தொட்டு இங்கே ஒரு மிகச் சிறந்த வாழ்வியல் முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. இரண்டுமே அன்பை போதிக்கின்றன; அறத்தை வலியுறுத்துகின்றன. சங்க இலக்கியங்களோ அல்லது வடமொழி வேதங்களோ இரண்டுக்கும் கருத்தியல் ஒற்றுமைகள் உண்டு. 
  • பெண்கள் தொடர்பான செய்திகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் பெண்களின்  கல்வி முதல் தொழில், திருமணம் என்று எல்லா நிலைகளிலும் அவர்களுக்கான உரிமைக் களம், வாய்ப்பு இவற்றைத் தெளிவாக இரு இலக்கியங்களும் கூறுகின்றன. சனாதன தர்மம் எனும் பெயரை ஒதுக்கிவிட்டு வாழ்வியல் அறம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோமேயானால் இரண்டுக்கும் பெரிய வேறுபாட்டை நாம் காண முடியாது. சங்கப் பெண்கள் தாம் விரும்பிய வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்களும் விவசாயத்தில், தொழில்களில் தங்கள் பங்களிப்பை உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.
  • பெண்ணியம், ஒரு பெண்ணின் முடிவெடுப்பதற்கான சுதந்திரத்தையோ அல்லது அவளது தொழில்முறை சுதந்திரத்தையோ பற்றிக் குறிப்பிடுவதாக இருக்குமேயானால் அத்தகைய கோட்பாடுகள் வாழ்வியல் முறையாக நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றன.
  • எந்த ஒரு பெண்ணும் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமை உடையவள் என்பதை மீண்டும் மீண்டும் நமது இலக்கியங்களும் வேதங்களும் வலியுறுத்தவே செய்கின்றன. உலகுக்கே அறம் சொல்லும் வாழ்வியல் முறை நம்மிடம் இருக்க இரவல்களைப் பெருமையாய் கருத வேண்டிய அவசியமில்லை.

நன்றி: தினமணி (16-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories