- குறையும் நுகர்வு, பின்வாங்கும் முதலீடு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை என்று மந்த நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது இந்தியப் பொருளாதாரம். கடந்த ஜூன் மாதத்தில் 2019-2020ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என்று கணித்த ரிசர்வ் வங்கி, தற்போது 6.9% ஆகக் குறையும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், பொருளாதார ஆய்வு நிறுவனங்களின் கணிப்புகளோ வளர்ச்சி விகிதம் 6.2%ஐத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றன.
- பொருளாதாரம் தேக்கநிலையை நோக்கிச் செல்கிறது என்பதன் முதல் அறிகுறி, வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் ஏற்படும் சரிவு. இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பதில் முதன்மை நிறுவனமாக விளங்குவது ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட். அந்நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் எப்போதும் இரட்டை இலக்கமாகவே இருக்கும். 2018-ல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 11%. தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் அது வெறும் 7% மட்டுமே.
- வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் ஐடிசி, கோத்ரெஜ் போன்ற மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமும் ஒற்றை இலக்கத்தில் தேக்கத்தை அடைந்திருக்கிறது. உபயோகப் பொருட்களின் விற்பனை என்பது உற்பத்தியில் மட்டும் சரிவை ஏற்படுத்துவதில்லை, அந்த உற்பத்திப் பொருளுக்குத் தேவையான கச்சாப் பொருளை வழங்கும் கிராமியப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
முடங்கிய வாகன உற்பத்தி
- கிராமப்புறங்களில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் கார் விற்பனை குறைந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தால் 5 லட்சம் பயணியர் வாகனங்களும் 30 லட்சம் இரு சக்கர வாகனங்களும் விற்பனையாகாமல் முடங்கியுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் வாகன உற்பத்தித் துறை சந்தித்துள்ள மிகப் பெரிய தேக்க நிலை இது. கட்டுமானத் துறையிலும் பொருளாதாரத் தேக்க நிலை எதிரொலிக்கிறது. சிமென்ட் உற்பத்தி குறைந்துவிட்டது. கட்டுமானங்களுக்குத் தேவையான இரும்புக் கம்பிகளின் விற்பனையும் குறைந்துவிட்டது.
- வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அணிகலன்கள், பொறியியல் கருவிகள், உணவு தானியங்கள், பருத்தி என அனைத்தின் அளவு குறைந்துவிட்டன. மொத்தத்தில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி 10% அளவுக்குக் குறைந்துவிட்டது. உலகளவில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையும், அமெரிக்க - சீன நாடுகளுக்கு இடையே நடந்துவரும் வாணிபப் போரும் இந்தியாவின் ஏற்றுமதியில் மேலும் சரிவை ஏற்படுத்திவருகின்றன. தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவால், தொழில் துறை நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு வேலையளிக்க முடியாத நிலையில், அவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன.
திண்டாடும் சேவைத் துறை
- தொழில் துறையில் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரத்தில் 50%க்கும் அதிகமாகப் பங்களிக்கும் சேவைத் துறைக்கும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. கப்பல் போக்குவரத்துத் துறைக்கு அளிக்கப்படும் கடன் வசதிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இத்துறைக்கு அளிக்கப்பட்ட வங்கிக் கடன் மதிப்பு ரூ.9,900 கோடி. ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, 2018-19ம் நிதியாண்டில் ரூ.7,700 கோடி மட்டுமே வங்கிக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறைக்கு ஆறாண்டுகளுக்கு முன்னால் அளிக்கப்பட்ட ஆண்டுக் கடன் ரூ.1,38,000 கோடி என்றால், கடந்த நிதியாண்டில் அளிக்கப்பட்ட கடன் ரூ.90,400 கோடி மட்டுமே.
- சுற்றுலா, கணினி சேவைகள் என அனைத்துத் துறைகளுக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்துவந்த வங்கிக்கடன் உதவிகள் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறைக்குக் கடனுதவி அளிப்பதிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்கிவிட்டன. 2017-18ம் நிதியாண்டில் 8.1% ஆக இருந்த சேவைத் துறையின் வளர்ச்சி விகிதம் 2018-19ம் நிதியாண்டில் 7.5% ஆகக் குறைந்துவிட்டது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாய் உறுதிமொழி அளிக்கின்ற மத்திய அரசு, அரசுத் துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களைக்கூட நிரப்புவதற்கு முயற்சி எடுக்கவில்லை.
- 2014-ம் ஆண்டின் கணக்குப்படி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 7.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருந்தன. மத்திய அரசு பொறுப்பேற்று நடத்தும் பொதுத் துறை நிறுவனங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2.2 லட்சம். இந்தியாவைப் பொறுத்தவரை அரசு வேலைவாய்ப்பில் மத்திய அரசின் பங்கு 14% எனக் கொண்டால், மாநில அரசுகளில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மட்டுமே 38.8 லட்சம் என்று மதிப்பிடுகிறார்கள் பொருளியலாளர்களான சி.பி.சந்திரசேகரும் ஜெயதி கோஷும்.
2015-ம் ஆண்டு கணக்குப்படி பிரேசில் நாட்டில் 1,000 பேர்களில் 111 பேர் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். சீனாவில் இது 57, இந்தியாவைப் பொறுத்தவரை வெறும் 16 மட்டும்தான். அரசின் அத்தியாவசியப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளையும்கூடத் திட்டமிட்டுக் குறைத்துவருகின்றன மத்திய - மாநில அரசுகள்.
வேலைவாய்ப்பே நிரந்தரத் தீர்வு!
- வேலைவாய்ப்பு குறைகிறது. எனவே, பணப்புழக்கம் திருப்திகரமாக இல்லை. அதனால், சந்தையில் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை சரிந்துவருகிறது. நுகர்வு, உற்பத்தி, பகிர்வு என்ற ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பொருளாதாரத்தின் சங்கிலி அறுந்துநிற்கிறது. ரிசர்வ் வங்கி, பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயலலாம். அது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே. நிரந்தரத் தீர்வு, இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்வதிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலுமே இருக்கிறது.
- பெருமுதலீடுகளை ஈர்த்துவிடுவதால் மட்டும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்துவிட முடியாது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை ஆதரிக்க வேண்டும். இந்தியாவில் தற்போது நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு சிறு தொழில் துறை வளர முடியாத நிலைமையே காரணம் என்று தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை மீண்டெழச் செய்ய முடியும். அதற்குத் துறைவாரியாகத் திட்டமிட்டு, பணிவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சுணக்கமும் உரிய காலத்தில் போதுமான பருவமழை பெய்யாததும் தற்போதைய பொருளாதாரச் சரிவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதன் மூலமாக, கிராமப்புறங்களின் வாங்கும் சக்தியை நிச்சயமாக உயர்த்த முடியும்.
- உலகப் பொருளாதார நிலை என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, சிறு தொழில் துறைக்குக் கடன் கிடைப்பதை எளிமையாக்குவது, சரக்கு சேவை வரி நிலுவைகளை உடனடியாகத் திருப்பியளிப்பது ஆகியவற்றால் தேக்கமடைந்திருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர முடியும். இந்திய பொருளாதாரத்தின் திசைவழியைத் தீர்மானிப்பவர்களோ அதற்கு எதிர்த் திசையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை(12-09-2019)