TNPSC Thervupettagam

சமத்துவமும் சம ஊதியமும் அவசியம்

April 1 , 2023 693 days 437 0
  • உலக வங்கி, 190 நாடுகளில் நடத்திய ‘பெண்கள், தொழில், சட்டம் 2023’ என்கிற தலைப்பிலான ஆய்வு, பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள சட்டரீதியிலான பாகுபாட்டை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
  • உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படும் நிலையில், பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதில் உள்ள தடைகளை இந்த ஆய்வறிக்கை கவனப்படுத்துகிறது.
  • பணியிடம், ஊதியம், திருமணம், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்லுதல், தொழில்முனைவு, சொத்து, ஓய்வூதியம், குழந்தைப்பேறு ஆகிய எட்டு அம்சங்களில் ஆணுக்குக் கிடைக்கிற சட்டரீதியான பாதுகாப்பு அல்லது உரிமை பெண்ணுக்குக் கிடைக்கிறதா என அறிவதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
  • இதில் இந்தியப் பெண்கள் 74.4 புள்ளிகள் பெற்று உலக சராசரியைவிட (77.1) பின்தங்கியிருக்கிறார்கள். ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தைவிட (63.7) முன்னிலையில் இருக்கிறார்கள்.
  • 2000இல் நடத்தப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் (63.75), இந்தியப் பெண்கள் பல புள்ளிகள் முன்னேறியிருப்பதுபோல் தோன்றினாலும் ஆணுக்கு நிகரான ஊதியம் பெறுவதில் வெறும்25 புள்ளிகள் மட்டும் பெற்றுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகின்றனர். சம வேலைக்குச் சம ஊதியம் வழங்காத 93 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • பணிக்குச் செல்லும் வாய்ப்புள்ள 18–64 வயதுக்குட்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, உலக அளவில்வெறும் 9 கோடிப் பெண்கள் மட்டுமே ஆணுக்கு நிகரான சட்டரீதியிலான உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்; 240 கோடிப் பெண்கள் ஆணுக்கு நிகரான உரிமை தராத நாடுகளில் வசிக்கிறார்கள். உலக அளவில் பெண்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 390.5 கோடி என்கிற நிலையில், அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது ஆய்வுக்குரியது.
  • இந்தியாவில் குழந்தைப்பேறு காரணமாகப் பெண்களுக்குத்தான் பணி வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. கடனுதவி வழங்குவதில் காட்டப்படும் பாலினப் பாகுபாடு, பெண்கள் தொழில் தொடங்குவதற்குப் பெரும் தடையாக இருக்கிறது. இந்தியக் குடும்பங்களில் நிலவும் ஆண்மையச் சிந்தனை, பெண்ணுக்குக் குடும்பச் சொத்து - பரம்பரைச் சொத்து கிடைப்பதைத் தடுக்கிறது. ஊதியமேசமமாக வழங்கப்படாத பெண்களுக்கு ஓய்வூதியத்திலும் பாரபட்சமே காட்டப்படுகிறது.
  • இந்தியாவில் பெண்களுக்குச் சாதகமாக விவாகரத்து உரிமை, சொத்துரிமை, கல்வியுரிமை, மகப்பேறு விடுப்பு, திருமண நிதியுதவி போன்ற பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டாலும் பாலினப் பாகுபாடு, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருக்கிறது.
  • உலக வங்கி குறிப்பிட்டிருக்கும் எட்டு அம்சங்களில் பாலினச் சமத்துவத்தை அடைய இந்தியா இன்னும் 50 ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்பது, நாம் விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
  • ஏற்கெனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் உழைப்பு புறக்கணிக்கப்படுவது குறித்த விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், மத்திய - மாநில அரசுகள் பெண்களின் ஊதியம் குறித்த கொள்கைகளை மறுவரையறை செய்ய வேண்டியது அவசியம்.

நன்றி: தி இந்து (02 – 04 – 2023)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
Top