TNPSC Thervupettagam

சரியும் கருவுறுதல் விகிதம்

January 29 , 2025 2 days 108 0

சரியும் கருவுறுதல் விகிதம்

  • உலக நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்துவருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக்​கொள்ள முடிகிற குழந்தை​களின் சராசரி எண்ணிக்கையே கருவுறுதல் விகிதம்.
  • உலகளாவிய நோய்ச் சுமை அமைப்பு (Global Burden of Disease) 2021இல் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 1950இல் 6.18ஆக இருந்த கருவுறுதல் விகிதம் 2021இல் 1.9ஆகக் குறைந்​த​தாக​வும், 2100இல் 1.04ஆகக் குறையலாம் என்றும் கூறப்​பட்​டுள்ளது. கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறையும்​பட்​சத்தில் எதிர்​காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்​கிறது.

காரணங்கள்:

  • இந்தியாவைப் பொறுத்​தவரை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் திட்டங்கள் கருவுறுதல் விகிதம் குறைவதற்குக் காரணமாக இருந்​தா​லும், கடந்த பத்து ஆண்டு​களில் கல்வியறிவு, தொழிலாளர் பங்களிப்பில் பெண்கள் அடைந்​துள்ள முன்னேற்றமே கருவுறுதல் விகிதம் குறைய முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  • திருமணம், குழந்தை பெற்றுக்​கொள்வது போன்றவை குறித்த சமூகப் பார்வை மாறியிருக்​கிறது; குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் திருமணம், தாய்மை அடைதலைக் காட்டிலும் பொருளா​தாரத் தன்னிறைவு அடைவதற்கு முன்னுரிமை அளிக்​கின்​றனர்.
  • அதிகரிக்கும் பணவீக்கம், பொருளா​தாரச் சுமை காரணமாகக் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது குழந்​தையைப் பராமரிப்பது பெரும் சவாலானதாக இருக்​கிறது. இச்சிக்​கலைச் சமாளிக்கக் குழந்தை பெற்றுக்​கொள்​வதைத் தள்ளிப்​போடுவது அல்லது ஒரு குழந்தை போதும் என்கிற மனநிலைக்குப் பலரும் வந்து​விடு​கின்​றனர்.
  • அடுத்​ததாக, உயர்படிப்பு, பணிக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் அங்கு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் செலுத்து​கின்றனர். ஆக, இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைய இடப்பெயர்வும் முக்கியக் காரணமாக உள்ளது. உணவு, வாழ்க்கை முறை மாற்றத்​தினால் திருமணமான ஆண், பெண்களிடத்தில் நிலவும் உடல்நலப் பிரச்​சினை​களாலும் குழந்​தை​யின்மை விகிதம் அதிகரித்​துள்ளதாக மருத்​துவர்கள் தெரிவிக்​கின்றனர்

இந்தியாவின் நிலை என்ன?

  • இந்தியாவில் கருவுறுதல் விகிதம் படிப்​படி​யாகக் குறைந்​து​வரு​கிறது. 2015 - 2016இல் நடத்தப்பட்ட தேசியக் குடும்பநல ஆய்வு 4இன்படி, கருவுறுதல் விகிதம் 2.2 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2019 - 2021இல் 2.0 ஆகக் குறைந்தது. ஒரு மாநிலத்தின் மக்கள்​தொகையைச் சீராகப் பராமரிக்க இறப்பு எண்ணிக்கைக்கு ஏற்பப் புதிய பிறப்பு​களும் தேவை. இதையே பதிலீடு கருவுறுதல் விகிதம் (replacement-level fertility) என அழைக்​கிறோம். அதன்படி, பிஹார் (3.0), மேகாலயம் (2.9), உத்தரப் பிரதேசம் (2.3), ஜார்க்​கண்ட் (2.2), மணிப்பூர் (2.1) ஆகிய மாநிலங்​களில் பதிலீடு கருவுறுதல் விகிதம் எதிர்​பார்த்​ததைவிட அதிகமாகவே உள்ளது.
  • தென்னிந்திய மாநிலங்கள் இவ்விஷ​யத்தில் சரிவைச் சந்தித்​துள்ளன. பதிலீடு கருவுறுதல் விகிதத்தில் தென்னிந்திய மாநிலங்கள் கடந்த காலங்​களில் சிறப்​பாகவே செயல்​பட்​டிருக்​கின்றன. குறிப்பாக, கேரளம் 1980களி​லும், தமிழ்நாடு 1993ஆம் ஆண்டிலும், பிற தென்னிந்திய மாநிலங்கள் 2000ஆம் ஆண்டிலும் பதிலீடு கருவுறுதல் விகிதத்தில் நிர்ண​யித்த இலக்கை அடைந்தன.
  • ஆனால், கடந்த 10 ஆண்டு​களில் கருவுறுதல் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்​டுள்ளது. கேரளம், தமிழ்​நாடு, தெலங்​கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்​களில் கருவுறுதல் விகிதம் 1.6க்குக் கீழ் சென்றுள்ளது. தமிழகத்தில் கருவுறுதல் விகிதம் 1.4ஆக உள்ளது.
  • இதன்பொருட்டே குழந்தை​களைக் கூடுதலாகப் பெற்றுக்​கொள்​வதற்கு ஆந்திர அரசு வலியுறுத்தி வருகின்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இரண்டு குழந்தை​களுக்கு மேல் உள்ளவர்களே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், இதன் மூலம் மக்கள்தொகை குறைவது தடுக்​கப்​படும் என்றும் அறிவித்தது கவனிக்​கத்​தக்கது.

தாக்கங்கள்:

  • ஒரு நாட்டின் கருவுறுதல் விகிதம் குறைவது சமூகம் - அரசியல் - பொருளா​தாரம் எனப் பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்​தும். குறைந்​து​வரும் கருவுறுதல் விகிதம் தென்னிந்தியாவில் மக்கள்தொகை குறைய வழிவகுத்​திருக்​கிறது; இளைஞர்​களின் எண்ணிக்கை குறைந்து முதிய​வர்​களின் எண்ணிக்கை அதிகரிப்​ப​தனால் அதற்கேற்ற சுகாதாரம், சமூக அமைப்புகளை வலுப்​படுத்த வேண்டிய தேவை அம்மாநிலங்​களுக்கு அதிகரித்து​வரு​கிறது.
  • அது மட்டுமல்​லாது, நாடாளு​மன்றத் தொகுதி மறுசீரமைப்பில் மக்கள்தொகை அடிப்​படையில் உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறலாம். மறுபுறம், குறைந்த மக்கள்​தொகையைக் கொண்ட தமிழ்​நாடு, ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்கள் நாடாளு​மன்​றத்தில் தங்களுக்கான இடங்களை இழக்க நேரிடலாம் என்கிற அச்சம் நிலவு​கிறது.
  • மேலும், மக்கள்தொகை அடிப்​படையில் நிதி ஒதுக்​கப்​படும்போது தென்னிந்திய மாநிலங்கள் நிதிப் பற்றாக்​குறையை எதிர்​கொள்​ளலாம். மாநில நலனுக்கான கொள்கைகளை வகுக்​கும்​போது, இம்மாநிலங்கள் சுதந்​திர​மாகச் செயல்பட முடியாத நிலை உருவாகும்.

அதிகரிக்க முடியுமா?

  • கருவுறுதல் விகிதச் சரிவு பெரும்​பாலும் மீள முடியாத​தாகவே இருந்​திருக்​கிறது. எனினும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், குறைந்த கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கும் என்பதற்குத் தென் கொரியா தற்போது உதாரண​மாகி​யுள்ளது. 2022இல் தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் 0.78ஆக இருந்த நிலையில் 2023இல், 0.72 ஆகக் குறைந்தது.
  • இதைத் தொடர்ந்து கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க அவசரகால நடவடிக்கை​களில் தென் கொரிய அரசு ஈடுபட்டது; மக்களுக்குப் பல்வேறு நிதிச் சலுகைகளையும் அறிவித்தது. இதன் பலனாக 2023ஐ ஒப்பிடு​கையில் குழந்தை பிறப்பு விகிதம் 2024இல் 3% அளவு அதிகரித்​துள்ளதாக அந்நாடு தெரிவித்​துள்ளது.
  • இதைக் கவனத்தில் கொண்டு கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை​களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். அதேநேரத்​தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இளைஞர்​களுக்கான வேலைவாய்ப்​பையும் அதிகரிக்க வேண்டும். 2050க்குள் இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை 20%ஆக அதிகரிக்கும் என ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA - United Nations Population Fund) தெரிவித்​துள்ளது. அதற்கு ஏற்ப சுகாதாரம், பராமரிப்பு, நிறைவான வாழ்க்கைக்கான சமூக - பொருளா​தாரக் கொள்கைகளை வகுப்​பதில் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories