- புனைவுகளை மட்டும் மொழியாக்கம் செய்பவர்கள் உண்டு. அபுனைவுகளை மட்டும் மொழியாக்கம் செய்பவர்களும் உண்டு. இவர்களுக்கு மத்தியில் புனைவு - அபுனைவு நூல்களை அனைவரும் விரும்பி வாசிக்கும் அளவில் மொழிபெயர்ப்பதில் திறமை படைத்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி சாதனையாளர்தான்.
- அறிவியல், பொருளாதாரம், சட்ட முறைமை, அயலுறவுக் கொள்கை, வரலாறு, வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல், தாவரவியல், அறிவியல் மனப்பான்மை, சிறுகதைகள், நாவல்கள் எனப் பல்வேறு துறைகளில் 25-க்கும் மேற்பட்ட நூல்களை மிக எளிமையாகவும், வாசிக்கும் விதத்திலும் மொழியாக்கம் செய்துள்ள அவரே இவ்வாண்டு (2023) மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுள்ளார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடியருளிய திருமருகல் என்னும் சிற்றூரில் 1962ஆம் ஆண்டு, வீ.கண்ணையன் - சிங்காரவள்ளி ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகப் பணியில் உதவியாளராகச் சேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரி மாலை நேர வகுப்பு மூலம் சட்டவியல் பட்டமும் (1985 - 88), சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் துறை மூலம் தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் (1988-90) பெற்றார்.
- பின்னர், மதுரையில் உள்ள அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பு அலுவலர் ஆனார். திருச்சிராப்பள்ளி, கொடைக்கானல், திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்களில் பணியாற்றிப் பின், புதுடெல்லியில் வானொலித் தலைமை இயக்ககத்தின் வெளிநாட்டு ஒலிபரப்புப் பிரிவிலும் பணிபுரிந்தார். கடைசியாக, புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் இயக்குநராகப் பணியாற்றி, 2022 மார்ச்சில் அரசுப் பணியை நிறைவுசெய்தார்.
- இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி அமைப்பான நேஷனல் புக் டிரஸ்ட்டின் பெருமைமிகு மொழிபெயர்ப்பாளராகத் திகழும் இவர், அந்நிறுவனத்துக்காகப் பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். சாகித்திய அகாடமிக்காக 2016, 2017களில் விருதுபெற்ற ஆங்கிலப் புதினங்களையும், விருது பெற்ற நேபாளிப் புதினத்தையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
- பொள்ளாச்சியில் செயல்பட்டுவரும் அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்துக்காக, தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றிவரும் சரத்பவாரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழாக்கித் தந்திருக்கிறார். அசாமில் அரசாண்ட அஹோம் வம்சத்தின் தீரமிக்கப் படைத் தளபதியாக விளங்கி, பராக்கிரமம் மிக்க முகலாயப் படையைத் தன் சாதுரியமான போர் உத்தியால் தோற்றோடச் செய்ததற்காகக் கொண்டாடப்படுபவர் லச்சித் பர்புகான் (1622-1672). அவருடைய நானூறாவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக அசாம் மாநில அரசு அவருடைய பெருமையை விதந்துரைக்கும் நூலை 23 இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில், 2024 ஜனவரி 20 அன்று வெளியிட்டது. 23 இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்தது இதுதான் முதல் தடவை எனப்படுகிறது. அந்த வரிசையில், தமிழ் நூலை ‘அசாமின் அஞ்சாநெஞ்சன் லச்சித் பர்புகான்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டுப் பாடநூல்
- கல்வியியல் பணிகள் கழகம் 2018இல் புதிய பாடநூல்களை உருவாக்கியபோது, சில பாடங்களை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். மேலும், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக அக்கழகம் தமிழில் வெளியிடுவதற்காக, ஃபாலி எஸ்.நாரிமன் எழுதிய ‘இந்தியச் சட்ட முறைமை’ என்கிற நூலையும் முகுந்த் துபே எழுதிய ‘இந்தியாவின் அயலுறவுக் கொள்கை’ என்கிற நூலையும் மொழிபெயர்த்துள்ளார். ஒடிய மொழியின் முதலாவது புதினம் என்று கருதப்படுகிற பக்கீர் மோகன் சேனாதிபதி எழுதிய படைப்பையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள குன்றக்குடி அடிகளார், அசோகமித்திரன் குறித்த நூல்களைத் தமிழிலிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவை தவிர காலச்சுவடு, மணல்வீடு, திசைஎட்டும், அகநாழிகை, நிலவெளி, விடியல் முதலான இலக்கிய ஏடுகளில் இவர் மொழிபெயர்த்த சிறுகதைகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புப் பணிக்காக நெல்லை 'மேலும்' இலக்கிய அமைப்பின் விருது, ‘நல்லி - திசை எட்டும்’ விருது, பொள்ளாச்சி ‘அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது’, தமிழ்நாடு அரசின் ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
இவருடைய மொழியாக்கங்களில் ‘யார்’
- என்கிற அறிவியல் நூலும் ‘மனித குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்’ நூலும், ‘இமயத்தில் விவேகானந்தர்’ என்கிற வாழ்க்கை வரலாறும், ‘சரத்பவாரின் அரசியல் வாழ்க்கை அனுபவங்க’ளும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. புனைவுகள் சார்ந்த மொழிபெயர்ப்பில் ‘கருங்குன்றம்’, ‘எம்மும் பெரிய ஹூமும்’ சிறந்த மொழிபெயப்புகள்.
- வட கிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் வாழ்க்கைமுறை, சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் அழியாத சித்திரமாகக் ‘கருங்குன்றம்’ (ஆசிரியர்: மமாங் தய்) தீட்டிக்காட்டுகிறது. விரிவான களப்பணிகளில் திரட்டிய தரவுகளின் மூலம் மறைந்துபோன உண்மையான வரலாற்றைக் கற்பனைபோல இந்தப் புதினம் கட்டமைத்துள்ளது. ம 2017இன் சிறந்த ஆங்கில மொழிப் படைப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது. தற்போது சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்காக கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு இந்த நூல் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 03 – 2024)