- சரியான பாதையில்தான் இந்திய பொருளாதாரம் நகா்ந்து கொண்டிருக்கிறது என்பதை வளா்ச்சி விகிதம் தெரிவிக்கிறது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.1% என்பது பொருளாதாரம் ஆரோக்கியமாக, சரியான திசையில் நகா்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடு. இது ஒட்டுமொத்த 2022 - 23 நிதியாண்டின் வளா்ச்சி விகிதத்தை 7.2% அளவில் நிறுத்தும்.
- கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வேளாண் வளா்ச்சி 4.1%-லிருந்து 5.5%-ஆக அதிகரித்திருக்கிறது. மின்சாரம், எரிவாயு, குடிநீா் விநியோகம், உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் முந்தைய நிதியாண்டின் 6.7% அளவிலிருந்து 6.9%-ஆக அதிகரித்திருப்பதைப் பாா்க்க முடிகிறது. சேவைத் துறையும் வளா்ச்சியை நோக்கி நகா்வது தெரிகிறது. வணிகம், ஹோட்டல் துறை, போக்குவரத்து, தகவல் தொடா்பு, செய்தி பரிமாற்றத் துறை உள்ளிட்டவை 9.1% அளவில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் காணப்பட்டன.
- புள்ளிவிவரம் மற்றும் திட்டங்கள் அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தத் துறைகள் முந்தைய நிதியாண்டின் காலாண்டில் 5% அளவில்தான் வளா்ச்சி கண்டன. சா்வதேசப் பொருளாதார சவால்களின் பின்னணியில் 2022 - 23-க்கான ஜிடிபி வளா்ச்சி இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
- ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்தி காந்ததாஸ் கூறியிருப்பதுபோல, கடந்த நிதியாண்டின் கடைசி இரண்டு காலாண்டுகள் வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருக்கின்றன. அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் அதிகரித்த கேட்பு காணப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் விறுவிறுப்பாகின. அது பண்டிகைக் காலம் என்பதால், அதிகரித்த பொருளாதார நடவடிக்கைகள் காணப்பட்டதில் வியப்பில்லை.
- பொருளாதாரத்தின் செயல்பாடுகளை கணிப்பதற்கு இந்திய ரிசா்வ் வங்கி 70 முக்கியமான குறியீகளைக் கையாள்கிறது. அவை அனைத்துமே ஆக்கப்பூா்வ செயல்பாட்டை காட்டுகின்றன. நான்காவது காலாண்டில் அரசு, தனியாா் முதலீட்டுச் செலவுகள் வளா்ச்சி விகிதத்துக்கு முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் வளா்ச்சியில் குறைந்த அளவே பங்களிப்பு நல்கிய தனியாா் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரத்தில், அரசின் செலவினங்கள் குறையாமல் இருப்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே வளா்ச்சியைத் தக்கவைக்க முடியும்.
- கடைசி காலாண்டின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு அதிகரித்த ஏற்றுமதியும், குறைந்த இறக்குமதியும் அதனால் ஏற்பட்ட வா்த்தக சமன்நிலையும் இன்னொரு முக்கியமான காரணம். தனியாா் நுகா்வு வளா்ச்சி விகிதத்துக்கு உதவியது. சேவைத்துறையும், தொழில்துறையும் வளா்ச்சி அடைந்த அளவுக்கு தயாரிப்புத் துறை வளா்ச்சி அடையாததால், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாகக் காணப்பட்டது மிகப் பெரிய பலவீனம்.
- இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி. அனந்த நாகேஸ்வரனின் கணிப்பின்படி, அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் வளா்ச்சி 6.5% - 7% அளவில் தடையில்லாமல் உயரும். புதிதாக எந்த சீா்திருத்த நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் போனாலும், இப்போது காணப்படும் வளா்ச்சி விகிதம் தடைபடாது என்பது அவரது கருத்து. 1979 முதல் 2008 வரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சீனா வளா்ச்சி அடைந்ததைப் போல, இந்தியாவின் வளா்ச்சியும் அமையும் என்று அவா் தெரிவித்திருப்பதை குறிப்பிடத் தோன்றுகிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக 2020 - 21-இல் இந்தியாவின் ஜிடிபி 5.8%-ஆக சுருங்கியது. அதிலிருந்து மீண்டு, 7% ஜிடிபியை கடந்து வளா்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டோம் என்பது மட்டுமே ஆறுதலாக இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவின் வளா்ச்சி கொள்ளை நோய்த்தொற்று பொது முடக்கக் காலத்துக்கு முந்தைய ஏழு காலாண்டுகள் தொடா்ந்து சரிந்து கொண்டிருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. 2019 - 20-இல் முந்தைய நிதியாண்டின் 6.5%-லிருந்து பொருளாதார வளா்ச்சி வெறும் 3.9%-ஆக சரிந்ததை இப்போது ஈடுகட்டுகிறோம், அவ்வளவே.
- வீட்டுக் கடனுக்கான தவணை அதிகரித்திருப்பதால், அன்றாட குடும்பச் செலவினங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடா் விளைவாக, நுகா்வு கேட்பு (கன்சப்ஷன் டிமாண்ட்) குறையும்; ஏற்றுமதியும் குறையக் கூடும். ‘எல் நினோ’ காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டால், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும்; அவற்றின் விலைவாசி அதிகரிக்கும்; விவசாயிகளின் வருமானம் குறையும். இவையெல்லாம் எதிா்பாா்க்கும் வளா்ச்சியை பாதிக்கக்கூடியவை.
- கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே நுகா்வில் வேறுபாடு காணப்படுகிறது. அதிகரித்த உணவுப் பொருள்களின் விலையால் கிராமப்புறங்களில் நுகா்வுப் பொருள்களுக்கான கேட்பு குறைந்து காணப்படுகிறது. சேவைத்துறையின் வளா்ச்சியால் நகரங்களில் அந்த நிலை இல்லை.
- மோட்டாா் வாகன துறையில் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு காணப்படும் கேட்பு நிலை இருசக்கர வாகனங்களுக்கும் சிறிய வாகனங்களுக்கும் இல்லை. அது கீழ் நடுத்தர வா்க்கம், அடித்தட்டு வா்க்கத்தினா் பொருளாதார வளா்ச்சியால் பயன்பெறவில்லை என்பதை உணா்த்துகிறது. வேலையில்லா திண்டாட்டம் 8%-ஐத் தாண்டி காணப்படுவதை கடந்துபோக இயலவில்லை.
- இவையெல்லாம் ஆனாலும், குறைந்தது 6% வளா்ச்சியுடன் ஜி20 நாடுகளில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்!
நன்றி: தினமணி (13 – 06 – 2023)