- தென் மாவட்ட மக்களுக்கு நீதி வழங்கிவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. 1990களில் முன்மொழியப்பட்டு, மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்கள், மக்களின் தொடர் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை மதுரையில் கடந்த 2004 ஜூலை 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தென் மாவட்டங்களின் நீதிமன்றம்:
- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் இங்கு விசாரிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புறப் பின்னணி கொண்ட முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் இந்த மாவட்டங்களில் அதிகளவில் இருக்கின்றனர்.
- 80 சதவீத இளம் வழக்கறிஞர்களின் பயிற்சிக் களமாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை உள்ளது. இங்கு வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்த பலர் இதே நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பணிபுரிந்து இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
- சென்னையில் மட்டுமே உயர் நீதிமன்றம் இயங்கிவந்த காலத்தில் வழக்குத் தொடர்வோர், வழக்குகளுக்காகச் சென்னைக்குச் செல்ல வேண்டுமென்றால், முதல் நாள் இரவே புறப்பட்டு, சென்னையில் தங்கித் தங்களது வழக்குகளை நடத்தும் நிலை இருந்தது. மதுரையில் கிளை தொடங்கப்பட்டதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளியவர்களும் நீதிமன்றத்தைச் சுலபமாக நாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொது நலத் தீர்ப்புகள்:
- சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடங்கப்பட்ட நாளில் இருந்து, இப்போது வரை நாடு முழுவதும் பேசப்படும் முக்கியத் தீர்ப்புகளை வழங்கிவருகிறது. சிறு வயதிலேயே தீ விபத்துக்குள்ளாகித் தனது சிறுநீரகக் கட்டுப்பாட்டை இழந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதும்போது ‘டயபர்’ அணிந்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டதும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் நீட் தேர்வில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ததும் இந்த நீதிமன்றம்தான்.
- கீழடி, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்திடவும், தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலும் ஒரு தலித் - ஒரு பெண் உள்ளடங்கிய ஐந்து நபர்கள் கொண்ட அறங்காவலர்கள் குழு அமைத்திடவும் உத்தரவிட்ட இந்த நீதிமன்றம், 14 மாவட்டங்களில் மணல் அள்ளத் தடை விதித்தும், அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்றிட மாவட்ட அளவில் வழக்கறிஞர் குழு அமைத்தும் பல்வேறு முக்கியமான உத்தரவுகளை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான தமிழ்நாடு அரசு உத்தரவை ரத்து செய்ய மறுத்தது இந்த நீதிமன்றம்.
மனித உரிமைத் தீர்ப்புகள்:
- எப்போதெல்லாம் சாமானிய மக்களின் குரல்வளை நெரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மதுரை உயர் நீதிமன்றம் தலையிட்டு, சமூக நீதியை மீட்டெடுத்து வருகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் சாட்சிகளை உயர் நீதிமன்றமே மறுவிசாரணை செய்து தண்டனை வழங்கிய தீர்ப்பு நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது.
- அதேபோல இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கவும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த தந்தை - மகன் கொலை வழக்கில் உரிய தீர்வு எட்டுவதற்காக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. காவலர் பணியில் உள்ள இஸ்லாமியர் ஒருவர் தாடி வைத்ததற்காக அவர் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை ரத்துசெய்தது. கணவனை இழந்த பெண், மீனாட்சி அம்மன் கோயிலின் செங்கோலைப் பெறுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என்று தீர்ப்பு வழங்கியது.
- இதுபோல கூடங்குளம், நெடுவாசல் போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவு, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தானக் கருவிகள் பொருத்த வேண்டும் என்கிற உத்தரவு, மதுரை மத்திய சிறையில் தாக்கப்பட்ட கைதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற உத்தரவு எனப் பல மனித உரிமைத் தீர்ப்புகளை மதுரை உயர் நீதிமன்றம் தொடர்ந்து வழங்கிவருகிறது.
- 20.07.2024 அன்று மதுரைக் கிளையின் 20ஆவது ஆண்டு நினைவுத் தூணைத் திறந்து வைக்க வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதியை மட்டும் வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ளும் உரிமைகளை அங்கீகரித்தது, பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, தீர்வு) சட்டம் 2013 உள்ளிட்ட பெண்கள் நலனை மையமாக கொண்ட சட்டங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தது என நேர்மையான சமூக மாற்றத்துக்கு ஒரு ஊக்கியாகத் திகழ்கிறது” எனத் தெரிவித்தது மதுரைக் கிளைக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு.
- 20 வருடக் குறுகிய காலத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், குமாஸ்தாக்கள், வழக்காடிகள் ஆகியோருடைய அர்ப்பணிப்பினால் சுமார் 12,30,000 வழக்குகளுக்கும் மேல் தீர்வு கண்டு, தனது நீதிப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது மதுரை உயர் நீதிமன்றம்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)