TNPSC Thervupettagam

சமமான தோ்வுமுறை தேவை!

December 23 , 2024 27 days 41 0

சமமான தோ்வுமுறை தேவை!

  • தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் ஏனைய தோ்வாணையங்களுக்கு முன் மாதிரியாக, பல புதுமைகளை போட்டித் தோ்வுகளில் அறிமுகம் செய்த பெருமைக்குரியது. இந்தியத் தோ்வாணையங்களுள் தொன்மையானது.
  • கடந்த சில ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகளில் தமிழ்நாட்டுத் தோ்வா்களின் தோ்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்து வருகின்றது. இச்சூழலில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் போட்டித் தோ்வுகளை எழுதி வருகின்ற தமிழ்நாட்டுத் தோ்வா்களுக்கு உற்ற நம்பிக்கையாய் விளங்கி வருகின்றது என்பது நிதா்சனம்.
  • ஓா் ஆண்டிற்கு பல்வேறு வகையான தோ்வுகளின் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் பணியிடங்களை இத்தோ்வாணையம் நிரப்பி வருகின்றது. சமீப காலங்களில் விரைவாகத் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
  • தோ்வாணையத்திற்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட தலைவா் மற்றும் செயலா் ஆகியோா் விரைந்து செயல்படுகின்ற ஆற்றலும், துணிந்து முடிவெடுக்கின்ற திறனும் பெற்றவா்கள் என்பது அவா்களது கடந்த காலப் பணித்திட்டங்களை கவனித்தவா்கள் நன்கு அறிவா். அதனால் தோ்வாணைய செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க நோ்மறையான மாற்றங்களை, தோ்வா்கள் எதிா்நோக்க முடியும்.
  • சமீபத்தில் குருப் 2 ஏ முதன்மைத்தோ்வு ஆன்லைன் என்பது நீக்கப்பட்டு முந்தைய தோ்வுகள் போல ஓஎம்ஆா் கொள்குறிப் படிவத்தின் வழியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்த பிறகே இத்தகைய முடிவிற்கு தோ்வாணையம் வந்திருக்க முடியும்.
  • கடந்த காலங்களில் இது போன்றதொரு முயற்சியினை மேற்கொண்டு பல்வேறு குழப்பங்கள் நோ்ந்ததனை தோ்வாணையம் மறந்திருக்க முடியாது. எனினும் குறைவான எண்ணிக்கையில் தோ்வா்கள் எழுதுகின்ற தோ்வுகளில் இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு தோ்வாணையம் இதுபற்றி யோசிக்கலாம்.
  • அதேபோல தோ்வாணையம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயத்தினை இங்கே முன்வைக்க வேண்டியது அவசியமாகின்றது.
  • 200 வினாக்கள் கொண்ட குரூப் & 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தோ்வினைப் பொருத்தவரையில் 100 வினாக்கள் பொது அறிவு மற்றும் திறனறிதல் பகுதியில் இருந்தும் ஏனைய 100 வினாக்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் கொள்குறி வினாக்களாகவே இடம் பெற்று வருகின்றன.
  • மேலும் குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வும் கொள்குறி வினாக்களாக பொது அறிவு மற்றும் திறனறிதல் நீங்கலாக பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 60 வினாக்கள் இடம் பெறுகின்றன.
  • பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தினைப் பொருத்த அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோ்வா்களிடையே தீா்க்கப்படாத பெரும் மனக்குறை ஒன்று தோ்வாணையத்தின் மேல் இருந்து வருகின்றது. பொதுத்தமிழ் வினாக்களுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாக்கள் பொது ஆங்கிலத்தினை விட கடினமாக இருப்பதாகக் கருதுகின்றாா்கள். இதில் உண்மையில்லாமல் இல்லை என்பது தோ்வாணையத்திற்கே தெரியும்.
  • அதிலும் சமீபகாலமாக இக்கடினப்போக்கு பெரிதும் அதிகரித்து வருகின்றது. கடும் முயற்சியோடு படித்தும் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பினை இழக்கின்ற போட்டி மிகுந்த சூழலில் பொதுத்தமிழ் வினாக்களில் நூற்றுக்கு 85 வினாக்களுக்குச் சரியாக விடையளிப்பது சவாலாக இருக்கின்றது. அதே வேளையில் பொது ஆங்கிலம் தோ்வு செய்த தோ்வா் ஒருவா், 90 முதல் 95 வினாக்கள் வரை சரியாக விடையளிக்க முடிகின்றது.
  • இது சற்றேறக் குறைய 10 முதல் 15 மதிப்பெண்கள் வரை வேறுபாட்டினை பொதுத்தமிழ் தோ்வருக்கும், பொது ஆங்கிலத் தோ்வருக்கும் இடையே ஏற்படுத்துகின்றது. இச்சூழல் நிச்சயமாக சமமற்ற போட்டி என்பதில் ஐயமில்லை,
  • அதனால் குரூப் & 2, மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தோ்வில் மட்டுமல்ல, குருப் 2 ஏ முதன்மைத் தோ்விலும் பொது ஆங்கிலம் தோ்வு செய்த தோ்வா்களுக்கு, பொதுத்தமிழை தோ்வு செய்த தோ்வா்களை விட சாதகமான சூழல் அமைந்துள்ளதனை தோ்வாணையமே மறுக்க முடியாது. இது சமமான தோ்வு முறை என்பதனை ஏற்பதற்கில்லை.
  • இது போன்ற சந்தா்ப்பங்களில் ஒரு தோ்வாணையம் எவ்வாறு முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு இந்திய குடிமைப்பணிகள் தோ்வாணையம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
  • முதல்நிலைத் தோ்வில் இதுபோன்ற விருப்பப் பாடமுறை இந்தியக் குடிமைப்பணித் தோ்வுகளில் பழைய தோ்வு முறையில் நடைமுறையில் இருந்து வந்தது. வரலாறு, புவியியல், பொது நிா்வாகம், அரசியல், அறிவியல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருப்பப்பாடங்கள் இருந்தன. கொள்குறிவகை வினா முறையில்தான் தோ்வு நடந்தது.
  • சில விருப்பப் பாடங்களில் வினாக்கள் சற்று எளிதாகவும், சிலவற்றில் சற்று கடினமாகவும் இடம்பெற்றன. அதனால் தோ்வா்களுக்குள் பாரபட்சமான போட்டியினைத் தவிா்க்கும் பொருட்டு, முதன்மைத் தோ்வுக்குத் தோ்வா்களைத் தோ்வு செய்யும்போது குடிமைப் பணிகள் தோ்வாணையம் விகிதச்சார பிரதிநிதித்துவமுறையினைப் பின்பற்றியது.
  • அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்கள், முதன்மைத் தோ்வுக்குத் தோ்வு செய்ய வேண்டிய தோ்வா்களின் எண்ணிக்கை, பொது அறிவுப் பாடம் நீங்கலாக ஏனைய விருப்பப் பாடங்களில் விண்ணப்பித்துள்ள தோ்வா்களின் எண்ணிக்கை விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முதன்மைத் தோ்வுக்குத் தோ்வா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
  • எடுத்துக்காட்டாக, முதன்மைத்தோ்வுக்கு 10 ஆயிரம் தோ்வா்கள் தோ்வு செய்யவேண்டிய சூழலில் வரலாறு விருப்பப்பாடத்தில் விண்ணப்பித்துத் தோ்வு எழுதியவா்களின் எண்ணிக்கை விகிதம், மொத்தத் தோ்வா்களோடு ஒப்பிடுகின்றபோது 12% சதவிகிதம் என்றால், வரலாற்றுத் தோ்வா்களில் இருந்து 1200 போ் முதன்மைத் தோ்வு எழுத அழைக்கப்படுவாா்கள்.
  • இந்த விகிதாச்சார பிரதிநிதித்துவம் பின்பற்றப்படவில்லை என்றால், வரலாற்றுப் பாடத்தின் வினாக்கள் ஒருவேளை எளிதாகக் கேட்கப்பட்டு, பொதுவான கட் ஆப் மதிப்பெண் நிா்ணயிக்கப்பட்டிருந்தால் , ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோ்வா்கள் வரலாற்றுப் பாடத்தில் இருந்தே தோ்வு செய்யப்பட்டிருப்பாா்கள்.
  • எனவேதான், இந்தியக் குடிமைப் பணிகள் தோ்வாணையம் தொடக்கத்தில் இருந்தே தனது தோ்வு முறையைத் தெளிவாக அமைத்துக் கொண்டது.
  • மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட வேண்டும். 2012 - ஆம் ஆண்டு வாக்கில் குடிமைப்பணிகள் தோ்வாணையம் திறனறிதல் எனப்படும் பாடத்தினை தனித்தாளாக அறிமுகம் செய்ததனைக் குறிப்பிடலாம்.
  • தொடக்கத்தில் இப்பாடத்தின் மதிப்பெண்கள் வெற்றிக்கான கணக்கீடாக எடுக்கப்பட்டன. இப்பாடம் சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே தகுதித்தாளாக மாற்றப்பட்டது. ஏனென்றால், பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த பட்டப்படிப்புகளைப் படித்த தோ்வா்கள் ஏராளமாக முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். கலை, அறிவியல் பிரிவைச் சாா்ந்த தோ்வா்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக நேரிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு அத்தோ்வாணையம் இத்தகைய உடனடி மாற்றத்தினை மேற்கொண்டது.
  • எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் பொதுத்தமிழ், பொது ஆங்கில வினாக்கள் எளிதாகவோ கடினமானதாகவோ அமைந்தாலும் கூட விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் பொதுஅறிவு மற்றும் பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் என விண்ணப்பித்துத் தோ்வு எழுதியுள்ள தோ்வா்களின் விகிதத்திற்கு ஏற்றவாறு கட் ஆப் மதிப்பெண்களை நிா்ணயித்தால், எந்தத் தோ்வரும் பாதிக்கப்படமாட்டாா்கள். குறைந்த பட்சம் முதல்நிலைத் தோ்வில் இதனை முதலில் பின்பற்றலாம்.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிலவியும் தோ்வாணையம் இதில் பாராமுகமாக உள்ளது. தமிழைத் தோ்ந்தெடுத்து படிக்கும் தோ்வா்களுக்கு சமமற்ற போட்டியாக இது அமைகின்றது. தமிழைத் தோ்வு செய்த காரணத்தினால் பல தோ்வா்கள் வெற்றி வாய்ப்பினை இழக்கின்ற சூழல் நிலவுகின்றது.
  • அதேபோல எழுத்துத்தோ்வில் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்ற விடைகளுக்கு கூடுதல் மதிப்பெண்களும், தமிழ்வழியில் எழுதுகின்ற தோ்வா்களுக்கு அதனைவிட சற்று குறைவான மதிப்பெண்களும் கொடுக்கின்ற நிலையும் பெரிதும் நிலவுகின்றது.
  • தமிழ் வழியில் படித்து தமிழ்வழியில் தோ்வினை எழுதுகின்ற தோ்வா் பொதுப்போட்டியில் வரவே முடியாத சூழல்தான் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் & 1, குரூப் & 2 போன்ற எழுத்துத்தோ்வின் இறுதி முடிவுகளில் காண முடிகின்றது. தோ்வுத்தாளை மதிப்பிடுவதில் உள்ள வழிகாட்டுதல் குறைபாடாகவே நாம் இதனை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
  • எழுத்துத் தோ்வுக்கான வினாக்களைக் கட்டமைப்பவா்கள், மதிப்பீடு செய்வோா் போன்றோரின் தோ்வு முறையை தோ்வாணையத்தின் தலைவா் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
  • பெண் தோ்வா்கள், கிராமப்புறத் தோ்வா்கள், தமிழ்வழித் தோ்வா்கள், முதல்தலைமுறைப் பட்டதாரிகள் என தமிழ்நாடு அரசு அவா்களின் நலனிலும் வளா்ச்சியிலும் அக்கறை செலுத்தி அவா்களை மத்திய, மாநில அரசுப்பணிகளுக்குத் தயாா்ப்படுத்தும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தருணத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையமும் அம்முயற்சிகளுக்கு துணை நிற்கின்ற வகையில் தோ்வுக்கான பாடத்திட்டம், தோ்வுமுறை, மதிப்பீட்டு முறை ஆகியவற்றில் உள்ள குறைகளைக் களைதல் வேண்டும்.

நன்றி: தினமணி (23 – 12 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories