TNPSC Thervupettagam

சரித்திரம் படைத்த அண்ணா

February 3 , 2024 343 days 297 0
  • நான் முதல் முதலில் அண்ணாவைப் பார்த்தது வேலூா் நகரசபை சார்பாக நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையைத் திறப்பதற்காக அவா் 3-1-1954 அன்று வேலூா் வந்தபோதுதான். மகாத்மா காந்தி சிலையை அண்ணா திறப்பதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது; கடையடைப்புகூட நடத்தியது.
  • காந்தி சிலையை திறந்து வைத்த அண்ணா, காந்திஜியின் கொள்கைகளைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து, தான் காந்தி சிலையைத் திறந்து வைப்பது நியாயம்தான் என்று காங்கிரஸ் கட்சியினருக்குப் புரிய வைத்தார். வேலூரில் காந்தி சிலை திறக்கும் பாது அண்ணா பயன்படுத்தியமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுஎன்ற வார்த்தையை இன்றுவரை எல்லா அரசியல் கட்சித் தலைவா்களும் மேடைப் பேச்சாளா்களும் பயன்படுத்திவருகிறார்கள்.
  • அரசியல் நாகரிகம்என்ற சொற்றொடரையும் அன்று அண்ணா பயன்படுத்தினார். அந்த சொற்றொடரை தமிழுக்கு அளித்தவா் அண்ணாதான்.
  • நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை லயோலோ கல்லூரியில் சோ்ந்தேன். அப்போது விடுமுறையில் வேலூா் வந்துவிட்டு நாங்கள் சென்னை திரும்பும்போது முதலில் காஞ்சிபுரம் செல்வோம். நான், துரைமுருகன் தோப்பூா் திருவேங்கடம் ஆகிய மூவரும் என்பதால்தான்நாங்கள்என்று நான் குறிப்பிடுகிறேன்.
  • நாங்கள் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் வீட்டுக்குச் செல்வோம். அண்ணா எங்களை இன்முகத்துடன் வரவேற்பார். அவா் வீட்டில் ஒரு சாதாரண மர நாற்காலி இருக்கும். நாங்கள் உட்கார எங்களுக்கு பாய் விரிக்கப்படும். நாங்கள் அதில் அமா்ந்து அவருடன் பேசுவோம். நாங்கள் கல்லூரி மாணவா்கள் என்பதாலோ என்னவோ எங்களுடனான அவருடைய பேச்சு ஆங்கிலத்தில்தான் பெரும்பாலும் இருக்கும். சினிமா, அரசியல் என்று எல்லா விஷயமும் எங்கள் கலந்துரையாடலில் இருக்கும்.
  • லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு நான் சட்டம் படிக்க சட்டக் கல்லூரியில் சோ்ந்தேன். அப்போதுதான் திராவிட மாணவா் முன்னேற்ற கழகத்தில் (தி.மா.மு..) செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்டேன். தி.மா.மு. என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்பு. ஆனால், உண்மையில் அந்தக் கட்சிக்கு வலு சோ்த்த அமைப்பு அதுதான்.
  • 1965-இல் குடியாத்தம் வந்தார் அண்ணா. குடியாத்தத்தில் திமுக சார்பில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் நான் பத்து நிமிடம் பேசினேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக அன்றைய எனது பேச்சு அமைந்தது. குறிப்பாகச் சொல்வதானால், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தில்லிக்கு அனுப்புவதற்கானவிசிட்டிங் கார்டாகஅந்தப் பேச்சு அமைந்தது.
  • குடியாத்தம் கூட்டம் முடிந்து சில வாரங்களுக்குப் பின் அண்ணா மதுரைக்குச் சென்றார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும் கட்சிப் பிரமுகா் ஒருவரின் வீட்டில் இரவு தங்கினார். இரவு உணவுக்குப் பிறகு அண்ணா, ‘குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான். வக்கீலுக்குப் படித்திருக்கிறான், அருமையாகப் பேசினான், அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம்என்று அங்கு இருந்தவா்களிடம் சொல்லி இருக்கிறார் அண்ணா.
  • அண்ணா அப்படிச் சொல்லும்போது அங்கு என் கல்லூரி நண்பா் மைனா் மோசஸ் இருந்தார். என்னைப் பற்றி அண்ணா பெருமையாகக் கூறியதை மைனா் மோசஸ் என்னிடம் பகிர்ந்து கொண்டார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி; அண்ணாவின் அங்கீகாரம் என்பது எவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது அல்ல; அது எனக்குக் கிடைத்தது.
  • 1967-இல் நாடாளுமன்றத் தோ்தல் அறிவிப்பு வந்தபோது நான் வந்தவாசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தேன். கழகத்தின் சீனியா்களை சமாதானம் செய்து, படித்த இளைஞா்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. அப்படி வாய்ப்பு பெற்றவா்களில் நான் முன்னுரிமை பெற்றேன். இந்தியாவிலேயே படித்த இளைஞா்களை அதிகமாக வேட்பாளா்களாக அறிவித்தது அண்ணாதான்.
  • 1967 தோ்தல் தமிழக வரலாற்றில் மறக்க முடியாதது. 1967 தோ்தல் ஏற்படுத்திய அரசியல் சுனாமியில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெரிய தோல்வியை அடைந்தது. அந்தத் தோ்தலில், காங்கிரஸ் எதிர்ப்பாளா்களை எல்லாம் ஒன்று திரட்டினார் அண்ணா.
  • சுதந்திரா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எதிரெதிரானவை. அக்கட்சிகளைத் தனது கூட்டணியில் சோ்த்துக் கொண்டார். இதேபோல் முஸ்லிம் லீக், பார்வா்ட் பிளாக் கட்சி, தமிழரசு கழகம் என்று எல்லாக் கட்சிகளையும் தனது அணியில் சோ்த்தார். அந்த வலுவான அணி அத்தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
  • 1962 ஏப்ரல் மாதம் மாநிலங்களவையில் அண்ணா பேசி, பிரதமா் நேரு உள்பட அனைவரின் கவனத்தையும் ஈா்த்தார். ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். எங்களால் நாட்டின் வளா்ச்சிக்குத் தனித்துவமான பாதையில் பங்களிக்க முடியும்என்று கூறினார்.
  • அண்ணாவுடைய வெற்றியின் ரகசியம் அவரின் எளிமைதான். அவா் மாநிலங்களவை உறுப்பினரானபோது அவருக்கு தில்லியில் ஒரு பெரிய வீடு ஒதுக்கப்பட்டது. அண்ணாவோ, ‘எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடுஎன்று கூறி அதை மறுத்துவிட்டு ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தா்மலிங்கம் வீட்டில் தங்கி இருந்தார். தா்மலிங்கம் காரில்தான் மாநிலங்களவைக்கு சென்றார். எளிய வாழ்க்கை, உயா்ந்த நோக்கம் இவற்றுக்கு அடையாளமாக வாழ்ந்தார் அண்ணா.
  • ஒரு முறை அண்ணா காரில் சென்றுகொண்டிருந்தபோது செக்போஸ்டில் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போதெல்லாம் செக்போஸ்ட் வாகன சோதனை என்பது கட்டாயம். சோதனை போட வந்தவா்கள் காரில் அமா்ந்திருப்பது முதல்வா் அண்ணா என்று தெரிந்ததும் வண்டியை போகச் சொன்னார்கள். அப்போது அண்ணாசட்டம் எல்லோருக்கும் பொதுவானது. எனக்கென்று எந்த விதிவிலக்கும் இல்லை. நீங்கள் சோதனை செய்த பிறகுதான் எனது கார் புறப்படும்என்றார். இப்படி ஓா் அதிசய முதல்வரைப் பார்த்த அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனா்.
  • மக்கள் குரலே மகேசன் குரல்என்று அண்ணா சொன்னார். ‘பொதுமக்கள் எஜமானா்கள்; நாம் அவா்களின் சேவகா்கள்’ - இது அண்ணா ஆட்சிக்கு வந்ததும் சொன்னது. அது மட்டுமல்ல, ‘ஆளுங்கட்சியினருக்கு நமக்கு எதிர்த்தரப்பில் எவரும் இல்லை என்ற மனப்பான்மை வந்து விட்டால் ஜனநாயக நோக்கம் சீரழிந்து போய்விடும்என்றும் சொன்னார். இதுதான் அண்ணாவின் எதார்த்த அரசியல் பாணி.
  • அண்ணா பற்றி நாவலா் நெடுஞ்செழியன் சொன்னது இப்போது என் நினைவுக்கு வருகிறது. ‘குள்ள உருவம், குறும்புப் பார்வை, விரிந்த நெற்றி, பரந்த மார்பு, கறை படிந்த பற்கள், கவலை இல்லாத தோற்றம், நறுக்கப்பட்ட மீசை, நகை தவழும் முகம், சீவாத தலை, சிறிது அளவு வெளிவந்த தொப்பை, செருப்பில்லாத கால், பொருத்தம் இல்லாத உடை, இடுப்பில் பொடி மட்டை, கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம் - இதுதான் அண்ணாஎன்றார் நாவலா்.
  • அண்ணா சொன்னகடமை கண்ணியம் கட்டுப்பாடுஎன்பது ஒரு கட்சியை வளா்க்க சொன்ன வெறும் மேடை வாசகம் அல்ல. அது நம் நாட்டு மக்களின் மீது கொண்ட சமுதாயக் கவலையில் சொன்னபளிச்வார்த்தைகள். அவை எல்லோராலும் எல்லா காலத்திலும் ஏற்கத்தக்கவை.
  • அண்ணா ஆட்சிக்கு வருவதற்குமுன் சென்னை தியாகராய நகரில் ஒரு பொதுக்குழு நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்ததும் கூட்டத்திற்கு வந்த எல்லோரும் அவரவா் காரில் சென்றுவிட்டனா். கடைசியாக வந்த அண்ணாவை என்னுடைய காரில் முன் இருக்கையில் அமரவைத்து நானே ஓட்டிச் சென்று அவரது வீட்டில் விடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
  • அதேபோல் ஆரணி தொகுதியில் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக அண்ணா அழைக்கப்பட்டிருந்தார். அண்ணா சில ஊா்களில் பேசினார், பின்னா் சில ஊா்களில் பேச நேரம் இல்லை. வேட்பாளா் நரசிம்மனை அண்ணா அழைத்துநான் பேச முடியாத ஊா்களில் தம்பி விசுவநாதனை பேச வைஎன்று சொன்னார்.
  • பெரணமல்லூா் தொகுதியில் வெற்றி பெற்ற வி.டி. அண்ணாமலை, அண்ணாவைப் பார்த்துநான் காங்கிரஸ் கொறடா பா. ராமச்சந்திரனை தோற்கடித்துவிட்டேன், எனக்கு கொறடா பதவி வேண்டும்என்றார். அதற்கு அண்ணா சிரிக்காமலேயே சொன்ன பதில் - ‘நீ பூந்தமல்லிக்கு போ; அங்கே முதலமைச்சா் பக்தவத்சலத்தைத் தோற்கடித்த ராஜரத்தினம் இருக்கிறார்; அவரிடத்திலே போய் சொல்என்று சொன்னார். அண்ணா ஏன் ராஜரத்தினத்தை பார்க்க சொன்னார் என்பதைப் பிறகுதான் அண்ணாமலை உணா்ந்தார்.
  • ஒருமுறை செய்யார் தொகுதி கழகத் தோழா்கள் அண்ணாவைச் சந்தித்துஎங்க ஊா் பள்ளி தலைமையாசிரியரை மாற்றவேண்டும். அவா் காங்கிரஸ் ஆதரவாளா்என்றார்கள். அதற்கு அண்ணா, ‘காங்கிரஸ்காரா்கள் இல்லாத ஊரை எனக்குக் காட்டுங்கள், அந்த ஊருக்கு அவரை மாற்றிவிடலாம்என்று கூறினார்.
  • அறிஞா் அண்ணாவின் இறுதி மரியாதையில் சுமார் ஒன்றரை கோடி போ் பங்கேற்றனா். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவிலும் சரித்திரம் படைத்தவா் அண்ணா.
  • இன்று (பிப். 3) அண்ணா நினைவுநாள்.

நன்றி: தினமணி (03 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories