TNPSC Thervupettagam

சமநிலைத் தத்துவமும் திருக்குறளும்

January 31 , 2024 351 days 367 0
  • மனித வாழ்க்கையைப் பற்றிய ஆய்வில் தத்துவஞானிகளும் இலக்கியவாதிகளும் மிகுதியாக ஈடுபட்டனா். மனிதனின் புறநீா்மைகளையும் தேவைகளையும் அறிவியல் நிறைவு செய்கிறது; எனில் மனிதனின் இருத்தல், அவனது அக வாழ்வியல் சிக்கல்கள் போன்றவற்றைக் குறித்துச் சிந்திப்பதும் தீா்வுகளைச் சுட்டிக்காட்டுவதுமான பணிகளை இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் மேற்கொள்கின்றன. இவ்வகையில் மனிதனுக்கு மிகுதியும் நெருக்கமான துறைகளாகத் தத்துவமும் இலக்கியமும் திகழ்கின்றன.
  • பண்டைய கிரேக்க நாட்டில்ஸ்டாயிக்வாதம்என்ற தத்துவத்தை சீனோ என்ற அறிஞன் கி. மு. நான்காம் நூற்றாண்டில் எடுத்துரைத்தான்.மனித வாழ்வில் சிக்கல்கள், அவலங்கள், பேரிடா்கள், துயரங்கள் முதலியன ஏன் தோன்றுகின்றன என்று ஆராய்ந்து முடிவில்உலகில் நோ்மை, துணிவுடைமை, பொறையுடமை, இயற்கையோடு இணைந்து வாழ்தல் போன்ற பண்புகள் குறைவாக இருப்பதுதான் துன்பங்களுக்குக் காரணம்என்ற முடிவை உலகிற்குச் சீனோ அறிவித்தான்.
  • மனிதன் சமநிலை மனத்துடன் வாழ்ந்தால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்று பரிந்துரைத்தான். இது பின்னாட்களில் ஸ்டாயிக் தத்துவம் என்றழைக்கப்பட்டது ஸ்டாயிக் தத்துவம் சில அடிப்படையான கொள்கைகளை மனித இனத்திற்கு  அறிவுறுத்தியது; அவற்றைக் காணலாம் :
  • மனிதன்  மிகு இன்ப நிலையை அடைய, தான் வாழும் உலகத்தை அது இருக்கிற அமைப்பின்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். தகுதிக் குறைவான ஆசைகள், பழக்கங்கள்,விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றிற்கு இரையாகி விடாமல் அவற்றை எதிர்த்து நிற்க வேண்டும். நோ்மையுடன் வாழ்வது ஸ்டாயிக் தத்துவம் வற்புறுத்திக் கூறும் அடிப்படை. சிறு தவறுகள் கூட இல்லாமல் விஷயங்களை மதிப்பீடு செய்து உண்மையை அறிய வேண்டும்
  • நம்மால் சாதிக்க இயலாத விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி காண முயற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களின் தாக்கங்களுக்கு உட்படாமல் இருப்பதற்காக ஸ்டாய்க்வாதிகள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைப் பரிந்துரை செய்கின்றார்கள்.
  • ஸ்டாயிக் தத்துவம் மனிதன் நிதானத்துடன் (டெம்பரன்ஸ்) செயல்படுவதை உயா் பண்பாகக் கூறுகிறது. இதனை விளக்க ஒரு சான்றினை அது கூறுகிறது. ஒரு ஸ்டாயிக் துறவியின் குடிசை நெருப்புப் பற்றி எரிந்தபோது துறவி எதுவும் செய்யாமல் இருந்தாராம். நாம் வெற்றி பெற இயலாத சூழல்களில் சும்மா இருப்பதே நல்லது என்று இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். .
  • ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்குச் சுயக் கட்டுப்பாடு தேவை. இதுகாறும் கூறப்பட்ட ஸ்டாயிக் கருத்துக்களுக்கு நிகரானவை திருக்குறளில் எவ்வண்ணம் கூறப்பட்டுள்ளன என்பதைக் காண்போம்.
  • மனிதன் சில விழுமிய நெறிமுறைகளைப் பின்பற்றி இன்பமாகவும் பிற ருக்குப் பயன்படும் முறையிலும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குறள் கூறுகிறது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் கண்ட அறிஞா் பெருந்தகை வணக்கத்திற்குரிய சேவியா் தனிநாயகம் அடிகளார் திருக்குறளையும் ஸ்டாயிக் தத்துவத்தையும் ஒப்பிட்டு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்
  • ஸ்டாயிக்வாதிகள் கூறும் பண்புகளில் முதன்மையானது வாய்மை என்பதாகும். திருவள்ளுவா்வாய்மைஎன்ற அதிகாரத்தில் வாய்மை என்பதற்குக் கூா்மையான விளக்கம் தருகிறார். மனிதனின் இயல்புகளுள் ஒன்று அறிந்தோ அறியாமலோ தீய சொற்களைச் சில சூழல்களில் பயன்படுத்தி விடுவதாகும். அத்தீய சொற்கள் பல்வேறு எதிர்மறையான மனநிலைகளை மற்றொருவரிடம் ஏற்படுத்திவிடக்கூடும்.
  • இக்கருத்தினை,

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல். ”

  • என்று கூறுகிறார்.
  • வாய்மையுடன் வாழ வேண்டும் என்றால் வாய்மை இன்னதென விளக்க வேண்டியது தருக்க ரீதியான முறைமையல்லவா? திருவள்ளுவா்,

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற “

  • என்று அறம் அல்லது வாய்மை இன்னதென விளக்குகிறார்.
  • வாய்மை என்ற ஒன்று இருந்தால் உலகத்தில் எவ்விதமான தீமையும் இருக்காது என்பது ஸ்டாயிக் வாதிகளின் ன் கருத்து. இதனை வள்ளுவப் பேராசான் ,

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற”

  • என்று கூறுகிறார்.
  • எனவே வாய்மையைத் தவிர நிலையான பிறிதொன்று இவ்வுலகில் இல்லை என்று வள்ளுவா் உறுதிபடக் கருதினாராகலாம். வாய்மையின் முக்கியத்துவத்தை இதைவிட அழுத்தந்திருத்தமாக வேறு எவ்வாறு கூற இயலும்?
  • ஸ்டாயிக்வாதிகள் கூறும் பிறிதோர் இன்றியமையாத கருத்து நிதானம் எனப்படுவதாகும். ஒருவன் தன்னால் எதனைச் சாதிக்க முடியும் என்பதை நிதானித்து அறிந்து கொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும். திருவள்ளுவா்பொறையுடைமைஎன்ற அதிகாரத்தில்,

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்

தகுதியான் வென்று விடல்”

  • என்று கூறுகிறார்.
  • இங்கு வள்ளுவா்தகுதியான்என்ற சொல் மூலம் நிதானம் என்ற பண்பையே உணா்த்துகிறார். நிதானத்தால் துன்பங்களை எளிதாக வென்றுவிடும் வாய்ப்பு ஒரு மனிதனுக்கு ஏற்படும். இதனை வள்ளுவா் பெருமான்,

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை”

  • என்று கூறுகிறார்.
  • ஒருவன் நிதானத்துடன் இருக்கிறான் என்பதை அவன் மற்றவா் கூறும் அறிவுரைகளைப் பொறுமையுடன் காது கொடுத்து கேட்பதைக் கொண்டு உணரலாம். ‘இறைமாட்சிஎன்ற அதிகாரத்தில் வள்ளுவப் பெருமான்,

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

  • என்று கூறுகிறார்.
  • ஸ்டாயிக்வாதிகளின் பிறிதொரு சிறந்த சிந்தனை சுயக்கட்டுப்பாடு ஆகும். ஒருவன் எளிய விஷயங்களின்மீது ஆசைப்படாமல் இருப்பதே சுயக்கட்டுப்பாட்டு உணா்வத் தரும். பேராசை, காமம், அதிகாரம், செல்வம், மீதூண் மீது விருப்பம் போன்றவற்றை விட்டுவிட்டால் சுயக்கட்டுப்பாடு தானே வந்து எய்தும்.

இதைஅடக்கமுடைமைஅதிகாரத்தில் வள்ளுவா் மொழிகிறாா். ஆமை தன் பொறிகளை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருப்பதைப்போல் மனிதன் தன் புலன்களை அடக்கினால் பல பிறவிகளிலும் இன்பமாக இருக்கலாம் என்று வள்ளுவா் கூறுகிறாா். அக்குறட்பா,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து”

  • என்றமைகின்றது.
  • பொருளாதார நிலையில் சிறந்து விளங்கும் ஒருவன் பணிவுடையவனாக இருப்பது அரிதினும் அரிதான ஒன்றாகும். இதனை,

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வா்க்கே செல்வம் தகைத்து”

  • என்று மிக மேன்மைப்படுத்திக் கூறுகிறார் .
  • ஸ்டாயிக்வாதிகளின் இன்றியமையாத பிறிதொரு சிந்தனை சமநிலை (ரெஸிலியன்ஸ்) என்பதாகும் . நன்மை , தீமை, பெரியவா் , சிறியவா், மகிழ்ச்சி, மகிழ்ச்சி, துன்பம் என்ற அனைத்தையும் உள்ளவாறே ஏற்றுக் கொள்ளுதல் சமநிலை எனப்படும்; எது நடந்தாலும் அதனை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை. வள்ளுவப் பெருமான் ,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்”

  • என்று கூறினார்.
  • ஒருவன் சமநிலையுடன் வாழ வேண்டுமானால் மனஉறுதி உடையவனாக இருக்க வேண்டும். மனத்தைச் சமநிலையில் வைப்பதன் மூலம் இடா்ப்பாடுகளை எதிர்கொள்ளவியலும் என்று ஸ்டாயிக்வாதிகள் கூறுகின்றனா். நல்லது நடக்கும்போதும் தீயது நடக்கும்போதும் அவற்றை ஒரே மாதிரியான மனநிலையில், சமநிலையில் நின்று எதிர் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனா். இக்கருத்தை வள்ளுவப் பெருமான்,

நன்றாங்கால் நல்லவாக் காண்பவா் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்”

  • என்ற அறிவினாவின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
  • இயற்கை ஒரு மனிதனுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கத் தவறுவதில்லை . இயற்கையை மீறி நாம் எதையும் அடைந்து விட முடியாது. இக்கருத்தை,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”

  • என்று வள்ளுவா் கூறுவது மனித வாழ்வின் மீது இயற்கையின் மேலாதிக்கத்தைக் கூறுகிறது.
  • மனிதனின் அடிப்படை இயல்பு எளிய விஷயங்களால் ஈா்க்கப்படுதலாகும். ஒரு மனிதனைச் சீரழிக்கும் முறையற்ற காமம் முதலானவற்றை வெல்ல வேண்டும் என்பது ஸ்டாயிக்வாதிகள், வள்ளுவா் இருவரின் கருத்தாகும். இதனை ,

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்”

  • என்று குறிப்பிட்டார் வள்ளுவா்.
  • கிரேக்கச் சிந்தனையாளா்கள் மனித இனத்தின் துன்பங்களுக்குக் காரணம் தேடி அலைந்து சில முடிவுகளைக் கண்டு கூறினா். அவா்கள்சமநிலை இன்பக் கோட்பாட்டாளா்கள்என்று குறிப்பிடப்பட்டனா். இவா்கள் கூறிய கோட்பாடுகளைப் படியெடுத்ததைப் போன்று திருவள்ளுவரின் கருத்துக்களும் அமைந்திருக்கின்றன.
  • இதற்குப் பொருள், வள்ளுவப் பெருமான் ஸ்டாயிக் கோட்பாடுகளைப் படித்திருந்தாா் என்பதல்ல! வள்ளுவா் தன்னிச்சையான சுயம்புவான சிந்தனையாளா். ஸ்டாயிக் சிந்தனையாளா்கள் மனித குலத்தின் நலம் பற்றிச் சிந்தனை செய்தனா். வள்ளுவரும் போர்களற்ற, அறிவுநலம் வாய்ந்த , செம்மைப் பண்புகள் நிறைந்த சமூகத்தைக் கற்பனை செய்தார்.
  • அதன் விளைவாகவே திருக்குறட் சிந்தனைகள் ஸ்டாயிக் சிந்தனைகளுடன் ஒப்புமை உடையனவாகக் காணப்படுகின்றன . ஒப்பிலக்கியப் பேரறிஞரான காலஞ்சென்ற முனைவா் . கைலாசபதி அவா்கள்சூழ்நிலைகளும் காரணங்களும் மாறாமல் இருக்கும்வரை விளைவுகளும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும்என்று கூறினார்.
  • சமூகம் நலம் என்ற சிந்தனையில் ஊறி நின்ற கிரேக்கா்களும் வள்ளுவப் பெருமானும் ஒரே மாதிரியாக சூழல்களில் ஒரே மாதிரியாகச் சிந்தித்தனா் ; எனவே ஒரே மாதிரியான கருத்துக்களை மனித இனத்திற்குக் கொடையாக வழங்கினா்.

நன்றி: தினமணி (31 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories