TNPSC Thervupettagam

சரியானவற்றை செய்யுங்கள் முடியாதது என்று எதுவும் இல்லை! - ரத்தன் டாடா வார்த்தைகளில் அவரது வாழ்க்கை

October 14 , 2024 95 days 86 0

சரியானவற்றை செய்யுங்கள் முடியாதது என்று எதுவும் இல்லை! - ரத்தன் டாடா வார்த்தைகளில் அவரது வாழ்க்கை

  • இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கிய ரத்தன் டாடா (86) கடந்த புதன்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். தன்னுடைய சிறு வயது வாழ்க்கை, காதல், டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பு, நானோ கார், ஓய்வுகாலம் என தன்னுடைய வாழ்க்கை மற்றும் தொழில் பயணத்தைப் பற்றி பல்வேறு சமயங்களில் அவர் பேசியுள்ளார். அவரது ஆளுமையைப் புரிந்துகொள்ள அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை இங்கு தருகிறோம்.

என் பாட்டியின்றி நான் இல்லை:

  • எனக்கு 10 வயது இருக்கும்போது பெற்றோர் விவாகரத்து பெற்றுபிரிந்தனர். என் தாய் மறுமணம் செய்து கொண்டார். இதனால் பள்ளிக்கூடத்தில் படித்த சக மாணவர்கள் என்னையும் என் சகோதரரையும் கிண்டல் செய்தனர். இதனால் மனம் உடைந்து போனோம்.
  • பெற்றோர் பிரிந்ததை அடுத்து நாங்கள் பாட்டியிடம் வளர்ந்தோம். பள்ளியில் மாணவர்கள் கிண்டல் செய்வது குறித்து பாட்டியிடம் தெரிவித்தோம். என்ன விலை கொடுத்தாவது கண்ணியத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள் என பாட்டி எங்களுக்கு அறிவுரை கூறினார். அவரது அறிவுரை எனக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தது.
  • என் பாட்டியின் அரவணைப்பில் வளராமல் இருந்திருந்தால், நான் இப்போது இருப்பதில் பாதி அளவு மனிதனாகக்கூட இருந்திருக்க மாட்டேன். என்னுடைய எண்ணமும் என் தந்தையின் எண்ணமும் ஒரேமாதிரி இருந்ததில்லை. நான் அமெரி்க்காவில் உள்ள கல்லூரியில் படிக்க விரும்பினேன். அவரோ பிரிட்டன் செல்லுமாறு அறிவுறுத்தினார். கட்டிடக்கலை நிபுணராக நான் விரும்பினேன். பொறியாளராக வேண்டும் என அவர் விரும்பினார். என் பாட்டி இல்லாவிட்டால் நான் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்க மாட்டேன்.
  • நான் இயந்திரப் பொறியியல் படிப்பில் சேர்ந்தாலும்கூட, நான் விரும்பியபடி கட்டிடக்கலை துறைக்கு மாறியதற்கு என் பாட்டிதான் காரணம். இதனால் என் தந்தை அதிருப்தி அடைந்தார். ஆனால் நான் விரும்பியபடி படித்தேன். தைரியமாக பேச வேண்டும் என்றும் மென்மையாக இருக்க வேண்டும் என்றும் என் பாட்டிதான் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

கை நழுவிய காதல்:

  • கல்லூரி படிப்புக்குப் பிறகு, லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதுமிகவும் மகிழ்ச்சியான தருணம். அந்த சூழல் அழகாக இருந்தது. நான் என் வேலையை நேசித்தேன். அப்போது நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ளவும் முடிவுசெய்தேன். ஆனால், அப்போது என் பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
  • அப்போது நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த பெண்ணும் என்னுடன் வருவார் என நினைத்தேன். ஆனால், அப்போது (1962) இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றதால், அந்தப் பெண்ணின் பெற்றோர் என்னுடன் அனுப்பி வைக்க மறுத்துவிட்டனர். இதனால் அவருடனான உறவு முறிந்தது.

டாடா குழுமத்தில் என் தொடக்கம்:

  • என் தொடக்க காலத்தில் டாடா மோட்டார்ஸ் என்று அழைக்கப்படும் நிறுவனத்தில் பயிற்சியாளராக (இன்டர்ன்ஷிப்) பணிபுரிய ஜம்ஷெட்பூர் சென்றேன். டாடா குடும்ப உறுப்பினர் என்பதால் எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டேன். அந் நிறுவனத்தில் பயனுள்ள வகையில் என்னை மாற்றிக்கொள்ள 6 மாதங்கள் ஆனது. அதன் பிறகு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தேன்.
  • அங்குதான் எனக்கு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டது. என்பணி சுவாரஸ்யமாக இருந்தது. அதேநேரம் அங்கு பணி புரிபவர்களின் நிலையை புரிந்து கொண்டேன். அதன் பிறகு ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் கிடைப்பதை உறுதி செய்தோம். எங்களுக்கு சேவை செய்பவர்களுக்கு சேவை செய்வது என்பது எங்கள் டிஎன்ஏ-விலேயே ஊறி உள்ளது.

ஜேஆர்டி எனக்கு வழிகாட்டி:

  • டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து 1991-ல் ஜேஆர்டி டாடா விலகினார். என்னை தலைவராக நியமிக்க முன்மொழியப்பட்டது. அப்போது ஜேஆர்டி, தன் குடும்ப உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்குகிறார் என்றும் நான் தலைவராக செயல்பட பொருத்தமில்லாத நபர் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நான் அமைதி காத்தேன். என்னை நிரூபித்துக் கொள்வதில் நான் கவனம் செலுத்தினேன். என்னை தலைவராக நியமித்த பிறகு, ஜேஆர்டி என்னை அவருடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.
  • தன்னுடைய அறையை காலி செய்யப்போவதாக அவர் கூறினார். நான் சொன்னேன், “ஜேர்ஆர்டி. நீங்கள் எங்கும் செல்லக்கூடாது. இது உங்கள் அலுவலகம்” என்றேன். என்னிடம் கேட்டார், “அப்படியென்றால் நீஎங்கு அமர்வாய்?” “நான் இப்போது எங்கே இருக்கிறேனோ அங்கேயே இருந்து கொள்வேன்” என்றேன். அவர்எனக்கு மிகப்பெரும் வழிகாட்டியாக இருந்தார். எனக்கு தந்தை போலவும் சகோதரன் போலவும் அவர் இருந்தார்.

முடியாதது என்று எதுவும் இல்லை:

  • இந்தியாவில் சொந்தமாகக் காரைத் தயாரிக்க வேண்டும்என்று நான் விரும்பினேன். ஆனால், என்னுடைய உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் இதுசாத்தியமில்லை என்றே சொன்னார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியில்லாமல் கார் தயாரிப்பு இந்தியாவில் சாத்தியமில்லை என்றனர்.
  • நான் உறுதியாக இருந்தேன். ‘இண்டிகோ’ காரை இந்தியாவிலேயே உருவாக்கினோம். இண்டிகோ இந்திய சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்தது. பலரால் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதை சாத்தியப்படுத்திக் காட்டினோம்.

‘நானோ' பெருமிதம் கொள்கிறேன்:

  • ஒரு நாள் மும்பையில் கடும் மழை. அப்போது 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரே பைக்கில் செல்வதைப் பார்த்தேன். அது போன்ற குடும்பத்தினருக்கு ஏற்ற குறைந்த விலை காரை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டதுதான் நானோ.
  • அந்த சமயத்தில் அதற்கான செலவு எங்களுக்கு அதிகம். ஆனால், நான் அதை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தேன்.அதை நிறைவேற்றவும் செய்தேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் என்னுடைய முடிவுக்காக பெருமை கொள்கிறேன்.

ஓய்வுக்குப் பிறகு:

  • உண்மையிலேயே நான் ஓய்வு பெற்றுவிட்டேனா என்று பலரும் கேட்கின்றனர். ஆமாம், நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால், ஓய்வு என்பது கோல்ப் விளையாடுவதோ, கடற்கரையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதோ, மது அருந்தி பொழுதைக் கழிப்பதோ அல்ல. சொல்லப் போனால், ஓய்வுபெற்ற பிறகு எனக்கு நிறைய மேம்பட்ட விஷயங்களை செய்யத் தோன்றுகிறது.
  • குறைந்த விலையில் புற்றுநோய்க்கான சிகிச்சை வழங்குதல், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றை டாடா அறக்கட்டளை மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன். ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கை முறை மாறிவிட்டது. சிறியவயதினர் முதல் பெரியவர்கள் வரையில் என் நட்பு வட்டத்தில் உள்ளனர். அவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்கிறேன்.

சரியானவற்றை செய்யுங்கள்:

  • எனக்கு இப்போது 82 வயதாகிறது. இன்னமும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னிடம் நீங்கள் ஏதேனும் அறிவுரை கேட்டால், “சரியானவற்றை செய்யுங்கள்” என்பதே என்னுடைய அறிவுரையாக இருக்கும். வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும்போது நாம் சரியான விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதுதான் அனைத்திலும் முக்கியமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories