TNPSC Thervupettagam

சபையை மதிக்காத நம் ஜனநாயகம்

May 21 , 2024 225 days 194 0
  • அண்மைக் காலத் தேர்தல் பிரச்சாரங்கள் போலவே இப்போதைய பிரச்சாரமும் யார் பிரதமராக வர வேண்டும், யார் வரக் கூடாது என்பதாகவே அமைந்துள்ளது. மாநிலத் தேர்தல் என்றாலும் பிரச்சாரம் முதலமைச்சர் பொறுப்புக்கே முதன்மை தரும். அரசியல் கட்சிகள் இதனை வெறும் உத்தியாகக் கையாளக்கூடும்.
  • ஆனால், இது நம் ஜனநாயகத்தின் ஒரு அடியோட்டத்தோடு தொடர்புடையது. இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றம் எப்படி அமைய வேண்டும், யாரெல்லாம் அதில் உறுப்பினரானால் சபை திறனோடு நிறக்கும் என்ற அக்கறை அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்ற சபைகளை அமைக்கத்தானே தேர்தல்கள்?
  • நம் ஜனநாயகத்தின் போக்கைக் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டுக் கவனிப்பவர்கள் கவலைப்பட வேண்டிய சங்கதி இது. ஜனநாயகத்தின் ஓர் அங்கம் அரசு நிர்வாகம். அதன் தலைமை பற்றிய பிரச்சாரம் மேலோங்கி, முதன்மை பெறுகிறது.
  • ஆனால், அந்த அரசு நிர்வாகம் பணிந்து பதில் சொல்லக் கடமைப்பட்ட ஜனநாயகத்தின் மற்றொரு அங்கமான சபையைப் பற்றிய அக்கறை தென்படவில்லை. மக்களால் நேரடியாக அல்லாமல் சபை வழியாகவே நடக்கும் ஜனநாயகத்தில் இது விரக்தியைத் தரும் போதாமை.

ஏட்டுச் சங்கதிகளா?

  • தமது வேட்பாளர்கள் சபையில் எப்படிச் செயல்படுவார்கள் என்பதை ஆராய்ந்துதான் கட்சிகள் அவர்களைத் தேர்தலில் நிறுத்துகின்றனவா? இந்த நிலவரம் தேசிய அரசியலுக்கும் நம் மாநில அரசியலுக்கும் பொதுவானதுதான். சபைக்கும் அரசாங்கத்துக்கும் ஜனநாயகம் நிர்ணயிப்பது ஒரு மேல்-கீழ் உறவு.
  • அதைத் தேர்தல் கட்டத்திலேயே தலைகீழாக மாற்றி, உறுதிப்படுத்திக்கொள்ளும் அரசியல் சிந்தனையை வரவேற்போமா? நான் சொல்வதெல்லாம் பாடப்புத்தகத்தின் ஏட்டுச் சங்கதிகள் என்று நீங்கள் சொல்லலாம். அப்படி இவற்றைத் தள்ளிவிட இயலாது என்பதற்கு நம் மாநிலத்திலிருந்தே சில நிகழ்வுகளைக் காட்ட முடியும்.
  • மார்ச் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடு பாரம்பரியக் கட்டமைப்புகள் ஆணையச் சட்டம் (The Tamil Nadu Heritage Commission Act, 2012), உயர் நீதிமன்ற உத்தரவு வழியாக அமலுக்கு வந்தது. சட்டமன்றத்தில் 2012இல் நிறைவேறி, 2017இல் திருத்தப்பட்ட இச்சட்டம், ஒரு மாமாங்கம் கிடப்பில் இருந்தது. சட்டத்துக்கான அவசியத்தைச் சொல்லித்தான் இதற்கான மசோதாவைப் பேரவையில் அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கும்.
  • சபை நிறைவேற்றிய சட்டத்தை 12 ஆண்டுகள் மடக்கி வைத்துக்கொள்ள அரசாங்கத்தால் இயலுமானால், அரசுக்கும் சபைக்கும் உள்ள உறவை நம் ஜனநாயகம் எப்படி அமைத்துக்கொண்டுள்ளது? நியதிப்படியான அதிகார உறவு தலைகீழாகி, அரசாங்கத்தின் ஆதிக்கம்கூடி சபை தணிந்துவிட்டது.
  • 2023 ஏப்ரல் 12 அன்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா (The Factories (Tamil Nadu Amendment) Bill, 2023) சட்டப்பேரவையில் அறிமுகமானது. அதிலிருந்து 10ஆவது நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ‘நிறுத்தி’ வைப்பதாக, அடுத்த நான்கு நாள்களில் அரசாங்கம் அறிவித்தது. மசோதா சபையில் இருக்கும்போது தோழமைக் கட்சிகளே அதை எதிர்த்து வெளிநடப்புச் செய்தன. இருந்தாலும், சட்டப்பேரவை குரல் வாக்கெடுப்பில் இந்த மசோதாவை நிறைவேற்றியது.

புறவழிச் சாலை:

  • இது விரும்பத்தகாத மசோதா என்பதும் இது சட்டமாகக் கூடாது என்பதும் சரியே. தொழிற்சங்கங்களின் தீவிர எதிர்ப்பை மதித்து, நிறைவேற்றப்பட்ட மசோதாவை மேல் நடவடிக்கை இல்லாமல் நிறுத்திவைத்த தமிழ்நாட்டு முதல்வரைப் பாராட்டலாம்.
  • ஆனால், சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை அதன் மாமூலான அடுத்த கட்டத்துக்குச் செல்லாமல் நிர்வாக அரசு நிறுத்திவைத்தது. அந்த நடைமுறை நம் சபைவழி ஜனநாயக அமைப்பில் சரிதான் என்று சொல்ல இயலாது. கோட்பாட்டின்படி நிர்வாக அரசு சட்டப்பேரவைக்குக் கட்டுப்பட்டது. அந்த அவை நிறைவேற்றிய மசோதாவை, நிர்வாக அரசு முடக்கும்போது அவையை அதனால் எப்படிக் கடக்க முடிந்தது?
  • தமிழ்நாட்டு அரசின் இந்த ஜனநாயக நூதனம் பிடிபடாமல் ஊடகங்கள் தங்களுக்குத் தோன்றிய வகைகளில் மசோதாவை அரசு ‘நிறுத்தி வைத்தது’, ‘திரும்பப் பெற்றது’, ‘நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது’, ‘மேல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று பலவாறு விவரித்தன.
  • மசோதா நிறைவேறிய பின்பு அது அரசாங்கத்தின் உடைமை அல்ல; சட்டப்பேரவையின் உடைமையாக அதன் வசத்தில் இருக்கும். தன் பயணத்தில் அதற்கான அடுத்த கட்டம் ஆளுநர் மாளிகை. அரசு அதைப் பிடித்து வைத்துக்கொண்டது என்றால், நிர்வாக அரசாங்கம் சட்டப்பேரவையின் அதிகாரத்தைத் தானே வரித்துக்கொண்டது என்று விளங்கிக்கொள்ளலாம்.

ஜனநாயகப் புதிர்:

  • தனக்கும் சட்டப்பேரவைக்கும் உள்ள உறவை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்காக அரசு ஒரு சிறிய வேலையைச் செய்தது. மசோதாவின் நிறுத்திவைக்கப்பட்ட நிலையைப் பேரவை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதாக அரசு அறிவித்தது. ஆனாலும், உறுப்பினர்களுக்குத் தனித்தனியாகத் தெரிவித்தால் அது சபைக்குத் தெரிவித்ததாகுமா என்பது சந்தேகமே.
  • நிறைவேற்றப்பட்ட மசோதா வேண்டாததானால் தன் பயணத்தை முடித்து அது சட்டமான பின்பு, அதை ரத்து செய்வதற்குப் பேரவையில் மற்றொரு மசோதாவை நிறைவேற்றலாம். தமிழ்நாடு அரசு பின்பற்றிய வழி பற்றி நாளிதழில் ஒன்றில் அப்போதே விளக்கச் செய்தி வந்தது.
  • நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதல் பெற்றுச் சட்டமாவதற்கு முன், அதை நிறுத்திவிடலாம் என்பது விளக்கம். பேரவையில் நிறைவேறிய தமிழ்நாடு பொது அறக்கட்டளைச் சட்டம், 2020 இவ்வாறு திரும்பப் பெறப்பட்டது. தொடர்புடைய அமைச்சர் மசோதாவைத் திரும்பப் பெற்றதாகப் பேரவையில் அறிவித்தார் என்பதும் விளக்கச் செய்தி.
  • திரும்பப் பெறும் தீர்மானம் ஒன்றைப் பேரவையில் படித்துக் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றலாம் என்றும், 1994 முதல் இவ்வழிகள் பின்பற்றப்படுவதாகவும் விளக்கம் தெரிவித்தது. பேரவையில் மசோதாவை விவாதிக்கும்போது எந்தக் கட்டத்திலும் அதைத் திரும்பப் பெறுவதற்கு இயலும். ஆனால், நிறைவேற்றப்பட்ட மசோதாவை மசோதாவாகவே திரும்பப் பெறுவது விநோதம்.
  • அறிவிப்பும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ரத்து செய்யும் என்பதும் சந்தேகமே. பிரிட்டன் அரசமைப்புக் கோட்பாட்டாளர் ஏர்ஸ்கின் மெய் (Erskine May) கூற்றின்படி, நம் நாடாளுமன்ற நடைமுறை விதிகள், சட்டப்பேரவை விதிகள் இப்படியான எதிலுமே நிறைவேறிய மசோதாவுக்கு இவ்வாறு திரிசங்கு சுவர்க்கம் கற்பிக்கப்படவில்லை.
  • நிறைவேற்றப்பட்ட மசோதா பிறகு அதுவே சட்டம் என்ற இரண்டுக்கும் இடையில் ஒரு திரிசங்கு நிலை உள்ளதா? தானே கற்பிதம் செய்த இந்தக் கட்டம் வழியாக அரசாங்கம் தன்னைப் பேரவைக்கும் மேல் நிலையில் வைத்துக்கொண்டது.
  • கூடவே, தனக்கும் பேரவைக்கும் இடையில் உள்ள கோட்டை அழித்துத் தானே சட்டப்பேரவையாகவும் மாறியது என்றும் சொல்லலாம். பிரதமரையோ முதலமைச்சரையோ தேர்ந்தெடுப்பதற்கானதாகப் பொதுத் தேர்தல்களை வடிவமைப்பது இந்த வகை ஜனநாயகப் போக்கின் அடையாளம்தானே!

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories