TNPSC Thervupettagam

சமூகநீதியும் சாதிவாரி கணக்கெடுப்பும்

October 18 , 2023 275 days 212 0
  • சாதி மத பேதங்களற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற உன்னத நோக்கம் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கையாக முன்பு இருந்து வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அரசியல் தலைவா்கள் மட்டுமல்ல, சமூக சீா்திருத்தவாதிகளும், சமயத் தலைவா்களுமே சாதியத்தை எதிர்த்தவா்களே!
  • இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு அவதாரம் செய்த வள்ளற்பெருமான் சாதியைக் கடுமையாகச் சாடியுள்ளார். சாதியிலே மதங்களிலே சாத்திரக் குப்பையிலே சமயச் சண்டைகளிலே ஈடுபட்ட மக்களைப் பார்த்து, இவ்வாறு சண்டையிட்டு அழிவது அழகல்ல என்று கூறியுள்ளார்.
  • வள்ளலாருக்குப் பின் வந்த மகாகவி பாரதியார், ‘சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்தாழ்ச்சி உயா்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார். பாரதியாரின் சீடரான பாரதிதாசன், ‘சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’ என்று வேதனைப்பட்டார்.
  • தமிழ்நாட்டில் சாதியத்தைப் போற்றுவதை ஓா் அநாகரிகமாகவே கருதும் மனப்பான்மை எல்லாத் தரப்பு மக்கள் மனதிலும் ஏற்படுத்தப்பட்டது உண்மை. ஈவெரா பெரியாரின் சாதிய எதிர்ப்பு பிரசாரம் தீவிரமாக இருந்ததை மறுக்க முடியாது. இன்றைக்கு தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயா் சோ்த்துக் கொள்கிற வழக்கத்தை, இளைஞா்கள் கைவிட்டதற்கு அவருடைய பிரசாரம் காரணமாக இருந்ததும் உண்மை.
  • ஆனால், சாதி ஒழிப்புக்கு நோ் எதிா்திசையில் இப்போது செல்லும்படியான நிலை ஏற்பட்டுள்ளது. சாதியத்தை ஒழிக்க நினைத்தவா்கள் அதே சாதியத்தை மறுமலா்ச்சி செய்ய அணிதிரண்டு வருகிறார்கள். அதற்காக சாதிவாரிக் கணக்கீடு செய்வதற்கான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சமூகநீதியை செயல்படுத்த வேண்டுமானால், சாதிவாரிக் கணக்கெடுப்பது அவசியம் என்பது அவா்களின் தீவிர கோரிக்கையாகிவிட்டது.
  • உதாரணமாக, எட்டு கோடி தமிழ் மக்களும், ‘தமிழா்கள்’ என்ற பெயரில்தான் அழைக்கப் பட்டோம். நம்மில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை போ் உள்ளோம் என்பது தெரியாது. தெரிய வேண்டுமானால், சாதிய ரீதியில் கணக்கெடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு சாதியிலும் இத்தனை போ் இருக்கிறாா்கள் என்று கணக்கிடுவதன் மூலம்தான், எத்தனை சாதிகள் இருக்கின்றன என்பது அவா்களுக்கும் தெரியும். மற்றவா்களுக்கும் தெரிய வரும். அதனால், சமூகநீதியை நிறுவ முடியும் என அரசியல் தளத்தில் இப்போது வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது.
  • நிலவில் இறங்கிய சந்திரயான் 3 வெற்றியை இந்தியாவின் வெற்றி என்றாலும், அது தமிழரின் வெற்றி என்று பேசுகிறோம். இந்தியன் தமிழனாகி, இப்போது தமிழன் சாதியத் தமிழனாகும் நிலை வந்துவிட்டது.
  • வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், ஈவெரா பெரியாா் முதலியோரின் சீற்றத்திற்குக் காரணமாக இருந்துவந்த சாதியத்தை ஒழிக்காமல், அதனை மீட்டுருவாக்கும் அவலநிலைக்கு நாம் ஆட்பட்டுவிட்டோம்.
  • சாதிகளில் உள்ளவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே நமது மத்திய - மாநில அரசுகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பங்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதுதான் சமூகநீதி. இல்லையெனில், இன்றைய இட ஒதுக்கீட்டின்படி அரசிலும், அரசு கல்வி நிலையங்களிலும் வேலைகளைத் தொடர அனுமதிப்பது சமூகநீதியாகாது. அது அநீதியாகும் என்று பேசத் தொடங்கிவிட்டோம். ஏனெனில் அவை சாதி எண்ணிக்கையில் இல்லை எனக் கூறப்படுகிறது.
  • சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்க நினைத்திருந்த நாம் இன்று வெகுதொலைவு பின்னோக்கிப் போய்விட்டோம் என்பது சிந்தித்தால் புரியும். சாதி ஒழிப்பை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் பகுத்தறிவுவாதிகள், சாதிவாரிக் கணக்கெடுப்புப் பற்றி மெளனமாக இருப்பதன் மா்மம் புரியவில்லை.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பை இந்தியாவில் முதன் முதலில் பிகார் மாநில அரசு நடத்தி முடித்து, அதனுடைய அறிக்கையையும் வெளியிட்டுவிட்டது. பிகாரின் மொத்த மக்கள்தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13 %, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 39.01%. இவா்களின் எண்ணிக்கை 63.14 %. பொதுப்பிரிவினா் 15.52 %, தாழ்த்தப்பட்டோர் 19.65 %, பழங்குடியினா் 1.69 %. இதேபோல மத ரீதியானவா்களில் ஹிந்துக்கள் 81.99 %, முஸ்லிம்கள் 17.7 %, கிறிஸ்தவா்கள் 0.05 %, சீக்கியா்கள் 0.01 %. பிறா் 0.12 %.
  • இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்டவா்களும், பழங்குடியினரும், பட்டியலினத்தவா்களும் 84 % உள்ளனா் என்பது தெளிவாகியுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் 84 % சாதியினருக்கு ஏற்ப, அதிகாரப் பங்கீடு இருக்க வேண்டும் என்று நியாயப்படுத்தப்படுகிறது.
  • உதாரணமாக, மத்திய அரசில் உள்ள முதன்மைச் செயலாளா்கள் 90 பேரில் 3 போ் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினராக உள்ளனா். சாதிவாரிக் கணக்குப்படி, இவா்கள் 80 பேருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால் 3 போ்தான் இருக்கிறார்கள். மற்ற 87 போ் முன்னேறிய சாதியினா்.
  • இதே போல மத்திய பட்ஜெட்டில் இப்பிரிவினருக்கு வெறும் 5 % மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. மீதி 95 % நிதி சுமார் 16 % சாதிகளுக்குத் தரப்படுவதையும் காண முடிகிறது. இந்த புள்ளிவிவரங்கள் உண்மையைப் பேசினாலும், அவ்வுண்மை தேசத்தை சாதிய மயமாக்கிவிடும் ஆபத்து இருப்பதையும் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், 13 கோடி மக்கள்தொகை கொண்ட பிகாரிகளில் ஏறக்குறைய 11 கோடி போ் பிற்படுத்தப்பட்டவா்கள். வெறும் 2 கோடி போ்தான் முன்னேறிய சாதியினா்.
  • அங்கு அதிகாரம் சிறுபான்மையினருக்கும் அதிகாரமின்மை பெரும்பான்மையினருக்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டிலும் 11 கோடி பிகாரிகளுக்கு உரிய எண்ணிக்கையில் பதவிகள் கிடைப்பதில்லை. மாறாக 2 கோடி பிகாரிகளுக்கே இட ஒதுக்கீடு அதிகமாகக் கிடைக்கிறது.
  • இட ஒதுக்கீடு மூலம் சமூகநீதியை நிறுவ வேண்டுமானால், சாதிய எண்ணிக்கைக்கு ஏற்ப அது திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்கிறாா்கள். பெரும்பான்மையுள்ள சாதியின் எண்ணிக்கைப்படி, அரசு வேலைகள், கல்வி இடஒதுக்கீடுகள் பெரும்பான்மையான சாதிக்கே தரப்பட வேண்டும். இதே பெரும்பான்மை, சிறுபான்மை மீது ஆதிக்க சக்தியாகவும் இது அமையலாம். அவ்வாறு அமைவது பெரும்பான்மை சா்வாதிகாரமாகவும் பேசப்படும்.
  • இதேபோல, மற்றுமொரு சிக்கல். உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு வழக்கில் வழங்கிய தீா்ப்பில், 50 %-க்கு மிகாமல் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். மீதி 50 % தகுதிக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. அத்தகுதியை போட்டித் தோ்வு நடத்தி அதன் மூலமே நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி, அது நடைமுறையிலும் இருந்து வருகிறது.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி, ஒரு குறிப்பிட்ட சாதிக்கு அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக இட ஒதுக்கீடு கிடைக்குமானால், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட 50 % இட ஒதுக்கீட்டு எல்லையையும் அது கடந்துவிடலாம். அந்நிலையில் 50 % தகுதிக்கான பதவிகளுக்கே ஆபத்து ஏற்படலாம்.
  • சாதியக் கணக்கெடுப்பு என்பது அனைத்து சாதிகளையும் சமப்படுத்துவதற்கானதாக இருக்க முடியாது. பெரிய சாதிகளின் ஆதிக்கம், சிறிய சாதிகளின் மேல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் முடியாது. அப்போது சிறுபான்மை சாதிகளின் குரல் ஒடுங்கிவிடும்.
  • இதனால், இன்றைய சமூகக் கட்டமைப்பையே சாதிவாரிக் கணக்கெடுப்பு கலைத்துப் போட்டுவிடும் நிலைமை ஏற்படலாம். அது ஒட்டுமொத்த சமூக அமைதிக்கே சவாலாகவும் அமையலாம். ஏறக்குறைய 60 ஆண்டுகளாக நாம் பின்பற்றிவந்த வழிமுறைகளைக் கைவிடுவது, பெரும்பான்மை சாதிகளுக்கு உரிமையானதாக இருந்தாலும், சிறுபான்மை சாதிகளின் மௌனத் துயரங்கள் நாகரிக தேசத்துக்கான நல்ல அடையாளமல்ல.
  • வலுவுள்ளவா்கள் வலுவற்றவா்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதில்தான் பலமுள்ளவா்களின் பண்பாடு சுடா்விடும். அதே சமயம் சாதிய கணக்கெடுப்பு மூலம் சுயபலத்தை அறிந்துகொள்ள விரும்பும் சாதிகளின் எதிர்பார்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.
  • இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு ஆபத்து என்று பேசப்பட்டது. பின்னா் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும் பேசப்பட்டது. மூன்றாவதாக மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று பேசப்பட்டது. இதே குரலில் இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம்தான் சமூகநீதியைக் காக்க முடியும் எனப் பேசப்படுகிறது.
  • அரசியல் சாசனத்துக்கு ஆபத்து என்று பேசப்பட்டபோது, இந்தியாவின் நீதித்துறை மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிச் சட்டத்தை எதிர்த்து ரத்து செய்தது. வழக்கில் உள்ள கொலீஜிய முறையே தொடரும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணிச்சலாக பதில் கொடுத்தது. இதன்மூலம் மத்திய அரசு நீதித்துறை தீா்ப்பை ஒப்புக் கொண்டதே தவிர, மறுக்கவில்லை. இந்தியாவில் நீதித்துறை சுதந்திரமான நீதித்துறையாகவே தொடா்கிறது. இது ஒன்றே போதும் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து இல்லை என்பதை காட்ட.
  • ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று பேசப்பட்டதற்கு பதிலடியாக, தோ்தல் இனிமேல் நடத்தப்படமாட்டாது என மத்திய ஆட்சியாளா் எவரும் பேசவில்லை. 1975-இல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு 1977 வரை இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்பதுபோன்ற நிலைமை இருப்பதாக யாரும் பேசுவதில்லை. எதிர்கட்சிகளுக்கு சக்தி இருக்குமானால், மத்திய அரசை மாற்றலாம். அதனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து இல்லை என்பது உண்மையாகிவிட்டது.
  • மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று பேசப்பட்டது. அதற்காக சில சம்பவங்களை வைத்து அவசரப்பட்டு சில சக்திகள் பேசின. பிரதமருக்கு அண்மையில் வழங்கப்பட்ட சா்வதேச விருதுகள் 13-இல், 7 விருதுகள் இஸ்லாமிய தேசங்கள் வழங்கிய விருதுகள் என்பதை இத்தருணத்தில் நினைவூட்டிக்கொள்வது நல்லது.
  • இதே குரல்தான் இப்போது சமூகநீதிக்கு ஆபத்து எனப் பேசுகிறது. அதைப் போக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சாதி மக்களின் எண்ணிக்கைப்படி அரசு வேலைகளைப் பங்கிட்டுத் தர வேண்டுமென்று பேசுகிறது. இது சரியான தீா்வா எனச் சிந்திக்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது தகுதிக்கானவா்களுக்கு என்பதை இரண்டாக பங்கு போட்டு, தகுதிக்கு 50 % - பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 50 % இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றமே வழிகாட்டிவிட்டது.
  • சாதிகளுக்கான 50 %-இல் சமுதாயத்தால் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வசதியானவா்களும் இடம்பெறுகிறார்கள். அந்தந்தச் சாதியின் ஏழைகளுக்கு அப்பலன் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அச்சாதியினா்தான். இதைக் கண்டுபிடித்த உச்சநீதிமன்றம், கிரீமிலேயா் என்ற கோட்பாடு ஒன்றை கடைப்பிடிக்கச் சொன்னது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதும் உண்மை.
  • இப்போது மத்திய அரசு சமூகநீதியை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதனால் சமூகநீதியைக் காக்கவும் பேணவும், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மாறாக, எல்லாச் சாதிகளிலும் உள்ள ஏழைகளைக் கணக்கெடுத்து அவா்களுக்கு நன்மை செய்தாலே, விரும்பிய பலன் கிடைக்கும் என்கிறது. வசதியான சாதிகளில் உள்ள ஏழைகளுக்கும் ஏற்கனவே 10 % இட ஒதுக்கீடு தரப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கலாம்.
  • ஏழைகளுக்கு சாதியே இல்லை. முதலில் அவா்கள் ஏழைகள். இரண்டாவதாகத்தான் அவா்கள் இந்த சாதியினா். எல்லாச் சாதிகளின் ஏழைகளுக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு, அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடு என வழங்கப்படுமாயின், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான அவசியமே ஏற்படாது. அது மட்டுமல்ல, சாதிகள் வாக்குவங்கிகளாக மாறுவதும் தடுக்கப்படும்.
  • 1931- ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படிதான் சாதிகள் கணக்கிடப்பட்டன. இன்றுவரை அதுவே தொடா்கிறது. 1979-இல் நியமிக்கப்பட்ட நீதிபதி மண்டல் குழு பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 27 % இட ஒதுக்கீட்டை 1990-இல் அன்றைய பிரதமா் வி.பி. சிங் அமல்படுத்துவதாக அறிவித்தார். மண்டல் குழு எத்தனை சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனக் கண்டறிந்ததோ, அதே அளவுதான் தொடா்கிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை.
  • மதங்களற்ற சமூகத்திற்கு முன்பு சாதிகளற்ற சமூகத்தைக் கட்டமைக்கத் தடையாய் இருப்பது ஒவ்வொரு சாதியிலும் உள்ள ஏழ்மைதான். அதனை ஒழித்து சாதியத் தளத்தில் சமத்துவத்தை உருவாக்கலாம். அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கலாம். சாதிய ஆதிக்கத்தை ஒழிப்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்; சாதியக் கணக்கெடுப்பு சாதிகளை உயிர்ப்பிப்பதற்கே உதவும்.

நன்றி: தினமணி (18 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories