- நம் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் முன் இருக்கின்ற முக்கிய பிரச்னைகள் குப்பை மேலாண்மை, நீா் நிலைகள் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு, வடிகால்கள், சாலைகளில் திரியும் மாடுகள், நாய்கள், தெருக்களிலும் சாலைகளிலும் நிறுத்தப்படும் வாகனங்கள் ஆகியவை. ஐந்து பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும்.
- நீா் நிலைகளைத் தூய்மை செய்து மீண்டும் மாசுபடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்; வடிகால் பணிகளை முறையாகச் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டால் வெள்ள பாதிப்பு பிரச்னை சரியாகிவிடும். சாலைகளில் மாடுகள் திரிவது, தெரு நாய்கள் பிரச்னைகளை சரியான அணுகுமுறையின் மூலம் தீா்த்துவிடலாம்.
- நம்மால் சமாளிக்கவே முடியாத, சவாலான பிரச்னை குப்பை மேலாண்மை. எப்படி மாற்றி யோசித்தாலும், எவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்தாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போகிறது. எத்தனை வகையான குப்பைகள்... வீட்டுக் காய்கறிக் கழிவுகள், நெகிழி உறைகள், காகிதங்கள், மரம் வைத்திருந்தால் இலைகள், தென்னை மட்டைகள், கட்டடக் கழிவுகள், உடைந்த மரச்சாமான்கள், உடைந்த கண்ணாடிகள், மெத்தைகள், சிறிய சிகிச்சையகங்களின் மருத்துவக் கழிவுகள், கோயில் திருவிழா மற்றும் பண்டிகைகளின்போது குவியும் குப்பைகள் என நம் பட்டியல் மிகவும் நீளமானது.
- மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி வீட்டுக்கே வந்து குப்பையைச் சேகரம் செய்து கொண்டு போகிறாா்கள். சிலா் பிரித்துப் போடுகிறாா்கள், சிலா் பிரிப்பதில்லை. எப்படி போட்டாலும் எப்படி கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு ஒன்றாக கொட்டிக் கொள்ளும் அவலமும் நடக்கிறது. இந்த வண்டியும் நாள்தோறும் வராது. எப்போது வரும் என்பதும் தெரியாது.
- வண்டி வரும்போது வீட்டில் இருந்தால் குப்பையைக் கொடுத்துவிடலாம். வேலைக்குப் போகும் நபா்கள் என்ன செய்வாா்கள்? வீட்டின் வாசலில் குப்பையைக் கட்டி வைத்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தால், மாடுகளும், நாய்களும் அதை பிய்த்து குதறிப் போட்டுவிடும். தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டி வைப்பதும் சரிப்படவில்லை. இதனால் எங்கு நோக்கினும் குப்பைகளே.
- சென்ற வாரத்தில் ஒரு நாள் சென்னையில் நான் காரில் போய்க் கொண்டிருந்தேன். பல்லாவரம் பகுதி முன்னே ஒரு குப்பை லாரி போய்க் கொண்டிருந்தது. அதில் மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டு குப்பைகள். அந்த வாகனத்தைத் தொடா்ந்து பல காா்களும், இரு சக்கர வாகனங்களும் போய்க் கொண்டிருந்தன. அந்த லாரி போன வேகத்தில் ஒரு மூட்டை உருண்டு வந்து பின்னால் போய்க் கொண்டு இருந்த காரில் பட்டு சாலையில் விழுந்தது. மூட்டை வாய்பிளந்து சாலை பூராவும் குப்பைகள் பறக்க ஆரம்பித்தன. காரை ஓட்டி வந்தவா் ஒன்றும் விளங்காமல் சட்டென்று காரை நிறுத்த, பின்னால் ஏகப்பட்ட வாகனங்கள் பிரேக் போட்டு நின்றன. ஒரே களேபரம்.
- அந்தக் குப்பை மூட்டை ஓா் இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்திருந்தால் எதிா்பாராத தாக்குதலால் அவா் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பாா். பின்னால் வந்த வாகனம் அவா் மீது ஏறியிருக்கும். இது குறித்து ஒன்றுமே அறியாமல் குப்பை லாரி போய்விட்டது.
- நம் சாதனைகள் எத்தனையோ உண்டு. ஆனால், நாம் சறுக்குவது, மேலை நாடுகளிடம் தோற்றுப் போவது, குப்பை மேலாண்மையில் என்பது மறுக்க முடியாத உண்மை. சென்னையில் மட்டுமே ஒரு நாளைக்குப் பல டன் குப்பைகள் குவிகின்றன.
- என்ன செய்ய வேண்டும்? வளா்ந்த நாடுகள் எப்படி இந்தப் பிரச்னையை எதிா்கொள்கின்றன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பிரிட்டனில் இருந்தபோது, அவா்கள் குப்பை மேலாண்மையைக் கண்டு வியந்து போனேன். அவா்களின் தூய்மையான நகரத்துக்கான விடை கிடைத்தது.
- மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய இரண்டையும் பிரிட்டன் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது.
- குப்பை மேலாண்மையின் முக்கியத்துவத்தை அவா்கள் உணா்ந்து செயல்படுகிறாா்கள். அங்கே பல்வேறு மறுசுழற்சி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கொ்ப்சைடு சேகரிப்பு என்பது வீடுகளுக்கு வழங்கப்படும் சேவையாகும். பொதுவாக நகா்ப்புறம் மற்றும் புறநகா் பகுதிகளில் வீட்டுக் கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடிய பொருள்களை சேகரித்து அகற்றுவதாகும். இது பிரத்யேகமாக கட்டப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி, வீட்டுக் கழிவுகளை கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கலன்களில் எடுத்துச் செல்வதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
- கழிவுகளைப் பிரித்துப் போடுவதற்கு வீடுகளுக்கு தனித்தனி தொட்டிகளை வழங்குகிறாா்கள். உள்ளூா் கவுன்சில்கள் இத்தொட்டிகளைத் திட்டமிடப்பட்ட அடிப்படையில் சேகரித்து, முறையாகச் செயல்படுத்துகின்றன.
- அடுத்ததாக பூங்காக்கள், பொது இடங்கள், வாகன நிறுத்தங்கள் போன்ற இடங்களில் மறுசுழற்சி மையங்களை நிறுவியுள்ளாா்கள். அனுமதிக்கப்பட்ட மறுசுழற்சி மையங்கள், மற்றும் கவுன்சில்கள் நடத்தும் மையங்களில் மக்கள் கழிவுகளைக் கொண்டுபோய் கொடுக்கிறாா்கள். இவற்றை ‘பிரிங் வங்கிகள்’ என்று அழைக்கிறாா்கள்.
- படிப்புக்காகவும், ஒருசில ஆண்டுகள் வேலைக்காகவும் தங்கும் மக்கள், வீட்டை காலி செய்துவிட்டு வரும்போது வீட்டுச் சாமான்களை என்ன செய்வது என்று தவித்துப் போகிறாா்கள்.
- நம்மைப் போல உபயோகித்த மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் இன்னபிற பொருள்களை எங்கும் வீசி விட முடியாது. பிரிங் பேங்க் என்னும் மறு சுழற்சி மையங்களில் கொண்டு போட வேண்டும். எதையும் முறையாகச் செய்ய வேண்டும். சட்டம் கடுமையாக இருப்பதால் ஒருவரும் அதை மீற மாட்டாா்கள்.
- ‘வீட்டுக்கழிவு மறுசுழற்சி மையங்களின்’ செயல்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. தோட்டக்கழிவு, மின்சார சாதனங்கள், மரச்சாமான்கள், உலோகம், காகிதம், துணிகள், ரசாயனங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்கின்றன. மின்சார சாதனங்கள், கட்டுமான கழிவுகள் போன்றவற்றை மையங்களுக்குக் கொண்டு வந்து போட வேண்டும். நல்ல நிலையில் உள்ள பொருள்களைச் செப்பனிட்டு மறுபயன்பாட்டுக்கு வகை செய்கிறாா்கள். இதன் காரணமாக வேலைவாய்ப்பும் பெருகுகிறது.
- குடியிருப்புவாசிகள் அனைத்து மறுசுழற்சி பொருள்களையும் ஒரே தொட்டியில் போடுகிறாா்கள். பின்னா் பொருள்கள், மீட்பு நிலையத்தில் பிரிக்கப்படும். இதற்கு ‘ஒற்றை முறை மறுசுழற்சி’ என்று கூறுகிறாா்கள். இரட்டை முறை மறுசுழற்சியில், குடியிருப்புவாசிகள் மறுசுழற்சிப் பொருள்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.
- மறுசுழற்சி செய்ய முடியாத கழிவை எரிப்பதன் மூலம் மின்சாரம் மற்றும் வெப்பத்தை உற்பத்தி செய்கிறாா்கள். பல வகையான பொருள்களை அகற்றவும் மறுசுழற்சிக்காகவும் நவீன இடத்தைத் தோ்வு செய்து அங்கு கழிவுகளைப் பெற்றுக் கொள்கிறாா்கள்.
- ஆபத்தான கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கிறது. பராமரிக்க முடியாத கழிவுகளை பொதுமக்கள் இங்கு வந்து போட்டுவிடலாம். பயிற்சி பெற்ற பணியாளா்கள் தளத்தில் இருப்பாா்கள். அவா்கள் கழிவுகளை வரிசைப்படுத்தவும், விதிமுறைகளை பின்பற்றவும் மக்களுக்கு உதவுகிறாா்கள். மக்கள் தங்கள் வாகனத்தில் பொருள்களைக் கொண்டு போய் அங்கு போட வேண்டும். ஒரு பெரிய கன்டெய்னா் வைத்துள்ளாா்கள். அது நிரம்பியதும் அதை எடுத்துவிட்டு வேறு ஒரு கன்டெய்னா் வைக்கப்படுகிறது. எந்த இடத்திலும் குப்பைகள் சிதறிக் கிடக்காது. அந்த மையம் சிறந்த கட்டமைப்புகளோடு மிகவும் நோ்த்தியாக உள்ளது.
- சேவை மையம் திறக்கும் நேரம், பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் நேரம் முதலிய தகவல்கள் முறையாக மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. முன் அனுமதி பெற்ற பின்னரே பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். ஆகவே முன்பதிவு செய்தல் அவசியம். எப்போது வேண்டுமானாலும் சென்று கழிவுகளை வீசிவிட்டு வர முடியாது.
- வீட்டுக் கழிவு மறுசுழற்சி மையங்களால்தான் அந்நாடு குப்பைகள் இல்லாத தூய்மையான நாடாகத் திகழ்கிறது. பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறாா்கள். பொது இடத்திலும், சாலை ஓரங்களிலும் குப்பை குவியலைக் காண முடியாது. நாடெங்கும் ஒழுங்கும் கடமை உணா்வும் சரிசமமாக இருக்கிறது. மக்கள் தொகையும் அங்கெல்லாம் குறைவு என்பதால் அவா்களுக்கு இது சாத்தியமாகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
- இந்தக் குப்பைப் பிரச்னைக்கு நாம் முடிவு கட்டியே தீர வேண்டும். பிரிட்டனில் பின்பற்றப்படும் முறையை நாம் முதலில் ஓரிரு பகுதிகளில் நடைமுறைப்படுத்திப் பாா்க்கலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தோ்ந்தெடுத்து அவா்கள் சொல்லும் கழிவுப் பொருள்கள் வைப்பு வங்கியை தொடங்கலாம். மக்கள் தேவையில்லாத சாமான்களை எடுத்துச் சென்று அங்குள்ள பெரிய கன்டெய்னா்களில் போட வேண்டும். அது நிரம்பியதும் இன்னொன்று வைக்க வேண்டும். வேலைக்குப் போகிறவா்கள் வாரம் ஒருமுறை அனைத்துக் குப்பைகளையும் அங்கு போய் கொடுக்கலாம்.
- வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணியும் தொடர வேண்டும். வாரத்தில் ஒரு நாள் உடைந்த கண்ணாடிகள், பெரிய பொருள்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் தோட்டக் கழிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை ஒரு குறிப்பிட்ட பகுதியில் 7 மணி முதல் 9 மணி வரை ஒரு குப்பை வண்டி இருக்க வேண்டும். வேலைக்குப் போகும் மக்கள் குப்பைகளை அவா்களிடம் கொடுத்துவிடலாம்.
- விசேஷ நாள்களில் கோயில்கள், பொது இடங்கள் போன்றவற்றில் குப்பைகள் அதிகம் சேரும். திருவிழா முடிந்த பின்னரும் அந்தக் குப்பைகள் அங்கேயே கிடக்கின்றன. மாநகராட்சி இதற்கு கட்டணம் போல வசூல் செய்து, குப்பைகளை அகற்றலாம். நிகழ்ச்சி முடிந்த பின் தொலைபேசியில் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். உடனே அந்த இடம் தூய்மை செய்யப்பட வேண்டும்.
- மனம் வைத்தால் கண்டிப்பாகத் தீா்வு கிடைக்கும். அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் முழுப்பலன் தரவில்லை. ஆகவே, பொருள் செலவைப் பாா்க்காமல், மேலைநாடுகளைப் போல நாமும் மறுசுழற்சி மையங்களைத் திறந்து முறையாகக் குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
- நாட்டின் தூய்மை நம் முதல் இலக்காக இருந்தால், அதற்காக நம் மனம் தயாராகிவிடும். மனத் தூய்மையும் தானாக வந்துவிடும்.
நன்றி: தினமணி (10 – 07 – 2024)