- கடந்த அக்டோபர் 24 அன்று ஐஸ்லாந்தில் நடைபெற்ற ‘பெண்கள் வேலை நிறுத்தம்’ உலகம் முழுவதும் பேசப்பட்டது. காரணம், உலகிலேயே ஆண்கள் செய்யும் அதே வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு, அதிகபட்சமாக ஊதியம் கொடுக்கும் நாடு ஐஸ்லாந்து! அங்கே சம ஊதியம் வழங்கும் நிலை 91 சதவீதம். அதை 100 சதவீதமாக மாற்றவும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்கவும் பிரதமர் உள்ளிட்ட ஐஸ்லாந்து பெண்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- ஐஸ்லாந்தில் மட்டும் ஊதியத்தில் பாலினப் பாகுபாடு மிகக் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்ன? அதற்குக் காரணம், 1975இல் நடைபெற்ற பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.
- ஐரோப்பாவில் இருக்கும் சிறிய தீவு நாடு ஐஸ்லாந்து. இங்கே குறைவான மக்கள்தாம் வசிக்கின்றனர். கல்விக் கூடங்கள், மீன் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்துவந்தனர். ஆனால், அதே வேலைகளைச் செய்யும் ஆண்களைவிட 40 சதவீதத்துக்கும் குறைவான ஊதியமே பெற்றுக் கொண்டிருந்தனர். நியாயமற்ற இந்த ஊதியப் பாகுபாட்டை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பெண்கள் அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளும் முடிவெடுத்தன. அப்போது 1975ஆம் ஆண்டை ஐ.நா. ‘சர்வதேசப் பெண்கள் ஆண்டு’ என அறிவித்திருந்தது.
- அக்டோபர் 24 அன்று பெண்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்கிற செய்தி ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலம் ஐஸ்லாந்து முழுவதும் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு வெளியே பணி செய்யும் பெண்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வேலை நிறுத்த நாள் அன்று ஊதியம் கிடைக்காவிட்டாலும் வேலையே பறிபோனாலும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உறுதிபூண்டனர்.
- குழந்தைகள், கணவர், குடும்பம் என்று ஆயிரம் காரணங்களைச் சொல்லி, போராட்டத்தில் கலந்துகொள்ள விட மாட்டார்கள் என்று நினைத்த பெண்கள், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அதிகாலையில் எழுந்து அன்றைக்குத் தேவையான உணவைச் சமைத்து வைத்தனர். ஆண் தொழிலாளர்கள் அழைத்து வரும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக முதலாளிகள் இனிப்பு, ரொட்டி, பென்சில், காகிதம் போன்றவற்றை வாங்கி வைத்தனர்.
- தங்களின் போராட்டம் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையில் ஐஸ்லாந்தின் 90 சதவீதப் பெண்கள் பேரணிகளில் பங்கேற்றனர். கோஷங்களை எழுப்பினர். சமத்துவத்தை வலியுறுத்தும் பாடல்களைப் பாடினர். மேடைகளில் ஏறி தங்கள் உரிமைகளைக் கேட்டு வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முழக்கமிட்டனர். பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்தப் போராட்டம் ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்கிற சட்டம் கொண்டுவரப்படக் காரணமாக அமைந்தது. ஐஸ்லாந்து பெண்களின் போராட்டம் அவர்களுக்கான போராட்டமாக மட்டுமல்லாமல், உலகத்துக்கே ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்கிற சிந்தனையை விதைத்தது.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐஸ்லாந்தில் முதன் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் இந்தப் போராட்டம் வழிவகுத்தது. இதன் மூலம் விக்டிஸ் ஃபின்பொகாடோட்டிர் (Vigdís Finnbogadóttir) உலகிலேயே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்கிற சிறப்பைப் பெற்றார். தொடர்ந்து 16 ஆண்டுகள் அதிபராக இருந்தார்.
- ஐஸ்லாந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த ஊதிய இடைவெளி 9 சதவீதமாகக் குறைந்தது. 13 சதவீத ஊதிய இடைவெளியுடன் நார்வேயும், 14 சதவீத ஊதிய இடைவெளியுடன் பின்லாந்தும், 15 சதவீத ஊதிய இடைவெளியுடன் நியூசிலாந்தும் இருக்கின்றன. இந்தியாவில் இந்த இடைவெளி 36 சதவீதமாகவும் சீனாவில் 33 சதவீதமாகவும் அமெரிக்காவில் 26 சதவீதமாகவும் இருக்கிறது. உலகிலேயே மிக அதிகபட்ச ஊதிய இடைவெளி கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. இங்கே ஊதிய இடைவெளி 60 சதவீதம்.
- பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஊதிய இடைவெளியைக் குறைப்பதுடன் சம உரிமை கேட்டும் போராட்டம் நடைபெற்றது. ‘சமத்துவ சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் ஐஸ்லாந்தில் ஏன் இந்தப் போராட்டம் என்று நினைக்கலாம். ஆனால், இங்கும் வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்புப் போன்ற ஊதியம் இல்லாத பணிகளைப் பெண்களே அதிகம் செய்கின்றனர். உணவுத் தொழிற்சாலை, சுகாதாரத்துறை போன்றவற்றில் அதிகமாக வேலை செய்யும் பெண்கள், சமூகத்தில் குறைவாக மதிப்பிடப்படுகின்றனர். ஆண்களால் வன்முறைகளையும் பெண்கள் எதிர்கொள்கின்றனர். இவற்றை எல்லாம் களையாமல் ‘சமத்துவ சொர்க்கம்’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என்கிறார்கள்.
- தற்போதைய பிரதமர் கேத்ரின் ஜேகோப்ஸ்டோட்டிர் (Katrin Jakobsdottir), பெண்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றார். “பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளுடன் ஒப்பிடும்போது, பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது. வன்முறை நம் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதைக் களைவது எளிதல்ல என்றாலும் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். உலகம் முழுவதும் பாலினச் சமத்துவம் அடைவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகலாம்” என்று கூறியிருக்கிறார்.
- பெண்கள், பெண்கள் அமைப்புகள், அரசாங்கம் என அனைத்தும் சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடும்போது, உரிமைகளைப் பெற முடிகிறது என்பதை ஐஸ்லாந்து பெண்கள் போராட்டம் காட்டுகிறது. ஆனால், நமக்கோ அரசாங்கத்திடமே போராட வேண்டியிருக்கிறது. சம ஊதியம், சம உரிமை பெறுவது எல்லாம் கடினம்தான். ஆனால், அது முடியாததல்ல. முதல் அடியை நாம் எப்போது எடுத்து வைக்கப்போகிறோம்?
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2023)