TNPSC Thervupettagam

சர்வதேசிய ஜனநாயகமும் இந்திய ஜனநாயகமும்

January 26 , 2024 214 days 262 0
  • ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட குடியரசு நாடாகி எழுபத்தைந்தாம் ஆண்டைத் தொட்டுவிட்டது இந்தியா. இவ்வளவு காலமும் ஜனநாயகம் என்பதற்குத் தொடக்கத்தில் செய்த வரையறையை அப்படியே வைத்திருக்கிறோம். ஆனால், சர்வதேசியச் சூழல் அப்படி இல்லை. பல நாடுகள்ஜனநாயகம்என்னும் சொல் உணர்த்தும் பொருளை மறுவரையறை செய்துவிட்டன.
  • காலந்தோறும் ஜனநாயகம் என்பது ஒரேமாதிரியாக இருக்க முடியாதுஎன்பதான குரல்கள் அந்தந்த நாடுகளினுடைய சமூகத்தின் அமைப்பையும் உருமாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒலிக்கத் தொடங்கியதால் அத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
  • இந்தியாவைப் பொறுத்தவரைஜனநாயகம்என்பதன் பொருளையோ அதன் இயல்பையோ மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை. அதற்கான காரணத்தை விளங்கிக்கொள்ள இந்திய ஜனநாயகத்தைச் சர்வதேசிய ஜனநாயகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும்.

சர்வதேசிய ஜனநாயகம்

  • ஜனநாயகம்என்பதை ஒரு நிலத்துக்கோ, ஓர் இனத்துக்கோ உரிமையான சிந்தனை வடிவம் என்று முடிவுசெய்ய முடியாது. அது ஒரே நேரத்தில், உலகின் பல பகுதிகளில் சிறுசிறு வேறுபாடுகளுடன் வழக்கத்தில் இருந்துவந்த வாழ்க்கை முறையாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அது சர்வதேசியச் சிந்தனாவாதிகளால் தனித்ததொரு சிந்தனைப் பள்ளியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னும் பின்னும் சர்வதேசிய ஜனநாயகத்தில் ஏராளமான வரையறைகள் வழங்கப்பட்டன. உதாரணமாக, மேற்குலகில் பிளாட்டோ முதற்கொண்டு பலர் ஜனநாயகத்துக்கு வரையறை வழங்கியிருப்பதைச் சொல்லலாம்.
  • அவையெல்லாம் அன்றைய தேவை, சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடைமுறைப் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் சொல்லப்பட்டவை. பிற்காலத்தில் அந்த வரையறைகளின் போதாமையை உணர்ந்த மேற்குலகின் பல நாடுகள் ஜனநாயகத்துக்கான வரையறையை 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தன.
  • அதன் விளைவாக, உடல் உழைப்பாளிகள், நிலமற்றவர்கள், பெண்கள் ஆகியோருக்கு வாக்குரிமை கிடைத்தது. இந்த நிலைப்பாட்டுக்கு வர்க்கப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவான சிந்தனை மாற்றமும் ஒரு காரணமாக அமைந்தது. அதாவது, பிரச்சினையின் அடிப்படை மாறும்போது அப்பிரச்சினையைச் சரிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் வரையறையையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், வேறு வழியின்றி பல நாடுகள் மாற்றிக்கொண்டன. இதுபோன்ற பின்னணி இந்திய ஜனநாயகத்துக்கு இருந்ததில்லை.
  • இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், காலத்துக்கேற்றவாறு ஜனநாயகத்துக்கான வரையறையை மாற்றிக்கொண்ட நாடுகளையும் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான ஜனநாயகத்தின் வகைப்பாட்டு அறிக்கை (Varieties of Democracy Report), ‘உலகில் பாதிக்கும் குறைவானவர்களே ஜனநாயகத்தில் வாழ்கிறார்கள்என்ற கசப்பான தகவலைத் தருகிறது.

ஜனநாயகத்தின் வகைகள்

  • சர்வதேச அளவில் பிராந்தியங்களின் அரசியல் தேவைகளையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கி 20-க்கும் மேற்பட்ட வகைகளில் ஜனநாயகம் பகுக்கப்பட்டுள்ளது. குறுங்குழுக்களின் ஜனநாயகங்கள் பல இணைந்து பொது ஜனநாயகமாகவும், பல பொது ஜனநாயகங்கள் இணைந்து சர்வதேசிய ஜனநாயகமாகவும் முன்வைக்கப்படுகின்றன. மேலும், ஜனநாயகத்தை இரண்டாம் உலகப் போருக்கு முன், பின் எனப் பகுத்துக்கொள்வதும்கூட ஜனநாயகத்தை வகைப்படுத்த வேண்டியதன் தேவையைப் புரிந்துகொள்ள உதவும்.
  • ஜனநாயகத்தின் ஒவ்வொரு வகையும் ஓரிடத்தில் முரண்பட்டாலும் இன்னொரு இடத்தில் இணைந்துகொள்ளும் இயல்புடையவையாக இருக்கின்றன. அதுவே ஜனநாயகத்தின் பண்பு. இதைத்தான் அமெரிக்கப் பத்திரிகையாளரான எட்வின் லாரன்ஸ் காட்கின் தன்னுடையநவீன ஜனநாயகத்தின் பிரச்சினைகள்’ (Problems of Modern Democracy) நூலில் மிகவும் நுட்பமாக விவரிக்கிறார். அந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இருந்து, பொ.. (கி.பி.) 1896ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதால், ஜனநாயகத்தின் ஐம்பதாண்டு காலப் பிரச்சினைகளை அவர் அலசியிருப்பார்.
  • ஜனநாயகத்தின் பொருண்மையை விவரிக்கும் ஓரிடத்தில்ஜனநாயகத்தில் என்ன இயல்பு வலியுறுத்தப்படுகிறதோ அதுதான் ஜனநாயகம் என்ற சொல்லின் இயல்பும்என்பார் அவர். அதாவது, ஜனநாயகம் என்பது நிரந்தரமான வரையறைக்கு உட்பட்டதல்ல. அது காலத்துக்கேற்ற வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டியதாகும் என்பது காட்கினின் புரிதல்.
  • அவர் காலத்தில் மேற்குலகின் பல சிந்தனையாளர்களின் கருத்துகளும் அப்படித்தான் அமைந்திருந்தன. இதைத்தான்நவீன ஜனநாயகம்என்று காட்கின் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டார்கள். இந்தப் புரிதலோடு இந்திய ஜனநாயகத்தை நாம் அணுக முடியாது. காரணம், இந்திய ஜனநாயகத்தைச் சாதியோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சர்வதேசிய ஜனநாயகத்துக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

இந்திய ஜனநாயகம்

  • சர்வதேசிய ஜனநாயகத்தைப் போலவே இந்திய ஜனநாயகமும் பழைமையானது. ஆனால் வேறுபட்டது. கிரேக்கக் காவியங்களில் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மேன்மையான ஜனநாயக வலியுறுத்தலைப் புத்தரின் போதனைகளில் பார்க்கலாம். இனக் குழுவினரிடம் வேட்டையில் கிடைத்த மாமிசத்தைக்கூறுபோட்டுசம அளவில் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் மக்கள் பங்கிட்டு உண்ட முறைக்குச் சான்றுகள் உண்டு. அத்தகைய ஜனநாயகம் பிற்காலத்தில் பெருமளவு குறைந்து வந்திருப்பதைக் காண முடிகிறது.
  • பொ.. (கி.பி.) நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு சாதி அமைப்பில் ஏற்பட்ட இறுக்கத்துக்கும் இலக்கியத்தில் ஜனநாயகத்தை முன்மொழிந்த பதிவுகள் மெல்லமெல்ல குறைந்து வந்தமைக்கும், ஈகை குறித்து வலியுறுத்தப்பட்ட அறச் சிந்தனைகள் அதிகரித்தமைக்கும் தொடர்பு உண்டு. அது சமூகத்தில் ஜனநாயகத்தன்மை குறைந்து வந்தமையின் அடையாளம். அதன் எச்சத்தைக் காலனிய காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள்வரை பார்க்க முடியும். இப்படிப் பல நூற்றாண்டுகளாகச் சாதியமைப்பால் ஜனநாயகத்துக்கு நேரிட்டுவந்த பிரச்சினையைத் தொலைநோக்குப் பார்வையோடு அரசியல் தளத்தில் நின்று அம்பேத்கர் சரிசெய்தார்.
  • நாட்டு விடுதலைக்குப் பிறகு அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டத்தின்வழி வரையறுக்கப்பட்ட ஜனநாயகம், ஒரு மனிதன் - ஒரு வாக்கு - ஒரு மதிப்பு என்பதை நீடித்த கொள்கையாக முன்வைத்தது. சாதி, பாலின அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் சம மதிப்புள்ள வாக்குரிமையை ஒரே நேரத்தில் கொடுத்த அந்தச் செயல்தான், இன்றைய ஜனநாயகத்தின் ஆணிவேராக அமைந்திருக்கிறது.
  • வாக்கு அரசியலின் வழி கிடைக்கும்அதிகாரம்பெரும்பான்மையினரால் உருவாக்கப்படுவதும் புதுக்கலப்புத்தன்மையை நோக்கி அந்தப் பெரும்பான்மை நகராமல் தனக்குள்ளாகவே இறுக்கமடைந்திருப்பதும் ஜனநாயகத்தின் பலனை எட்டுவதற்குத் தடையாக இருப்பது உண்மை.
  • என்றாலும், ஜனநாயகத்தின் பேரில் சட்டம் வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமைகளையும் வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்குப் பிரச்சினையாக உருவாகும் கருத்தியலை ஜனநாயகத்தின் வழியாகவே எதிர்கொள்வதற்கான வாய்ப்பையும் திறப்பையும் கொண்டிருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெருமைக்குரிய தனித்துவம்.

அரசியல் நுட்பப் பார்வை

  • மேற்கு ஐரோப்பாவில் ஜனநாயகம் தோல்வி அடைந்தது பற்றி விவரிக்கும் அம்பேத்கர், சமூக-பொருளாதார ஜனநாயகம் இல்லை என்றால், அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது என்பதை ஜனநாயகத் தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுவிட்டு, அதைஜனநாயக ஆதரவாளர்களுக்கான எச்சரிக்கைஎன்கிறார் (‘அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்’, தொகுதி 17, பக்கம் 94). நாட்டில்ஒருசாரார் ஆதிக்கம்தொடருமானால், அது ஜனநாயகத்துக்கும் தன்னாட்சிக்கும் முரணாகும் எனச் சொல்லும் அம்பேத்கர், ஜனநாயகம் வெற்றிபெறுவதற்கு எளியோர் வலிமை பெற வேண்டியது அவசியமில்லை; வலியோர் எளியோரின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் சுட்டுவார். இந்திய ஜனநாயகத்தின் வரையறைக்குள் பொதிந்திருக்கும் இந்த அம்சம் அரசியல் நுட்பம் வாய்ந்ததாகும்.
  • ஆக, சர்வதேசிய ஜனநாயகத்தைவிட இந்திய ஜனநாயகம் பல வகைகளில் மேன்மையுடையது என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில், கடந்த காலங்களில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டமைக்கான நோக்கத்தை நோக்கிச் சரியாகவும் முழுமையாகவும் நகர்ந்திருக்கிறோமா என்கிற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். அது எதிர்கால ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.

ஜனவரி 26: இந்தியாவின் 75ஆவது குடியரசு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories