TNPSC Thervupettagam

சமூக வலைதளத்தைச் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா

July 1 , 2023 568 days 349 0
  • மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார், கிரேக்கத் தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில். மனிதன் எப்போதுமே தன் சமூகத்தை சார்ந்துதான் இருக்கிறான். கூட்டமாக வாழும்போது அவன் உயிர் வாழ்தலின் சாத்தியம் அதிகமாகிறது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். இந்த இரண்டு அடிப்படையையும் நாம் புரிந்துகொண்டால், சமூக வலைதளங்கள் மனித சமூகத்துக்கு எவ்வளவு பெரிய கொடை என்பது மிக எளிதாக விளங்கும்.

எத்தனை எத்தனை பயன்

  • சில ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் பிறந்தது. உடனே, சமூக வலைதளத்தில் நுழைந்து செயற்கை நுண்ணறிவு பற்றி தேடினேன், பல நல்ல பக்கங்கள், குழுக்கள் கிடைத்தன. அவற்றில் இணைந்தேன். அவர்களிடம் கேள்விகள் கேட்டேன். புத்தக அறிமுகங்கள், கட்டுரைகள் எனச் செயற்கை நுண்ணறிவுப் பற்றி பலவற்றை அறிமுகம் செய்தார்கள். என்னால் மிக எளிதாக கற்றுக்கொள்ள முடிந்தது.
  • ஒரு நாள் ‘லிங்க்டுஇன்’ (linkedin) சமூக வலைதளத்தில் எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர், தான் வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் என் நிறுவனத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்றும் கேட்டிருந்தார். உடனே என் நிறுவனத்தில் தேடியபோது அவருக்கான வாய்ப்பு இருந்தது. விஷயத்தைக் கூறினேன். சில மாதங்களில் அவருக்கு என் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இன்றும்கூட வேலை தொடர்பான, தொழில் முறை சார்ந்த ‘லிங்க்டுஇன்’ மாதிரியான சமூக வலைதளங்கள் பலருக்குப் பல நன்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
  • நமக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தி லிருந்து சரியான பதில் வரவில்லையா? ட்விட்டரில் அவர்களை ‘டேக்’ செய்து கேட்டவுடன் நமக்கு அந்தச் சிக்கல் தீர்க்கப் படுகிறது. இன்று சமூக வலைதளத்தின் உதவியுடன் நண்பர்கள் நம் அருகிலேயே எப்போதும் இருக்கிறார்கள். கரோனா மாதிரியான பெருந்தொற்றுக் காலத்தில்கூட நாம் மனித சமூகத்திடம் இருந்து விலகிவிடவில்லை. சமூக வலைதளங்கள் மனித சமூக தொடர்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியதுதான்.
  • நீங்கள் சமூக வலைதளத்தைக் கவனமாகவும் தேர்ந்த அறிவுடனும் பயன்படுத்தினால், அது தரும் நன்மைகள் ஏராளம். அது அறிவை ஜனநாயகப்படுத்தி இருக்கிறது. நிச்சயம் இந்த உலகில் நடக்கும் பல விஷயங்கள் உங்களுக்கு மிக எளிதாகத் தெரிந்துவிடுகிறது. செய்தி நிறுவனங்கள் செய்தியைத் தரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் புதிதாகச் செல்லவிருக்கும் ஊர்களைப் பற்றி கேள்விகளைக் கேட்டால் போதும், சமூக வலைதள நண்பர்கள் பல தகவல்களை உங்களிடம் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பயணங்கள் எளிமையாக இருக்கின்றன. பாதுகாப்பும் அதிகரித்திருக்கிறது.

சிக்கல் என்ன?

  • இன்னொரு பக்கம் சமூகவலைதளங்கள் பெரு நிறுவனங் களிடம் சிக்கிக் கொண்டிருப்பதால் அவர்கள் நம்மிடமிருந்து சேகரிக்கும் அளவற்ற அந்தரங்கத் தகவல்கள் நமக்கு எதிராகவே திசை திருப்பப்படுகின்றன. நம்மை உளவியல் ரீதியாக அடிமையாக்குகின்றன. சமூக வலைதளங்கள் ஏற்படுத்தி இருக்கும் பெரிய உளவியல் சிக்கல், சமூக வலைதளப் பொறாமை. சமூக வலைதளங்களில் நம் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைக் கொண்டு நம் வாழ்வுடன் தொடர்ந்து அதை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். ஒப்பீடு மனநோயாக மாறும்வரை ஒப்பிடுகிறோம். பல குடும்பங்களில் குழப்பங்களும் கணவன் மனைவியிடையே பிரிவும் ஏற்படும் அளவுக்கு ஒப்பிட்டுக்கொள்கிறோம். ஆனால், நம் அறிவுக்குச் சமூக வலைதளப் பதிவுகளும் படங்களும் அந்த நேரத்தில் மிக நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்டவை என்பது மட்டும் புரிவதே இல்லை.
  • நம் நண்பர் சென்ற சுற்றுலாப் படங்களைப் பார்த்து நாம் பொறாமைப்படுகிறோம். ஆனால், அந்த நண்பர் தேய்த்த கடன் அட்டையைப் பற்றி நமக்குத் தெரியாது. தன்னை மிக அழகாகக் காட்டும் பெண்ணை ஒப்பிட்டு, நமக்கு அழகில்லையோ என மனம் வெதும்புகிறோம். ஆனால், அது வெறும் ஃபில்டர் என்பது நமக்குத் தெரிவதில்லை. இன்ஸ்டகிராம் ஃபில்டர்கள் உதவியுடன் காட்டப்படும் செயற்கையாக அழகு கூட்டப்பட்ட படங்களை வைத்துப் பல பதின் வயது ஆண்களும் பெண்களும் அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் சர்ஜரி நோக்கி நகர்வதாக அதிர்ச்சியான ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
  • ஒரு பக்கம் ட்விட்டரில் உடனடியாக அரசையும் அரசு அலுவலகங்களையும் நம்மால் எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. பல பல கருத்துகள் சொல்கிறோம்; அரசியல் பேசுகிறோம். ஆனால், மறுபக்கம் அனைத்தையும் கேலி கிண்டல்களாக்கி வெறும் மீம்களாகச் சுருக்கிவிடுகிறோம். சமூகத்தில் நடக்கும் எந்த அவலமும் அரசியலும் ஒரு மீமாகச் சுருக்கி நீர்த்துப்போகச் செய்கிறோம்.
  • சமூக வலைதளம் என்பது 21ஆம் நூற்றாண்டில் அறிவியலும் தொழில்நுட்பமும் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப் பெரும் ஆயுதம். அந்த ஆயுதத்தைக் கொண்டு சமூகத்தின் பல அவலங்களை நம்மால் நீக்க முடியும். அறிவைச் சமூகத்துக்குப் பரப்ப முடியும். கருத்து சுதந்திரத்தை அனைவருக்கும் சமமாக விரிவாக்க முடியும். கடைநிலை மனிதனின் அறிவையும் உரிமையையும் அரசியலையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை மேம்படுத்த முடியும். ஆனால், அந்த ஆயுதத்தைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆகவே, இந்தச் சமூக வலைதள நாளில், அந்த ஆயுதத்தை மக்களின் நன்மைக்காக, குறிப்பாகக் கடைநிலை மனிதனின் நன்மைக்காகப் பயன்படுத்துவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (01 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories