TNPSC Thervupettagam

சமூக மாற்றத்தில் நீதிமன்றங்களின் பங்களிப்பு

June 24 , 2024 206 days 149 0
  • பிரிட்டிஷ் காலனி நாடாக இந்தியா விளங்கியபோது, இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாணிபத்திற்கு இடையூறாகவும் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிகழ்ந்த குற்ற நிகழ்வுகள் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாமஸ் பாபிங்டன் மெக்காலேயால் வரைவு செய்யப்பட்ட இந்திய தண்டனை சட்டமும், குற்றவியல் நடைமுறைச் சட்டமும் காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகின்றன.
  • சிறிய குற்றங்கள் முதற்கொண்டு கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை குறித்தும், அவ்வழக்குகளில் நீதி விசாரணை நடத்துவதற்கான சட்ட விதிமுறைகள் குறித்தும் இச்சட்டங்கள் விவரிக்கின்றன. ஆனால், அக்குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல், இந்திய குற்றவியல் சட்டங்களை மெக்காலே வரைவு செய்தார்.
  • கொடூரமான குற்றச் செயலாகக் கருதப்படும் கொலைக் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர், போக்குவரத்து மிகுந்து காணப்படும் சாலையில், பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கொலை செய்திருந்தாலும், கொலை செய்ததற்கான ஆதாரங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபணம் செய்தால்தான், அக்கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போதைய நீதி வழங்கல் நடைமுறையாக நம்நாட்டில் இருந்து வருகிறது.
  • "கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையில் கொலை செய்தாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும், அவர் கொலை செய்ததற்கான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதா?' என்பதைதான் இந்திய குற்றவியல் சட்டங்களும் நீதிமன்றங்களும் எதிர்பார்க்கின்றன. பலர் முன்னிலையில் கொலை செய்த குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை என்றால், அக்கொலையாளியை நிரபராதி என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்துவிடும்.
  • கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தன்னுடைய எதிரியைக் கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏற்பாடு செய்து கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருவது தெரிகிறது. கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு, இயங்கிவரும் கூலிப்படைகள் நம் நாட்டில் வலுப்பெற்று வருகின்றன.
  • கூலிப்படைகள் நிகழ்த்தும் கொலைகள் பெரும்பாலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலைகளில் நிகழ்வதைக் காண முடிகிறது. சில சமயங்களில், கூலிப்படையினர் தங்களது இலக்கை தவறவிட்டு, மற்றொரு நபரைக் கொலை செய்துவிடுவதும் உண்டு. கூலிப்படையினர் நிகழ்த்தும் கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கூலிப்படைக்குப் பயந்து கொண்டு, நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்ல முன்வராத நிலையும் நிலவி வருகிறது.
  • குற்றவாளிகள் யார் என்று அடையாளம் கண்டறிந்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் கொலை வழக்குகளில் 44% கொலை வழக்குகள்தான் நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடைகின்றன. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தண்டனை விதித்த கொலை வழக்குகளில் 90% வழக்குகள் விடுதலையில் முடிந்துவிடுகின்றன. உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்ட கொலை வழக்குகளில் பெரும்பாலானவை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும் மேல்முறையீட்டில் விடுதலையில் முடிந்து விடுகின்றன. உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த கொலை வழக்குகளின் எண்ணிக்கை சொற்பமானவை ஆகும்.
  • கூலிப்படையினர் மீதான குற்ற வழக்குகள் பெரும்பாலும் நீதிமன்றங்களில் தண்டனை உறுதி செய்யப்படாத நிலை நிலவுவது மட்டுமின்றி, அவர்கள் சார்ந்த ஜாதி சமூகத்தில் அவர்களுக்கு மரியாதையும், சில அரசியல் கட்சிகள் அவர்களுக்கு அங்கீகாரமும் வழங்குகின்றன. பணத்திற்கு கொலை நிகழ்த்தும் கூலிப் படையாகச் செயல்படுவது தொழிலாக மாறி வருகின்ற இன்றைய சமூகத்தில், குற்றவியல் சட்டங்களும் நீதிமன்றங்களும் கூலிப்படையினரின் கைகளுக்கு விலங்கு பூட்டி, அவர்களின் கொட்டத்தை அடக்கத் தவறிவிடுமோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான கொலை வழக்கு ஒன்றின் மேல்முறையீடு தீர்ப்பு எழுப்புகிறது.
  • மனித உயிர்களைக் காப்பாற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய மருத்துவர் சுப்பையா தனது அலுவல்களை முடித்துவிட்டு, சென்னை நகரில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இருந்து வெளியே வந்து, அவரின் காரில் ஏறச் சென்றபோது, கூலிப்படையினர் அவர் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதல் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவின் விடியோ காட்சி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • மருத்துவர் சுப்பையா மீது விரோதம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், கூலிப்படையினர் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தை மனிதப் பண்புடைய எவரும் ஏற்க மாட்டார்கள். இந்த கொலை வழக்கில் நீதி விசாரணை மேற்கொண்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், சென்னை, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில், கூலிப்படையாகச் செயல்பட்டு, மருத்துவர் சுப்பையாவை மிருகத்தனமாக வெட்டி கொலை செய்த கொலையாளிகள் உட்பட மொத்தம் ஏழு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், மேலும் இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.
  • கூலிப்படையாகச் செயல்பட்ட கொலையாளிகளில் ஒருவர், மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த பின்னர், மற்றொரு கொலை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகளும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த மேல்முறையீட்டின் தீர்ப்பின்படி, கூலிப்படையினர் உட்பட அனைத்து குற்றவாளிகளும் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  • புலன்விசாரணையின் தரம், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவை ஒரு பக்கம் இருக்க, மருத்துவர் சுப்பையா கொலை நிகழ்வை வெளிப்படுத்தும் கண்காணிப்பு கேமரா விடியோ பதிவும், அதன் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட கூலிப்படையினரும் இக்கொலை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  • இரு தரப்பினருக்கு இடையே நிலவிவரும் தீர்வு காணப்படாத பிரச்னைக்காக, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரைக் கொலை செய்து வந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. கொலை குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்டு, சிறை செல்வதற்குப் பதிலாக, கூலிப்படையினர் மூலம் தங்களின் விரோதியைக் கொலை செய்யும் மனநிலை சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் கூலிப்படைகளின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
  • கூலிப்படைகள் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டால், அதிக பட்சம் மூன்று மாதங்களில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துவிட முடியும் என்பதும், கொலை வழக்கில் தண்டனை கிடைத்தாலும், புலன்விசாரணையிலுள்ள சிறுசிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, மேல்முறையீட்டில் விடுதலை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் கூலிப்படையினர் இடையே நிலவுகிறது.
  • அதிகரித்துவரும் இக்கொடிய பிரச்னையை உடனடியாக எதிர்கொள்ளத் தவறினால், சமூக ஆரோக்கிய நிலையைச் சீர்குலைத்துவிடும். சட்டமும் சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. முறையான சட்ட நிர்வாகம் இல்லாத சமூகம் விலங்குகள் வாழ்கின்ற காடாக மாறிவிடும். அதே சமயம், சமூகத்தில் நிகழ்கின்ற மாற்றங்களை காலத்திற்கேற்ப உள்வாங்கி, சட்டங்களும் நீதி பரிபாலனமும் தங்களை மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • நெதர்லாந்திலுள்ள லைடன் நகரில் அமைந்துள்ள லைடன் சட்டப் பள்ளியில் 2022-ஆம் ஆண்டில் "நீதிமன்றம் - சமூக மாற்றத்திற்கான அரங்கம்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. நீதிமன்றம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வழங்கப்படும் தீர்ப்பு, அந்த வழக்கிற்கும் அதனோடு தொடர்புடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் தீர்ப்பாக அமைவதைக் காட்டிலும், அவ்வழக்கோடு ஒத்திருக்கும் சமூகப் பிரச்னைக்கான தீர்வாகவும் அமைய வேண்டும் என்ற கருத்து அந்தக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டது.
  • கண்காணிப்பு கேமரா விடியோ பதிவு மருத்துவர் சுப்பையாவைக் கொலை செய்த கூலிப்படையினர் யார் யார் என்பதையும், கொலை செய்த விதத்தையும், கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களையும் துல்லியமாக காட்டிய பின்னரும், புலன்விசாரணையில் உள்ள குறைபாடுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, கூலிப்படையினரை கொலை குற்றத்திலிருந்து விடுதலை செய்வதால், சமூகம் எதிர்கொள்ளும் விளைவுகளை நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
  • சமூக மாற்றங்களுக்கு ஏற்ப, குற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் சட்ட திருத்தங்களும் நீதிமன்றங்களின் அணுகுமுறையில் மாற்றங்களும் இன்றியமையாதவை என்று லைடன் சர்வதேச கருத்தரங்கம் உணர்த்தியது. சுப்பையா வழக்கின் தீர்ப்பு அதன் உடனடி அவசியத்தை வலியுறுத்துவதாக இருக்கிறது.

நன்றி: தினமணி (24 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories