TNPSC Thervupettagam

சர்வாதிகாரத்துக்கான சட்டங்கள்

August 7 , 2023 394 days 292 0
  • ‘சர்வாதிகாரம்’ என்பது ‘அரசாங்கம்’ என்ற ஜனநாயக அமைப்புக்கு நேர் எதிரான நிர்வாகம் என்கிறது சட்டம். சர்வாதிகாரத்தில், ‘சட்டப்படியான ஆட்சி’ என்ற தன்மை சுருங்கிவிடுகிறது, பன்மைத்துவம் நிராகரிக்கப்படுகிறது, அதிகாரம் மையப்படுத்தப்படுகிறது, பெரும்பான்மையின் முடிவு திணிக்கப்படுகிறது – சில வேளைகளில் ஒரே ஒருவரின் தீர்மானமே இறுதி முடிவாகிறது.
  • சர்வாதிகாரம் என்பது சர்வாதிகாரி சொல்வதற்கெல்லாம் ஒப்புதல் தரும் ரப்பர்-ஸ்டாம்புகளைப் போன்ற ஒப்புதல் மன்றங்களாக நாடாளுமன்றங்கள் மாறுவதால் ஏற்படுகிறது; அத்தகைய நாடாளுமன்றத்தில் அனைத்து இடங்களும் ஆளும் கட்சியால் நிரம்பிவிடுகிறது. அத்தகைய நாடாளுமன்றங்கள்கூட சட்டங்களை இயற்றுகின்றன என்பதும் வினோதம்!  
  • துரதிருஷ்டவசமாக, ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றங்கள்கூட, சர்வாதிகாரிகளுடைய நாடாளுமன்றங்களைப் போலச் செயல்படத் தொடங்கி விட்டன. அந்தச் சட்டங்கள் சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கவைதானா என்ற சோதனைகளில் தப்புமா என்பது நிச்சயம் இல்லாவிட்டாலும், அவற்றால் இயற்றப்படுகின்றன.
  • என்னுடைய கோணப்படி அவை எதுவுமே சட்டப்படியாக செல்லுபடியாகக்கூடியவை அல்ல. அப்படியான சமீபத்திய உதாரணம்தான் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட, திருத்த மசோதா; நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தையே கட்டுப்படுத்துகிறது அந்தச் சட்டத் திருத்த மசோதா.  

எது அரசமைப்புச் சட்டப்படியானது?

  • இந்த விஷயத்தில் இந்தியாவும் பின்தங்கியிருக்கவில்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ‘நெருக்கடிநிலை’ நிலவுவதாக அறிவித்து அரசமைப்புச் சட்டம் அளித்த உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்த திருத்த சட்டங்கள் குறித்து (1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை) பலரும் கேள்விகளை எழுப்பக்கூடும் என்பதால், அவை சட்டப்படி செல்லத்தக்கவையும் அல்ல, நியாயப்படி ஏற்கத்தக்கவையும் அல்ல என்பதை முதலிலேயே ஒப்புக் கொண்டு விடுகிறேன்.
  • திரும்பத் திரும்ப நெருக்கடிநிலை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் காலம் கடந்துவிட்டது. சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட, சட்டப்படி ஏற்க முடியாத, தார்மிக நியாயமற்ற சட்டங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
  • அரசியல் சட்டத்தில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளவற்றுக்கு முரணாக இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வார்த்தைக்கு மிகவும் குறுகிய பொருளைத்தான் இன்றைய அரசு எடுத்துக்கொள்கிறது. வெளிப்படையான பொருள்களைத் தவிர குறிப்பாகச் சுட்டப்படுகிற – உள்கிடக்கையான – எல்லைகளும் உண்டு; அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நீதிநெறி, அரசமைப்புச் சட்டத்தின் வடிவமைப்பு ஆகியவற்றையும் மீறாமல் சட்டம் இயற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை இங்கே கவனத்தில் கொள்ளப்படவில்லை.
  • இவை போக, இன்னொரு எல்லையையும் சுகிருத் பார்த்தசாரதி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். “இந்திய அரசமைப்புச் சட்டமானது தார்மிக விழுமியங்களால் பூத்துக் குலுங்குவது; ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான உறவு வெவ்வேறு விதமான நுட்பமான நுணுக்கங்களால் பின்னிப் பிணையப்பட்டிருக்கிறது. அது சட்டப்பூர்வமாக இணைப்பது மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலான இணைப்புக் கண்ணிகளுமாகும்” என்கிறார் அவர்.
  • நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட மூன்று சட்ட மசோதாக்கள் இந்த அரசமைப்புச் சட்ட வரம்புகளை மீறுவதாக இருக்கின்றன.

வனங்கள் (காப்பு) திருத்த மசோதா

  • இந்தியாவில் 2001 முதல் 2021 வரையில் காடுகளின் மொத்தப் பரப்பளவு 6,75,538 சதுர கிலோ மீட்டரிலிருந்து 7,13,789 சதுர கிலோ மீட்டர்களாக உயர்ந்திருக்கிறது. பெரும்பாலான நிலப்பகுதியில் மரங்களின் அடர்த்தி 10%-40%ஆக இருக்கின்றன. (40%க்கும் மேல் அடர்த்தியுள்ள காடுகளின் அளவு இதே காலத்தில் 37,251 கிலோ மீட்டராகக் குறைந்தும்விட்டன). நாற்பதாண்டுகளாகக் கிடைத்த நல்ல பயன்களை வீணாக்கும் வகையில், புதிய திருத்த மசோதா பிற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
  • வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து இரு வகை நிலங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம் அதைச் செய்திருக்கிறது. வனமாக பதிவுசெய்யப்பட்டு, ஆனால் 1980 அக்டோபர் 25க்கு முன்னால் முறைப்படியாக அறிவிக்கப்படாத நிலப்பகுதிகளுக்கும், 1996 டிசம்பர் 12க்கும் முன்னால் வனமல்லாத பிற பயன்பாட்டுக்குத் திருப்பிவிடப்பட்ட நிலங்களுக்கும் இந்த வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா விலக்கு அளிக்கிறது.
  • அறிவிக்கப்படாத – ஆனால் இயற்கையாகவே வளர்ந்த வன நிலங்கள் விலக்கு பெற்றுள்ளன. இவை வனங்களுக்கு இணையாகவே கருதப்பட்டன. 2006இல் டி.என்.கோதவர்மன் வழக்கில் வன உரிமைகள் சட்டப்படியும், நியமகிரி குன்றுகள் வழக்கில் பிறகும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முரணாக இந்த விலக்குகள் இருக்கின்றன. சர்வதேச எல்லைக்கு அருகில் 100 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் வனங்களில் தேசிய பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு வன நிலங்களைப் பயன்படுத்த விலக்கு அளிக்கிறது திருத்த மசோதா.
  • வட கிழக்கு எல்லைப்புற மாநிலங்கள், இமயமலைப் பகுதி அனைத்துமே இந்த விலக்கு வரம்புக்குள் வந்துவிடுகிறது. இந்தப் பகுதிகளில்தான் வனவளம் அதிகம், அத்துடன் பல்லுயிர்ப் பெருக்கமும் அதிகம். ராணுவத் தேவைக்காகவும் நாட்டின் பாதுகாப்புக்கான அடித்தள வசதிகளுக்கும் வன நிலங்களைப் பயன்படுத்த விலக்கு தரப்படுகிறது. வனமல்லாத செயல்களுக்காக விலக்கு அளிப்பதற்கான பட்டியலிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
  • உயிரியல் பூங்காக்கள், வனப்பகுதி சுற்றுலா, சூழலியல்-சுற்றுலா ஆகியவற்றுக்கான தேவைகளும் வனப்பகுதிக்கான தேவைகளாகவே இனி கருதப்படும். ஒன்றிய அரசு குறிப்பிடும் விதிகள் – நிபந்தனைகளுக்கேற்ப வன நிலங்களை, வனமற்ற தேவைகளுக்காக திருப்பி விடவும் மசோதா வழி செய்கிறது. 
  • இது 1980இல் இயற்றப்பட்ட வன (பாதுகாப்பு) சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது என்பதுடன் அதைச் செய்திருக்கும் விதம் சர்வாதிகாரப் போக்கை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அந்தத் துறைக்கான நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை, ஆனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
  • அங்கே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுப்படி, அரசு கொண்டுவந்த திருத்த மசோதாவில் மாற்றம் எதுவும் வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் அரசின் நிலைக்கு வலுவான எதிர்க் கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். வன நிலங்களில் வசிப்போர், வன வள நிபுணர்கள், சூழலியலாளர்கள், மக்கள் சங்க அமைப்பினர் ஆகியோரின் எதிர்ப்புகளை அலட்சியம் செய்தும், மேற்கொண்டு யாரிடமும் ஆலோசனை கலக்காமலும், நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதம் எதையும் நடத்தாமலும் அவசரகதியில் நிறைவேற்றியுள்ளனர்.

பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) மசோதா

  • ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும், பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு ஒன்றிய அரசு நியமிக்கும் தேர்தல் ஆணையம்தான் இனி தேர்தலை நடத்தும். அத்தகைய சங்கங்களில் அரசுக்கு உள்ள பங்கை, அரசின் முன் அனுமதியின்றி யாரும் திருப்பித்தந்துவிட முடியாது. அதாவது, இந்தச் சங்கங்களில் அரசின் கட்டுப்பாடும் இருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • இந்தக் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீது கூறப்படும் புகார்களை ஒன்றிய அரசு நியமிக்கும் குறைதீர் அதிகாரி (ஆம்புட்ஸ்மேன்)தான் விசாரிப்பார். பல மாநில கூட்டுறவு சங்கங்களின் வாரியங்களைக் கலைக்கவும் மாற்று உறுப்பினர்களை நியமிக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உண்டு. இந்தச் சங்கங்களில் ஒன்றிய அரசும் பங்கு மூலதனம் செலுத்தியிருந்தாலும் அல்லது கடன் வழங்கியிருந்தாலும் இந்த அதிகாரங்கள் அவற்றுக்கு உண்டு.
  • இந்த மசோதாவும் அவையில் அமளிகளுக்கு இடையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவு, ஜனநாயகம், சுயாட்சி, சுய உதவி, அரசின் தலையீடு இல்லாமை ஆகியவற்றுக்கெல்லாம் நாம் இதன் மூலம் விடை கொடுத்துவிட்டோம்.

ஜிஎன்சிடிடி (திருத்த) மசோதா

  • அரசமைப்புச் சட்டத்தின் 239 ஏஏ உட்கூறு தில்லி மாநகர நிர்வாகம் தொடர்பாக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. “அரசின் தலைமைப் பதவியில் முதல்வர் இருந்து… துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனைகளை வழங்கி” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. தில்லிக்கு நாடாளுமன்றத்தைப் போன்ற அமைப்பும், பிரதிநிதியும் வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் விரும்பியிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை. ஜிஎன்சிடிடியை வெறும் மாநகராட்சி அளவுக்கு அதிகாரம் இன்றிச் செய்துவிட அனைத்துத் தந்திரங்களையும் இப்போதைய அரசு முயற்சித்துவருகிறது.
  • இரு முறை அதில் தோல்வியும் கண்டது. இப்போது சேவைகள் துறை அதிகாரத்தை அமைச்சர்களிடமிருந்து பறித்து, துணை நிலை ஆளுநரிடம் அளிக்கும் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறது. இனி தில்லி பிரதேச அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் அல்லது அவருடைய அலுவலக அதிகாரிகளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கியிருக்க வேண்டும்.
  • இந்த மசோதா சரியானதா, ஏற்கத்தக்கதா என்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என்பது ஒருபுறமிருக்க, இது நியாயமற்றது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இந்த மசோதாவானது துணைநிலை ஆளுநரை, முந்தைய பிரிட்டிஷ் அரசு நியமித்த வைஸ்ராய்க்கு இணையாக மாற்றுகிறது. அந்தப் பதவி பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியபோதே ரத்துசெய்யப்பட்டுவிட்டது.

சட்டம் இயற்றலில் அதிகார மீறல்கள்

  • மையப்படுத்தப்பட்ட, சர்வாதிகாரமுள்ள அரசு நிர்வாக முறையை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியே கொண்டுவரும் முயற்சிகள் என்பதற்கு இந்த மூன்று மசோதாக்களும் நல்ல உதாரணம். இந்த அதிகார அத்துமீறல்கள் வருங்காலத்தில் நீக்கப்பட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (07  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories