TNPSC Thervupettagam

சன்மார்க்க மெய்யியலாளர் திரு.வி.க.

September 17 , 2023 481 days 377 0
  • திரு.வி.க. (1883-1953) என்கிற திருவாரூர் விருத்தாசல – சின்னம்மாள் தம்பதியினரின் மகன் கலியாணசுந்தனார் தோன்றி 140 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மறைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தமிழ்ச் சமுதாயத்தின் அச்சு அசலான மூலமுதல் சிந்தனையாளர்களில் ஒருவர்.
  • நாடு, மொழி, நிறம், வகுப்பு, சாதி, மதம் முதலானவற்றால் உருவாகும் வேற்றுமை உணர்வையும் மனிதர்களிடையே உள்ள எல்லா வகை ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்து, அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வைத் தழைக்கச்செய்து, அரசு முதலான வன்முறைக் கருவிகள் ஒழிந்த சமத்துவ சமுதாயத்தைக் திரு.வி.க. கனவு கண்டார். இக்கனவின் பொருட்டு, தெற்காசியச் சிந்தனைகளையும் உலகச் சிந்தனைகளையும் ஒருசேர அளந்து பயின்று, சிந்தித்து, சன்மார்க்கத்தை – மெய் இயற்கை நெறி என்கிற மெய்யியலை முன்மொழிந்தார்.
  • உலகு பொது எனக் கனவு கண்ட, அதற்கான மெய்யியலைத் தேடி உருப்படுத்திப் போதித்த, செயல் பட்ட திரு.வி.க. என்கிற பேருருவை நினைவில் வைத்துள்ளோமா? இல்லை, தேசியவாதிகள் பலரில் ஒருவர் என்றே வழக்கமாக நினைவுகூர்கின்றோம். இது போதாது என நினைக்கிறேன்.

திரு.வி.க.வின் காலமும் உலகங்களும்

  • சாதி, மதவெறி, சம்பிரதாயச் சிறுமை, கண்மூடி வழக்க ஒழுக்கம், தீண்டாமை, பெண்ணடிமை முதலானவை நிரம்பி வழிந்து, மக்கள் அடிமைத்தனத்தில் உழன்ற காலத்தில் பிறந்தவர் திரு.வி.க. அவருமே சிறுவயதில் தம் காலச் சிறுமைகளில் சிக்குண்டு அலைக்கழிந்தவர். அருட்பா – மருட்பா போரில், வள்ளலாரின் பாடல்களை மருட்பா என வாதிட்டோரின் பக்கமே நின்றவர். மதவெறி கொண்டு புத்தச் சங்கத்தில் கலகம் விளைவித்தவர். ஆயினும் திரு.வி.க-வுக்கு இருந்த உயிர் இரக்கம், அறிவு ஆர்வம் வழியாகத் தம் காலச் சிறுமைகளிலிருந்து விடுபட்டார், சன்மார்க்கத்தை வந்தடைந்தார். அதன் பின்னர் சமய உலகில் மட்டுமல்லாது, எவ்வுலகிலும் சன்மார்க்கத்தையே பற்றிநின்றார்.
  • தம் காலச் சிறுமைகளிலிருந்து விடுபட்ட திரு.வி.க. பல உலகங்களில் பயணித்தார். தமிழ்ப் புலமை உலகிலும் தமிழ் இதழியல் உலகிலும் தலைசிறந்தவராக விளங்கினார். அரசியல் உலகில் தேசிய இயக்கத்தவராகத் தொடங்கினார். பெரியாரைப் போலத் தேசியவாத இயக்கத்திலிருந்து விலகிச் சென்றுவிடவில்லை. ஆனால், தேசியவாத இயக்கத்தின் ஆதிக்க பாசிச போக்கைக் கண்டித்தவர். ‘திராவிட நாடு’ கோரிக்கையை ஆதரித்தவர். தொழிலாளர்இயக்க உலகில் தொடர்ந்து உழைத்தவர். பல வேறுபட்ட உலகங்களில் பயணித்தபோதிலும், எங்கும் சன்மார்க்கத்தை – மெய் இயற்கை நெறியைப் பற்றி ஒழுகினார், பரப்பினார்.
  • தம் காலத்தில் மிகவும் வேறுபட்ட மனிதராக விளங்கினார். சாதி வேற்றுமை உணர்வு மேலோங்கிய சைவ சபைகளில் சாதி-தீண்டாமை ஒழிப்பைப் பேசினார். சுயமரியாதை இயக்கத்தவர் களிடையே சன்மார்க்கத்தின் மேன்மையை வலியுறுத்தினார். கருத்து மாறுபாடு கொண்டவர்களும் அன்பு பாராட்டும் வண்ணம் திரு.வி.க-வின் சிந்தனையும், பேச்சும், செயலும் அமைந்தன. அதனால்தான் ‘தமிழ்த் தென்றல்’ ஆனார்.

அரசியல் உலகின் முரண்பாடுகள்

  • பெரியாரைவிட (1879-1973) நான்கு வயது இளையவர் திரு.வி.க. பெரியார் மறைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னமே, 1953 இல் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று மறைந்துவிட்டார். 1919 முதல் மறையும் வரை, 34 ஆண்டுகள் பெரியாரும் திரு.வி.க.வும் மிக நெருக்கமான நண்பர்கள். இவ்விருவரிடையே அரசியல் - கருத்து உலக நட்பு ஆறு ஆண்டுகள்தான் (1919-1925).பிறகு, தொடர்ந்து மாறுபட்டு கருத்துச் சமர் புரிந்தனர். காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சி மாநாட்டில், வகுப்புவாரி உரிமைமுன்மொழிவின்போது திரு.வி.க., பார்ப்பனர் அல்லாதாருக்குத் துரோகம் செய்துவிட்டார் எனப் பெரியார் கடும் சொல்லம்புகளைத் தொடுத்தார். திரு.வி.க. அமைதி யாகவே பதில் அளித்தார்.
  • வகுப்புவாரி உரிமை தொடர்பாக எழுந்த சிக்கலில் பெரியார் 1925இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 1926இல் திரு.வி.க. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். தம் மாநாட்டு முடிவுக்கு மாறாக, காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ள முயன்றதே திரு.வி.க. விலகிக்கொள்ளக் காரணம். ஆயினும் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார். பெரியார் சுயமரியாதை இயக்கத்தை நடத்தியபோது, திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்துக்குத் தலைமை வகித்தார். நீதிக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தவர் திரு.வி.க. ஆனால்,ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் இயக்கப் போராட்டம் காரணமாக, திரு.வி.க.வை நாடு கடத்த முயன்றபோது, அதைத்தடுத்து நிறுத்தியது நீதிக் கட்சி அரசாங்கம். ஆனால், நாடு விடுதலை அடைந்தபோது, அதே தொழிலாளர் இயக்கப் போராட்டம்காரணமாக, திரு.வி.க.வை காங்கிரஸ் கட்சி அரசாங்கம் வீட்டுக்காவலில் அடைத்தது. இவ்வாறு திரு.வி.க.வின் அரசியல் உலகில்பல முரண்பாடான வேடிக்கை நிகழ்வுகள் நடந்துள்ளன. இவை ஏதோஒருவகையில் திரு.வி.க-வின் சன்மார்க்க மெய்யியல் தேடலை ஊக்குவித்தன.

சன்மார்க்கமும் சுயமரியாதையும்

  • 1925 முதல் 1953 வரை திரு.வி.க. பெரியாருடனும் திராவிட இயக்கத்தவர்களுடனும் கருத்து மாறுபாடு கொண்டார்; அதே வேளையில், சமூகச் சீர்திருத்தம் என்கிற புள்ளியில் கருத்து உடன்பாடும் கொண்டிருந்தார். இதனால், இவ்விரு தரப்பாரிடையே பல உரையாடல்கள் நடத்துள்ளன. அந்த உரையாடல்கள் பல வேளைகளில் ஆழமான மெய்யியல் தேடலை மேற்கொள்ள இருதரப்பினருக்கும் உதவி செய்தன. சில வேளைகளில், கடும் சொல்லம்புகளைத் தொடுக்கும் போராகவும் மாறியுள்ளன. எவ்வாறாயினும் இந்த உரையாடல்களை மீள் வாசிப்பு செய்வது, நவீன தமிழ்ச் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்துகொள்ளவும் வலுப்படுத்தவும் உதவும்.
  • நவீன தமிழ்ச் சிந்தனை உலகில் சனாதனம், சன்மார்க்கம், சுயமரியாதை ஆகிய மூன்றுவிதமான சிந்தனை ஓட்டங்கள் உள்ளன. சனாதனச் சிந்தனை பழமைப் பிடிப்புள்ளது. சாஸ்திர, சாதி, மதப் பித்துக்கள் பிடித்தலையும் மனப்பாங்கு அது. சன்மார்க்கச் சிந்தனை பழமையில் புதுமை காணும். சாஸ்திர, சாதி, மதப் பித்துக்களை அடக்க முனையும் சிந்தனைப் போக்கு. சுயமரியாதைச் சிந்தனை பழமைப் பிடிப்பை ஒழிக்கும். சாஸ்திர, சாதி, மதப் பித்துக்களை ஒழிக்க முனையும் சிந்தனைப் போக்கு.
  • திரு.வி.க. சன்மார்க்கச் சிந்தனையாளர். இந்த சன்மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்கம் மட்டுமல்ல; அது தம் காலத்துச் சிந்தனைகளோடு முட்டி மோதி விரிவுபெற்ற திரு.வி.க-வின் சன்மார்க்கமும்கூட. இது இயற்கை உண்மையைப் பற்றி ஒழுகும் வாழ்க்கை நெறி. இதனை திரு.வி.க-வின் ‘சன்மார்க்க போதம்’ தெளிவுபடச் சுருக்கமாக விரித்துரைக்கின்றது.
  • ‘சுயமரியாதை எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது தான்’ என்பது திரு.வி.க-வின் கூற்று. இதைப் பெரியார் மறுத்த தில்லை. ஜீவகாருண்யத்தில் இருந்துதான் தமது சுயமரியாதைக் கொள்கையும் சமதர்மக் கொள்கையும் தோன்றின எனப் பெரியாரும் கூறியுள்ளார். ஆயினும் இருவரும் கடவுள் கொள்கை யிலும் சமூகச் சீர்திருத்த வழிமுறையிலும் மாறுபட்டனர். திரு.வி.க. சாஸ்திர சம்பிரதாயப் பிடியிலிருந்து மனிதரையும் உண்மையான கடவுளையும் விடுதலை செய்ய முனைந்தார். சாஸ்திர சம்பிரதாயக் கடவுள் கோட்டையில் அகப்பட்டு வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கும் மனிதரை விடுவிக்க, பச்சையான இயற்கை உண்மை என்னும் வெடிகுண்டை வைதிக சனாதனக் கோட்டை மீது பெரியார் வீசினார்.
  • திரு.வி.க.வும் பெரியாரும் தொடங்கி நடத்திய தத்துவப் போர் இன்னும் முடிவுறவில்லை. நம் காலத்தில் இன்னும் உக்கிரமாக அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
  • செப்டம்பர் 17: திரு.வி.க. 70ஆவது நினைவு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (17– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories