TNPSC Thervupettagam

சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி!

August 6 , 2021 1187 days 706 0
  • மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற சமுதாயத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 27சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைத்திட்ட மகத்தான நன்மையாகவே பார்க்கப்படுகிறது.
  • இது சமூக நீதிக்கு கிடைத்திட்ட வெற்றியாகும். இத்தகைய இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதற்கு நீண்ட சட்டப் போராட்டமும், அரசியல் கட்சிகளின் போராட்டமும் காரணமாக அமைந்தன என்று கூறுவது மிகையல்ல.
  • எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றிற்கு நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது கூடுதலாக வரவேற்கக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
  • இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய சுகாதாரத் துறை அறிவித்திருப்பது வரலாற்றில் ஒரு மைல்கல் என்று கூறத்தக்க நடவடிக்கை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஏனென்றால், நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், வாசல்களைத் திறந்து வைப்பதற்கும் பேருதவியாக இந்த இட ஒதுக்கீடு இருக்கும்.
  • அதோடு மாத்திரமல்லாமல், சமூக நீதியின் பால் பற்றுறுதியோடும், மாறாத நம்பிக்கையோடும் அரசியலமைப்பு செயல்படுகிறது என்பதை இது தெளிவு படுத்தியிருக்கிறது.
  • மேலும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்தவா்கள் மீது நிதழ்த்தப்படும் சமூகத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு நல்வாய்ப்பாகவும் அமையும்.
  • இதனை, சமூக நீதிக்கு கிடைத்த ஓா் அங்கீகாரமாக பிற்படுத்தப்பட்டோரும், பொருளாதார நிலையில் நலிவடைந்தோரும் நம்பிக்கையோடும், நன்றியோடும் பார்க்கின்ற முடிவாக இது இருக்கின்றது.

நம்பிக்கை விதை

  • நாடு முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, மருத்துவ மேல்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான இடங்களில் குறிப்பிட்ட சதவீதம் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது.
  • இவ்வாறாகப் பார்த்தால், மருத்துவ இளநிலைப் படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் 50 சதவீத இடங்களையும், அகில இந்திய தொகுப்புகளில் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
  • இத்தகைய மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியல் இனத்தவா், பழங்குடி வகுப்பினா் ஆகிய பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
  • இவ்விடங்களில் பிற்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தியும், போராட்டம் செய்தும் அரசின் கவனத்தை ஈா்த்து வந்தன.
  • சமூக நீதிக் கொள்கையை ஆணிவேராகக் கொண்டிருக்கிற தமிழகத்தில் இக்கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டது.
  • இது தொடா்பாக சில கட்சிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தன.
  • இதனிடையேதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மத்திய அமைச்சா்களான பூபேந்திர யாதவ், ஆா்.சி.பி. சிங், அனுபிரியா படேல் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் சோ்ந்து இந்திய பிரதமா் நரேந்திர மோடியிடம் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினா்.
  • இவற்றுக்குப் பிறகுதான் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 27-ஆம் தேதி உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இதில் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
  • அப்போது தான் நீண்ட காலமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு விரைவில் எட்டப் படும் என்கிற நம்பிக்கை விதை முளைத்தது.

கனவுகளை நனவாக்கக்கூடிய ஒன்று

  • அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டிலேயே, அதாவது 2021 கல்வியாண்டிலேயே 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் கொண்டு வரப்படும் என்று வெளியிடப் பட்ட அறிவிப்பு சமூக நீதிக்கான மகத்தான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
  • இதன் மூலமாக, இளநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 1,500 மாணவா்களும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினரைச் சோ்ந்த மாணவா்கள் சுமார் 550 பேரும் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இவற்றோடு சோ்த்து, முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,500 மாணவா்களுக்கும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவில் 1,000 மாணவா்களுக்கும் இடஒதுக்கீடு மூலம் பயன் கிடைக்கும். இது அவா்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
  • ஆக மொத்தத்தில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலமாக 5,550 மாணவா்களுக்கு பலன் கிடைக்கிறது என்கிறபோது மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சமூக நீதிக் கொள்கை பின்பற்றப்பட்டு அதன் மூலமாக ஒடுக்கப் பட்டவா்களுக்கான ஏற்றத்தை இந்த ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது என்பதை வரலாறு நிச்சயம் குறித்துக் கொள்ளும்.
  • கடந்த 2014-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மருத்துவ இளநிலைப் படிப்பு இடங்களின் மொத்த எண்ணிக்கை 54,348 ஆக இருந்தது.
  • அது தற்போது 2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 84,649 இடங்களாக அதிகரித்திருக்கிறது. ஆக, கடந்த ஆறு ஆண்டுகளில் இதனைக் கணக்கிட்டுப் பார்த்தால் 56 சதவீத இடங்கள் அதிகரித்துள்ளன.
  • இதே போல கடந்த 2014-ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை 30,191 ஆக இருந்தது.
  • அது 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி 54,275 இடங்கள் ஆக உயா்ந்துள்ளது. அதாவது ஆறு ஆண்டுகளில் 80 சதவீத இடங்களை எட்டிப்பிடித்திருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், இந்தியா முழுவதிலும் புதிதாக 179 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதே ஆகும்.
  • இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 558 ஆக உள்ளது. அரசு சார்பில் இயங்கும் கல்லூரிகள் 289ஆகவும், தனியார் கல்லூரிகள் 269 ஆகவும் உள்ளன.
  • இந்த இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கைக்கும், மருத்துவத்துறைக்கும் கிடைத்திட்ட அருமருந்தாகவே அமைந்திருப்பதாகக் கூறலாம்.
  • இதன் மூலம் தேசிய தகுதிகாண் நுழைவுத்தோ்வில் (நீட்) இதுநாள் வரை பட்டியல் இனத்தவா் - பழங்குடியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இனி பிற்படுத்தப் பட்டோரும் இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவார்கள்.
  • மருத்துவப் படிப்புகளில் எந்த மாநிலத்தவரும் தான் பிறந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்துக்குச் சென்று படிக்கும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அகில இந்திய இட ஒதுக்கீட்டு முறை 1986-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த அகில இந்திய ஒதுக்கீடு 2007-ஆம் ஆண்டு வரை எவ்வித இட ஒதுக்கீடும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்டது.
  • அதன் பிறகு பட்டியல் இனத்தவா்களுக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் என்று அகில இந்திய ஒதுக்கீட்டு அளவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது.
  • இந்த நிலையில், மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2007-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய கல்வி நிறுவனங்களான சஃப்தா்ஜங் மருத்துவமனை, லேடி ஹாரிங்டன், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மத்திய அரசு நடைமுறைப் படுத்தியது.
  • எனினும், இதே முறை மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படாமல் இருந்து வந்தது.
  • பின்னா், மருத்துவப் படிப்புகளில் சேர 2010-ஆம் ஆண்டில் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு என்கிற நீட் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.
  • நீண்ட விவாதத்திற்குப் பிறகு 2017-ஆம் ஆண்டு முதல் இத்தோ்வு முறை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவானது.
  • இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் இந்த நீட் தோ்வு முறை வேண்டாம் என்றும், அதிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. இத்தோ்வு முறையே வேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
  • கடந்த 2019-ஆம் ஆண்டு உயா்கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்த நரேந்திர மோடி அரசு, அரசியலமைப்பில் செய்த திருத்தத்தின் விளைவாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உயா்கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
  • இதைத் தொடா்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கையிலும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவடைந்ததைத் தொடா்ந்து, தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டில் கொண்டு வரப்பட்ட இந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது.

நன்றி: தினமணி  (06 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories