TNPSC Thervupettagam

சம்பாதிப்பது ஆணின் கடமை மட்டுமல்ல

August 6 , 2023 395 days 287 0
  • பெண் சுதந்திரம் என்பது ஆணை அடிமைப்படுத்துவதில்லை. அவனைப் போட்டுப் படுத்துவதுமில்லை. பெண்ணியவாதி என்று சொல்லிக்கொண்டு தன் உரிமைகளுக்கு மட்டும் குரல் கொடுத்துக்கொண்டு பொறுப்புகள் எதையும் சுமக்கத் தயாரில்லாத பெண்களும் இன்று நம்மிடையே உண்டு. சுதந்திரம் தனித்து வருவதில்லை. பொறுப்புகளும் சேர்ந்தே வந்தால்தான் அது சுதந்திரம். பெண் சுதந்திரம் என்பது ஆணுக்கு நிகராகத் தன்னை வளர்த்துக்கொள்வதே. அவனை மிதித்து மேலே வருவதில்லை.
  • நான் சமையலுக்காக நேர்ந்துவிடப்பட்டவள் இல்லை, பிள்ளைகளைக் கவனிப்பதற்காக நேர்ந்துவிடப்பட்டவள் இல்லை என்கிற உணர்வில் ஒரு தவறும் இல்லை. குடும்பம் என்று வந்துவிட்டால் இருவரும் இணைந்து பொறுப்புகளைச் சுமப்பதே சரியாகும். அதனால், ஆண்களும் வீட்டு வேலைகளில், பிள்ளைகளைக் கவனிப்பதில் என்று பங்கெடுத்து வாழத்தான் வேண்டும்.
  • இந்த எதிர்பார்ப்பிலும் ஒரு தவறும் இல்லை. ஆனால், வேலைக்குச் செல்லும் சுதந்திரம் இருந்தாலும், அதற்கான தகுதிகள் இருந்தாலும், வீட்டிலிருந்தே எதுவும் செய்து வருமானத்திற்கான வழி தேடும் வகைகள் இருந்தாலும் நிறைய பெண்கள் இன்றும் ஆண்தான் வீட்டின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்ற வேண்டும். அது அவனது கடமை மட்டுமே என்கிற ரீதியில்தான் இயங்குகிறார்கள். சில பெண்களுக்கு வருமானமே வந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பணம் என்றும் ஆணின் வருமானம் மட்டுமே குடும்பத்தின் செலவுகளுக்கான பணம் என்றும் இருக்கிறார்கள்.
  • Division of Labour என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குடும்பம் என்று ஒன்று வந்துவிட்டால் அங்கு இருவருக்குமான உரிமைகளும் உண்டு, இருவருக்குமான கடமைகளும் உண்டு. ஒருவர் வீட்டிலிருந்து குடும்பத்தைக் கவனிக்க, இன்னொருவர் வெளியில் சென்று வருமானம் ஈட்டிவருவது என்பதாகத்தான் இந்த வேலைப் பகிர்வைப் பார்க்க வேண்டும். இதில் ஆண்/பெண் பேதங்கள் இருக்கக் கூடாது. ஆனால், ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண் வருமானம் ஈட்டிவருபவனாகவும், பெண் வீட்டில் இருந்தபடி குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்றும் உருவாக்கிவைத்துவிட்டார்கள்.
  • ஆனால், மனிதர்களைவிடப் பணம் பெரிதாகிவிட்ட காரணத்தாலும், வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்ட காரணங்களாலும் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்தவளாகப் பெண் ஆக்கப்பட்டுவிட்டாள். ஒருவிதத்தில் இது பெண்ணுக்கு எதிரானது என்று மட்டுமே தோன்றினாலும், இது ஆணுக்கும் நன்மை பயப்பதில்லை. குடும்பத்தில் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் அவன் மட்டுமே கவனித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆண் ஆளாக்கப்பட்டுவிட்டான். அளவுக்கு அதிகமாக வருமானம் வரும் வீடுகளில் இது பெரிய பிரச்சினையாக உருவெடுப்பதில்லை. மிகவும் ஏழ்மையில் இருக்கும் வீடுகளில் இருவரும் தங்களால் முடிந்த வேலைக்குச் சென்று தங்களால் முடிந்த அளவில் வாழ்ந்துகொள்கிறார்கள்.

ஆபத்தான ஒப்பீடு

  • ஆனால், நம் நாட்டு மக்களில் பெரும் பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மனநிலைதான் மிகவும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரரீதியாகத் தங்களுக்கு மேலே இருப்பவர்களைப் பார்த்து, அவர்களைத் தங்கள் நிலையுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு நிகராக வாழ ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆசைகள் இருப்பதால்தான் இயங்குகிறோம்; முயல்கிறோம்; முன்னேறுகிறோம். ஆனால், தன் பக்கத்திலிருந்து எந்தவித முயற்சியும் இல்லாமல் தனக்கு எல்லாம் வேண்டும் என்கிற மனநிலையில்தான் இங்கு ஆண்கள் சிலரும் பெண்கள் பலரும் இருக்கிறார்கள்.
  • வருமானம் ஈட்டுவது என்பது ஓர் ஆணின் பொறுப்பு மட்டுமே என்று நினைக்கும் பெண்களில் பலர் தங்களின் மொத்த எதிர்பார்ப்புகளையும் அந்த ஆணின் தலையிலேயே சுமத்துகிறார்கள். ஒவ்வோர் ஆணும் இங்கு பெரும் பணக்காரனாக ஆக இயலாது. அவரவர் சூழல், திறமை என்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையானவரே. ஒன்று கணவன் ஈட்டும் பணத்துக்குள் திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பற்றாக்குறைக்குத் தான் வேலைக்குப் போயோ இல்லை வீட்டில் இருந்தபடி தன்னால் முடிந்ததைச் சம்பாதித்தோ அந்தப் பற்றாக்குறையைக் களைந்துகொள்ளும் வழியைப் பார்க்க வேண்டும்.

கடமையும் பொதுதான்

  • வேலைக்குப் போகும் கணவன், அவனுக்கு இவ்வளவுதான் வருமானம் என்று தெரிந்தும், அவன் ஈட்டும் ‘பணம் போதவில்லை, எனக்கு அதைச் செய்வதில்லை, இதை வாங்கித்தருவதில்லை, எதற்கும் லாயக்கில்லை’ என்று அவனைக் குத்திக் கிளறிக்கொண்டிருக்கும் பெண்கள் சிறிது சிந்திக்க வேண்டும். அவனால் முடிந்ததைத் தானே அவன் செய்ய முடியும்? மேலும் மேலும் அவனை இப்படிப் படுத்திக்கொண்டிருந்தால் அவன் எங்கே செல்வான் அவ்வளவு செலவுக்கும்?
  • வீட்டு வேலைகளில் பங்கெடுக்கும் கடமை எப்படி ஓர் ஆணுக்கும் உள்ளதோ அதேபோல் வருமானம் போதாமல் போனால், அவனுக்குத் தோள் கொடுக்கும் கடமை பெண்ணுக்கும் இருக்க வேண்டும்தானே? அடிப்படைத் தேவைகளை விட்டுவிடலாம். தன் ஆடம்பரச் செலவுகளுக்கும் பட்டுப் புடவைகளுக்கும் நகைகளுக்கும் மற்ற பெண்களுடன் போட்டி போடுவதற்கும் அதிகமாகப் பணம் வேண்டும் என்று கணவர்களை விரட்டும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? எத்தனை வீட்டில் ஆண்கள் பெண்களின் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் சுமைகளை ஏற்றிக்கொள்கிறார்கள்? அவர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?
  • பெண் விடுதலை கண்டிப்பாக வேண்டும். ஆண்டாண்டு காலமாகத் தன் திறமைகள் எல்லாம் முடக்கப்பட்டு நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள் பெண்கள் என்பதே ஒரு சமூகத்தின் இழிநிலையைத்தான் பறைசாற்றுகிறது. ஆனால், விடுதலைக்காகப் போராடும் பெண்கள் அதேநேரம், சில பொறுப்புகளையும் சுமக்கத் தயாராக வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட பெண் இலக்கணம், ஆண் இலக்கணம் என்கிற தளைகளிலிருந்து இருவரும் வெளிவந்து இது நம் குடும்பம், உன்னால் இயன்றதை நீ செய் என்னால் இயன்றதை நான் செய்கிறேன் என்று இருவரும் எல்லாப் பொறுப்புகளிலும் சமபங்கு ஏற்று வாழவேண்டும். குடும்பம் என்று ஒன்றிருந்தால் அங்கு உணவும் தயாரிக்க வேண்டும். வருமானத்துக்கும் வழி செய்ய வேண்டும். அது இரண்டுடன் மற்ற எல்லாமும் செய்வதில் ஆண்/பெண் பேதமில்லாமல் இருத்தல் வேண்டும். என் உரிமைகளுக்கு மட்டும் குரல் கொடுப்பேன், கடமைகள் எனக்கில்லை என்றால், அந்தக் குரல் மதிப்பிழந்துவிடும்.

நன்றி: தி இந்து (06 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories