TNPSC Thervupettagam

சவுண்டு கொடுத்து தப்பிக்கும் புலி வண்டு

June 11 , 2024 215 days 315 0
  • பசுத்தோல் போர்த்திய புலி கேள்விப்பட்டிருப்போம்; புலித்தோல் போர்த்திய பசுவை கேள்விப்பட்டதுண்டா? சிசிண்டலிடே (Cicindelidae), என்கிற ‘புலி வண்டு' (tiger beetle) துணைக் குடும்பத்தை சேர்ந்த உயிரினங்களின் நடத்தை புலித்தோல் போர்த்திய பசு போன்றது என்கிறார் புளோரிடா இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆய்வாளர் ஹார்லன் எம். கோஃப் (Harlan M. Gough).
  • எதிரியிடமிருந்து தப்பிக்க உயிரினங்கள் பல்வேறு சாகசங்களை செய்வதுண்டு. இலை தழைக்கு அடியே ஒளிந்து கொள்ளும். உடல் நிறத்தை சுற்றுபுறம் போல தகவமைத்து எளிதில் கண்ணில் படாமல் தப்பும். ஆடாமல் அசையாமலிருக்கும்.
  • இதில், வியப்பாக இரவில் நடமாடும் புலி வண்டுகள் வெளவாலுக்கு இரையாகிவிட கூடாது என்பதற்காக வெளவால் எழுப்பும் அல்ட்ராசவுண்ட் மீ-ஒலியை கேட்ட மாத்திரத்தில் தாமும் மீ-ஒலி அலையில் பதில் ஒலி எழுப்புகிறது.
  • ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல’ என்பதுபோல தாம் இருக்கும் இடத்தை எளிதில் காட்டிக்கொடுக்கும் படியாக புலிவண்டு செயல்படுவது ஏன்?
  • புலி வண்டு எனும் துணைக்குடும்பத்தில் 2,600க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இவற்றில் சில பகலில், சில இரவில் இயங்கும். இரவில் செயல்படும் உயிரினங்களில் ஏழு வகையான புலிவண்டுகள் வெளவால் சப்தம் கேட்டவுடன் பதில் சப்தம் எழுப்புகின்றன.

திசை திருப்பவா அல்லது மிரட்டவா?

  • புலி வண்டின் முகத்தில் பெரிய இரண்டு கண்களும், கதிர் அரிவாள் போன்ற வளைந்த கூர்மையான முனையைக் கொண்ட இரண்டு கீழ்த்தாடைப் பற்களும் (Mandibles), தலையில் இரண்டு ஏன்ட்டனாக்களும் இருக்கும். இதன் முன்இறக்கை தடிமன் அடைந்து ‘எளிட்ரா’ எனப்படும் கவசம் போல காட்சி தரும். அதனடியில் உள்ள இறக்கைகளை அசைத்து பறக்கும். லேசாக எளிட்ராவை உயர்த்தி சிறகை அடித்தால் ரீங்கார ஒளி எழும். நமது காதுகளுக்கு மெல்லிதாக கேட்கும் இந்த ஒளி இறவில் வேட்டையாடக்கூடிய பழுப்பு வெளவாலுக்கோ மீ-ஒலியாக கேட்கும்.
  • ஒருவேளை வௌவாலை திசைதிருப்பவே இத்தகைய மீ-ஒலியை புலிவண்டு எழுப்புகிறதா? ஆனால், வெளவால்கள் உணரும் படியாக 30 முதல் 60 kHz அதிர்வெண் மீ-ஒலியை புலி வண்டுகள் எழுப்பின.
  • பென்சால்டிஹைடு, ஹைட்ரஜன் சயனைடு போன்ற நச்சு ரசாயனங்களை புலிவண்டுகள் இரவில் உற்பத்தி செய்கின்றன. ஒருவேளை தன்னிடம் நச்சு உள்ளது எனவே
  • என்னை வேட்டையாடி புசிக்காதே என எச்சரிக்கின்றனவா?
  • இதனை அபோஸ்மேடிசம் என்பார்கள். எடுத்துக்காட்டாக நச்சு தன்மை உடைய சில குளவிகளின் உடலில் பிரகாசமான மஞ்சள் கருப்பு கோடுகள் அல்லது எடுப்பான வண்ண வடிவங்கள் இருக்கும். இதனை சோதித்துப் பார்க்க புலிவண்டுகளை பிடித்து பழுப்பு நிற வௌவால்களிடம் கொடுத்தனர். நச்சு தன்மையை பொருட்படுத்தாமல் புலிவண்டுகளை வெளவால்கள் ருசித்து புசித்தன.
  • வெளவால் எழுப்பும் அதே அலைவரிசையில் மீ-ஒலி எழுப்பி ஆர்க்டினே எனும் அந்துபூச்சிகளும் வெளவால்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். வியப்பாக புலிவண்டும் இதே அலைவரிசையில் மீ-ஒலி எழுப்புகிறது எனக்கண்ட ஆய்வாளர்கள் புதிரை விடுவித்தனர்.
  • இரவில் வேட்டையாடும் பழுப்பு நிற வௌவால் புலி வண்டின் சப்தத்தை ஆர்க்டினே அந்துபூச்சியின் எச்சரிக்கை ஒலி என தவறாக கருதி திசை திரும்பிவிடுகிறது. ‘ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு’ என்பதுபோல ஆர்க்டினே அந்துபூச்சிபோல போலி சப்தம் எழுப்பி புலி வண்டு தன்னை வேட்டையாட வரும் வௌவால்களிடமிருந்து தப்பிக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories