TNPSC Thervupettagam

சமூக ஊடக நிறுவனங்களின் போர்

July 20 , 2023 497 days 296 0
  • சென்ற பத்தாண்டுகளில் பெரும் பகுதியை பெரிய சமூக ஊடக நிறுவனங்களில்தான் பணி புரிந்துள்ளேன். ட்விட்டரை வாங்கிய உடனேயே சிறிது காலம் எலான் மஸ்குக்கு சில உதவிகளைச் செய்து தந்தேன். ட்விட்டரில் என்னுடைய நிறுவனம் முதலீட்டாளரும்கூட; சப்ஸ்டாக், ரெட்டிட் மற்றும் சில சமூக ஊடக நிறுவனங்களிலும் என்னுடைய நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. மார்க் ஆண்ட்ரீசீன் என்ற எங்கள் கூட்டு நிறுவனம் மெடா நிர்வாகக் குழுவில் இருக்கிறது.
  • சமூக ஊடக நிறுவனங்களுக்கு இடையில் சமீபமாக நடந்துவரும் மோதல்களும் உரசல்களும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புள்ளவை, அவற்றைக் கவனித்தாக வேண்டும்.

யதேச்சதிகார நிறுவனங்கள்

  • மிகச் சில பெரிய நிறுவனங்களைத் தவிர, இணையத்தில் நுகர்வோருக்கு இதுவரை வழங்கப் படாத அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க வேண்டிய ஒரு காலகட்டத்தின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம்.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்போது இணைந்துள்ள நாடுகள் இருந்த நிலையை எண்ணிப் பாருங்கள். மாமன்னர்களாலும் சர்வாதிகாரிகளாலும் அவை ஆளப்பட்டன. அப்படியான நிலையிலேயே சமூக ஊடகங்களின் தலைமை நிர்வாகிகளும் இதுவரை செயல்பட்டுவந்துள்ளனர்.
  • பயனாளிகளுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் நிலவுகிறது. தங்களுக்குக் கிடைக்கும் கேளிக்கைகள், பயன்களுக்கு எதிர் பலனாக,  தங்கள் மீது கட்டுப்பாடுகளைச் செலுத்தும் உரிமைகளை சமூக இணையதள நிறுவனங்களுக்குப் பயனாளிகள் அளித்துவிட்டனர்.
  • இந்தச் சூழலை யோசியுங்கள். ஒருவரை வேண்டாம் என்று ஒரு சமூக வலைதள நிறுவனம் நினைத்தால், உடனே அவரை எளிதாக அந்நிறுவனம் வெளியேற்றிவிடுகிறது. இப்படி ஒரு சமூக ஊடகத்திலிருந்து ஒருவர் வெளியேறும்போது அவருடைய பல்லாயிரக்கணக்கான பின்தொடர்நர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் அவர் இழந்துவிடுகிறார். இன்னொரு சமூக ஊடகத்துக்கு அவர் போகலாம் என்றாலும், இங்கே அவர் இழந்தவர்களை அப்படியே அங்கே கொண்டுபோய் குடியமர்த்த முடியாது. இது சரியா?

கருத்து ஆதிக்கர்கள்

  • பெரும்பாலான சமூக இணையதளங்கள் புவியரசியலால் ஆதிக்கம் செலுத்தப்படும் பூசல் மிகுந்த அடுத்தடுத்த நாடுகளைப் போலவே, நிம்மதியில்லாமலேயே வாழ்ந்தன. அதேசமயம், தங்களுடைய வலைதளத்தில் புத்தம் புதிய அம்சங்களைச் சேர்ப்பதில், அடுத்த நிறுவனத்தை அடியொற்றியே செயல்பட்டன. இன்ஸ்டாகிராமும் யூடியூபும், ‘ஸ்னாப்’ பற்றிய ஆக்கங்களில் ஒன்றையொன்று பிரதியெடுத்தன! அதேபோல, எவற்றையெல்லாம் தணிக்கை செய்ய வேண்டும் என்பதிலும் அவற்றுக்கு இடையே சித்தாந்த ஒற்றுமை நிலவுகிறது.
  • கோவிட் பெருந்தொற்று எங்கே முதலில் தொடங்கியது என்பதிலிருந்து அமெரிக்க அதிபர் பிடனின் மகனான ஹண்டரின் மடிக்கணினி ரகசியம் வரை எல்லா சமூக ஊடகங்களும் ஒரே தகவல்களையே தெரிவிக்கின்றன. ‘கருத்து ஆதிக்கர்கள்’ என்று இவற்றை வர்ணிக்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் எவிலின் டௌக்.

நூற்றாண்டு சூழல் திரும்புகிறதா?

  • ஐரோப்பியக் கண்டம் 1914இல் வெகு அமைதியாக இருப்பதைப் போலவே தோன்றியது. அப்போதுதான் பிளவுகளும் பதற்றங்களும் ஆரம்பித்தன. சிறிதும் முக்கியத்துவமே இல்லாத ஒரு படுகொலைக்குப் பிறகே மெதுமெதுவாக நாடுகளுக்கிடையே மோதல்கள் தொடங்கின. கடைசியில் உலகின் பெரும்பாலான நாடுகளை இழுத்துவிட்ட முதலாவது உலகப் போர் நடந்தது.
  • எனக்கு 2023இன் முன்பகுதியில் நடக்கும் ஆட்டங்கள் அப்படித்தான் தோன்றுகின்றன. சமூக ஊடகங்களின் – இது இப்படியே தொடரட்டும் – என்ற மனோபாவத்தை உடைத்து சுக்குநூறாக்கும் நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. இதனால் பல இடங்களில் இப்போது கலகம் தலைதூக்கியிருக்கிறது.

மூன்று ஆட்டங்கள்

  • முதல் ஆட்டம் பொருளாதாரத்தில் நடந்திருக்கிறது. நுகர்வோரிடமிருந்து நேரடியாக பணத்தைக் கறக்கும் தயாரிப்புகளுக்கு நிறுவனத் தலைவர்கள் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கின்றனர். நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆட்குறைப்பிலும் ஈடுபடுகின்றனர்.
  • இரண்டாவது ஆட்டம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தளத்தில் நடக்கிறது. செயற்கை நுண்ணறிவால் எவையெல்லாம் சாத்தியம் என்று அறிந்த சமூக வலைதள நிறுவனங்கள் தங்களுடைய தரவுகள் மற்றவர்களால் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்று கணக்கிடத் தொடங்கின.
  • முன்பு ரெட்டிட், ஸ்டாக்ஓவர்ஃப்ளோ போன்ற இணையதளங்கள், தங்களிடமுள்ள தரவுகளை – பல்வேறு தலைப்புகளில் தங்களுடைய பயனாளிகள் நிகழ்த்திய விவாதங்களை – அவை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தன. தேடுபொறிகள் தங்களுடைய கட்டுரைகளையும் கருத்துக் கருவூலங்களையும் நாடி வர வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இந்த அனுமதிப்பு நடந்தது.
  • சான் பிரான்சிஸ்கோ நகரிலேயே மக்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட்ட சிற்றுண்டியகம் எது என்றொரு விவாதத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
  • சான் பிரான்சிஸ்கோ சிற்றுண்டியகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு ரெட்டிட் என்று தேடினால், ரெட்டிட் தளத்தில் எப்போதோ நிகழ்ந்த விவாதங்களும்கூட உங்கள் தேடலில் வந்துவிடும். அதன் இணைப்புகளில் ஒன்றைத் தொடர்புகொண்டால்கூட ரெட்டிட் தளத்துக்குள் நீங்கள்  நுழைவீர்கள்; இதன் மூலம் அவர்களுடைய வியாபாரம் பெரிதாகும்.
  • இப்போது சூழல் மாறிவிட்டது. சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் தளங்களில், நீங்கள் சான் பிரான்சிஸ்கோ நகரின் சிறந்த சிற்றுண்டியகங்கள் எவை என்று கேட்டால் ரெட்டிட்டில் நிகழ்ந்த உரையாடலையே அவை பதிலாகத் தரும்; ஆனால், ரெட்டிட் நிறுவனம்தான் தன்னுடைய தகவலுக்கு மூலம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்காது. உங்களையும் ரெட்டிட்டிடம் தகவல் பெறும்படி விட்டுவிடாது. அதேபோல, இந்தத் தரவுகளைப் பெறுவதற்காக ரெட்டிட் நிறுவனத்துக்கு அது ஒரு பைசாகூட தராது. எனில், ரெட்டிட் நிறுவனத்தின் கதி என்னவாகும்?
  • மூன்றாவது ஆட்டம், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி போடுவது. ட்விட்டரை வாங்கியதும் மஸ்க் எடுத்த நடவடிக்கைகளுடன் நீங்கள் ஒத்துப்போனாலும் போகாவிட்டாலும் அவை சமூக வலைதள உலகில் தொடர் விளைவுகளை ஏற்படுத்திவிட்டன என்பதே நிதர்சனம்.
  • நிர்வாகச் செலவைக் குறைக்க ட்விட்டர்தான் நமக்கு முன்மாதிரி என்று ரெட்டிட் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கிறார். மெடாவின் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் ட்விட்டரைப் பின்பற்றி, தங்களைப் பயன்படுத்தும் தனிப் பயனீட்டாளர்களின் பின்புலத்தை சரிபார்க்க கட்டணம் வசூலிக்கின்றன.

அதிகாரம் பரவலாகுமா?

  • இந்த நிலையானது நம்மை முக்கிய மாற்றத்துக்கு இட்டுச் செல்லக்கூடும்: அது அதிகாரப் பரவலாக்கல். பத்தாண்டுகளுக்கும் மேலாக எல்லா பெரிய இணையதளங்களும் மையப்படுத்தப் பட்ட அதிகாரம், கட்டமைப்புடனேயே செயல்பட்டுவந்தன. 
  • இப்போது அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டிய அவசியம் பேசப்படுகிறது. பயனாளியின் கணக்கையோ தரவுகளையோ அந்த நிறுவன வாயில் காப்போனால் நீக்கிவிட முடியாது; எனவே இணையதளத்தைவிட்டு விலகும் எவராலும் அவருடைய ஆதரவாளர்களையும் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனும் சூழல் விரைவில் வரும்.
  • இப்படியான ஜனநாயக நடைமுறையை ஏற்றுக்கொண்டு செயல்படும் சமூக தளங்களின் சேவைக்கு சமீப காலமாக ஆதரவு அதிகரிக்கிறது. பல குழுக்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் இணையதள மேடைகளிலிருந்து விலகி இத்தகைய தளங்கள் நோக்கி நகர்கின்றனர். ‘ஃபர்காஸ்டர்’ தளத்தின் மீதான பயனாளிகளின் கவனத்தை நான் இப்படித்தான் பார்க்கிறேன். அந்த நிறுவனத்தில் நான் நேரடியாகவே முதலீடு செய்திருக்கிறேன். புளுஸ்கை, மஸ்டோடன் போன்ற செயலிகளும் அதிகாரப்பரவல் கண்டவைதான். எதிர்காலத்தில் இத்தகைய அதிகாரப்பரவல் இணையதளங்களின் சிலவற்றை திரெட்ஸ் ஆதரிக்கும் என்று இன்ஸ்டாகிராம் கூறியிருக்கிறது.

தரவுகள் பகிர்வு எப்படி நடக்கும்?

  • அடுத்த பெரிய விஷயம், பெரிய இணையதளங்கள் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிவருகின்றன. நிரல்களை எழுதும் ஸ்டாக் ஓவர்ஃப்ளோ, ரெட்டிட் போன்ற நிறுவனங்கள்  தங்களுடைய தரவுகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையை சமீபத்தில் உயர்த்தியுள்ளன. மூன்றாவது நபர்கள் தங்களுடைய தரவுகளைத் திருடி பயன்படுத்திவிடாமலிருக்கவே ரெட்டிட் இந்நடவடிக்கையை எடுத்தது என்றாலும், இந்நடவடிக்கைகளைக் கண்டித்து பல குரல்கள் எழுந்துள்ளன.
  • இணையதளங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ள அடிப்படையிலிருந்தே புதிய வழிமுறையைக் கண்டாக வேண்டும். இல்லையென்றால் பயனாளிகளின் எதிர்ப்பு அதிகரிக்கும். இணையதளங்கள் தங்களுக்குள் தரவுக் கூட்டணி அமைப்பதும்தான் பிரச்சினையைத் தீர்க்கும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
  • மிக நீண்ட காலமாகவே ஆன்-லைன் உலகம் தேக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. தொழில்நுட்ப புரட்சியும், பயனாளிகளிடையே அமைதியின்மையும் ஏற்பட்டால்தான் இந்தத் தேக்கநிலைக்கு விடிவு காலம் ஏற்படும். அந்த வகையில் இந்த மோதல்கள் எல்லாம் நல்லதுதான்!

நன்றி: அருஞ்சொல் (20 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories