TNPSC Thervupettagam

சமூகப் பாதுகாப்பை என்கவுன்டர் மேம்படுத்துமா

September 1 , 2023 368 days 224 0
  • கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காகக் காவல் நிலையத்தில் வரலாற்று ஏடுபராமரிக்கப்பட்டு, காவல் கண்காணிப்பில் இருந்துவந்த இரண்டு ரவுடிகள் சில வாரங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி காவல் அதிகாரிகள் நடத்திய மோதல் கொலையில் (என்கவுன்டர்) பலியாகினர்.
  • கூடுவாஞ்சேரி பகுதியின் சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த குற்றவாளிகளில் இருவர் இறந்துவிட்டனர் என்ற மகிழ்ச்சி பொதுமக்களிடத்திலும், கொடுங்குற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த மோதல் கொலை அமைந்துள்ளது என்கிற பெருமிதம் காவல் துறை அதிகாரிகளிடத்திலும் வெளிப்படுகின்றன. இத்தகைய மோதல் கொலைகள் குற்றவாளிகளிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் அவர்களைத் தடுக்கும் என்கிற நம்பிக்கையும் சிலரிடம் வெளிப்படுகிறது.
  • பெரும்பாலான மோதல் கொலைகள் காவல் துறையினரால் திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகள் என்றும், இந்திய தண்டனைச் சட்டம் வழங்கியுள்ள தற்காப்பு உரிமைஎன்ற விதியைச் சுட்டிக்காட்டி, மோதல் கொலை என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் கொலைக் குற்றங்களில் இருந்து காவல் துறையினர் தப்பிவிடுகின்றனர் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துவருகின்றனர்.

இந்தியாவின் முதல் மோதல் கொலை

  • ஒரு குற்றவாளி செய்த குற்றத்துக்காக முறையான நீதி விசாரணை நடத்தி, தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, மோதல் கொலை என்ற பெயரில் காவல் துறையினரே அக்குற்றவாளியைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கிய முதல் சம்பவம் அன்றைய பம்பாய் நகரில் 1982இல் நிகழ்ந்தது.
  • கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்துவந்த மன்யா சர்வே என்கிற கைதி, சிறை வளாகத்தினுள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
  • இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்துவந்த அவர், கொலை உள்ளிட்ட பல கொடுங்குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். 1982 ஜனவரி மாதத்தில் ஒரு நள்ளிரவில் தன் காதலியைப் பார்க்கச் சென்றபோது, குற்றப்பிரிவுக் காவல் துறையினர் அவரைச் சுற்றி வளைத்துச் சுட்டுக்கொன்றனர்.
  • 1980கள் தொடங்கி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த பஞ்சாப் கிளர்ச்சியின்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றாக மோதல் கொலை முறை பயன்படுத்தப்பட்டது. இதில் கிளர்ச்சியாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதிகரித்த மோதல் கொலைகள்

  • இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் மோதல் கொலைகள் பரவலாகின. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மட்டுமின்றி, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதும் மோதல் கொலை முறை பயன்படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் 2016 முதல் 2021 வரையிலான ஆறு ஆண்டுகளில் 813 மோதல் கொலைகள் நிகழ்ந்துள்ளன எனவும், தற்போது அதிக அளவில் மோதல் கொலைகள் நடைபெறும் மாநிலமாகத் திகழும் உத்தரப் பிரதேசத்தில் 20172022 வரையிலான ஆறு ஆண்டுகளில், 183 மோதல் கொலைகள் நிகழ்ந்துள்ளன எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்த 94 மோதல் கொலைகளில் 23 மோதல் கொலைகள் சென்னையில் நிகழ்ந்துள்ளன.
  • கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணை முடிவடைய நீதிமன்றங்கள் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதாலும், தீர்ப்பு வரும்வரை அக்குற்றவாளிகள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாலும், இந்தத் தாமதத்துடன் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்வதால் குற்றத்தை உறுதிப்படுத்தும் சாட்சியம் தெளிவாக அமையாததாலும் பெரும்பாலான குற்றவாளிகள் விடுதலை அடைந்துவிடுகின்றனர்.
  • இத்தகைய சூழலில், மோதல் கொலைதான் தீர்வாக அமையும் என மக்களில் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.

நீதிக்குப் புறம்பான கொலை

  • முறையான நீதி விசாரணையின்றி, மோதல் கொலை என்கிற பெயரில் குற்றவாளிக்குக் காவல் துறையினரே மரணத்தை ஏற்படுத்தும் செயல் நீதிக்குப் புறம்பான கொலைஎனவும், இத்தகைய மோதல் கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. அவை வலியுறுத்துகிறது.
  • குற்றம் புரிய உடந்தையாக இருப்பவர்கள், குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள உதவி செய்பவர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளை மட்டும் மோதல் கொலை செய்வதன் மூலம் குற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வு காண முடியாது. ஒரு குற்றவாளி மோதல் கொலைக்குப் பலியானால், அந்த வெற்றிடத்தை மற்றொரு குற்றவாளி விரைவில் நிரப்பிவிடும் நிலை ஏற்படுகிறது.
  • ஆகவே, நுணுக்கமான புலன் விசாரணை, துரிதமான நீதிமன்ற விசாரணை, குற்றவாளிகளுக்குத் துணைபோகாத அரசு நிர்வாகம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சிதான் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தத் துணைபுரியும். இந்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, மோதல் கொலைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories