TNPSC Thervupettagam

சமரசமும் சாதுர்யமும்!

July 25 , 2024 8 hrs 0 min 47 0
  • தொடர்ந்து ஏழாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பத்து முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயால் ஆறு முறைதான் தொடர்ந்து மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடிந்தது எனும்போது, நிர்மலா சீதாராமனுடைய சாதனையின் கெளரவம் புரியும்.
  • சுதந்திர இந்தியாவில் மிக அதிகமான நிதியமைச்சர்களை வழங்கியிருக்கும் மாநிலம் என்கிற பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
  • ஆர்.கே.சண்முகம் செட்டி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து ஆறாவது நிதியமைச்சராக தமிழகம் இந்தியாவுக்கு வழங்கியிருக்கும் கொடை நிர்மலா சீதாராமன் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். அவரின் முந்தைய பட்ஜெட்டுகளைவிட இந்த பட்ஜெட் அவருக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது என்பதும் அதை சாமர்த்தியமாக அவரால் கையாள முடிந்தது என்பதும் பதிவு செய்யப்பட வேண்டியவை.
  • கடந்த பிப்ரவரி மாத இடைக்கால பட்ஜெட் உரைக்கு அடுத்தபடியான குறைந்த நேர பட்ஜெட் உரையாக இது அமைந்திருக்கிறது. ஒருபுறம் கவனமான நிதி நிர்வாகமும், இன்னொருபுறம் அவசியமான கவர்ச்சி திட்ட அறிவிப்புகளும் நடப்பு நிதி ஆண்டுக்கான நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில் சாமர்த்தியமாக இணைந்திருப்பதை பாராட்ட தோன்றுகிறது.
  • நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டின் கவனக் குவிப்பு (ஃபோகஸ்) வேலைவாய்ப்பு; அடுத்தபடியாக பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியான நடுத்தர வகுப்பினரைத் திருப்திபடுத்துவது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் இரண்டையும் நிதியமைச்சர் சாதுர்யமாகக் கையாண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.
  • அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகாமல் எந்த நிதியமைச்சரும் பட்ஜெட் உருவாக்கிவிட முடியாது. ஆட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்துவது பொருளாதாரமும், நலத் திட்டங்களும், அனைத்துப் பிரிவினருக்குமான சலுகைகளும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் சலுகைகளும், திருப்திப்படுத்தலும் நிதி நிர்வாக சீர்கேட்டுக்கு வழிகோலாமல் பார்த்துக்கொள்வதில்தான் நிதியமைச்சர்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் தனது பணியை நிர்மலா சீதாராமன் திறமையாக நிறைவேற்றி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
  • எந்தவொரு பட்ஜெட்டிலும் மிக முக்கியமான அம்சம் பற்றாக்குறையையும் கடன் சுமையையும் குறைப்பதன் மூலம் நிதிக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவது. இந்த பட்ஜெட்டில் 35.78% வரி அல்லாத வருவாய் அதிகரிப்பு காரணமாக நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 0.8% குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் இந்திய ரிசர்வ் வங்கி அரசுக்கு கைமாற்றி இருக்கும் ஈவுத் தொகை.
  • வருவாய் பற்றாக்குறை குறைந்ததால் நிதி பற்றாக்குறையும் குறைந்திருக்கிறது. கடந்த 2023-24-இன் 10.8% உடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதி ஆண்டில் மொத்த வரி வருவாய் 11.7%-ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், அதிகரித்த வரிவசூல் காரணமாகவும் வருவாய் அதிகரிப்பு 1.1% என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது திருப்திகரமானதாக இல்லை.
  • முதலீட்டுச் செலவினங்கள் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது இன்றியமையாதது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.11,11,111 கோடி முதலீட்டுச் செலவினங்களுக்கு வழிகோலப்பட்டுள்ளது. அதாவது ஜிடிபி-யில் 3.4%. மத்திய அரசின் முதலீடு மட்டுமல்லாமல், ரூ.1.5 லட்சம் கோடி நீண்டகால வட்டியில்லாக் கடன்களை மாநிலங்களுக்கு வழங்குவதன் மூலமும் முதலீட்டுச் செலவினத்தை அதிகரிக்க உத்தேசித்திருக்கிறது மோடி அரசு.
  • அரசின் கவனத்தை வேலைவாய்ப்பு ஈர்த்திருக்கிறது என்பதை நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது. தனது பட்ஜெட் உரையில் வேலைவாய்ப்பு என்கிற வார்த்தையை 33 முறை கையாண்டதிலிருந்து எந்த அளவுக்கு அது நிதி அமைச்சரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இளம் வாக்காளர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், கடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியை பாதித்திருப்பதை அரசு உணரத் தொடங்கியிருக்கிறது என்பதை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் தெரிவிக்கின்றன.
  • வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், திறன் மேம்பாட்டுக்கும் ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் அதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • திறன் மேம்பாடும், ஊக்கத் தொகையும் ஓரளவுக்கு உதவினாலும் புதிய முதலீடுகளும், பொருளாதார எழுச்சியும் ஏற்படாமல் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது சாத்தியமில்லை. கட்டமைப்பு முதலீடுகளில் தனியார் துறை அக்கறை செலுத்தாமல் இருக்கும் நிலையில் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது இப்போதைக்கு கேள்விக்குறி.
  • மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய வருமான வரிவிதிப்பு முறையில் தனி நபர்கள், ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்படும் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நிலையான கழிவு ரூ.25,000-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்பட்டிருப்பது தேவையில்லாதது. பங்குச் சந்தைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.
  • கூட்டணிக் கட்சிகளுக்காக ஆந்திரம், பிகார் மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? கூட்டணி ஆட்சி என்றால் சில நிர்ப்பந்தங்களும் இருக்கும்தானே...

நன்றி: தினமணி (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories