TNPSC Thervupettagam

சாட்ஜிபிடி தேடலுக்கே உதவும் ஆய்வுக்கு அல்ல

September 5 , 2023 446 days 330 0
  • சாட்ஜிபிடி தளம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ஒரு மனிதர் பின்னால் நின்று எழுதவைப்பதைப் போல், தர்க்கரீதியான கோவையுடன் அது தகவல்களை வேகமாக உருவாக்குவதும் ஒன்றுதிரட்டுவதுமே இதற்குக்காரணம். சாட்ஜிபிடியைப் பற்றிப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் நான் அதில் ஒருகணக்கைத் தொடங்கி, எதிர்காலத்தில் அதுஆய்வைப் பதிலீடு செய்துவிடுமா என்று கேள்விஎழுப்பினேன். உடனடியாக அது அளித்தவிடை: நான் ஒரு செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரி, எனக்கென்று தனிப்பட்ட நம்பிக்கைகள் கிடையாது. ஆனால், என்னால் ஒரு விஷயத்தின் இரண்டு பக்க வாதங்களையும் முன்வைக்க முடியும்’.
  • இந்த விடை சுவாரசியமானது. திரையில் இந்தத் தகவலை அது தட்டச்சு செய்த வேகம் என்னை வியக்க வைத்தது. அது வாசகங்களைத் தட்டச்சு செய்த வேகத்தில், என்னால் வாசிக்க இயலவில்லை. முழுதாகத் தட்டச்சு செய்து முடிந்தவுடன் நான் அந்த விடையைத் தாங்கிவந்த ஆவணத்தை முழுமையாகப் படித்தேன். அது என்னைக் கவர்ந்தது. பயனுள்ள தகவல்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
  • சில விநாடிகளுக்குள் ஐந்து வெவ்வேறு கருத்துகள் விளக்கப்பட்டிருந்தன. நான் இப்படி ஐந்து கருத்துகளை யோசிக்க, அது எதைப் பற்றியதோ அந்த விஷயத்தின் கனத்தைப் பொறுத்து, ஒருமணி நேரம் அல்லது அதற்கு மேலோ எடுத்துக்கொண்டிருப்பேன். செயற்கை நுண்ணறிவு - வினையூக்கி, வெற்றிகொள்பவர் அல்ல: சாட்ஜிபிடியும் ஆய்வின் எதிர் காலமும்என்பதே நான் எழுப்பிய கேள்விக்கு அது அளித்த விடையின் தலைப்பு.
  • அது சாட்ஜிபிடிக்குப் பிந்தைய ஆய்வின் எதிர்காலம் குறித்த என் கருத்துடன் ஒத்துப்போவதாக இருந்தது. அந்தக் கட்டுரை பள்ளியில் ஆங்கில ஆசிரியைகள் நமக்குக் கற்பித்ததைப் போல் ஒரு தொடக்கவுரை, முடிவுரை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • அந்த ஆவணம் எண்ணற்ற தரவுத்தளங் களிலிருந்து பெறப்பட்டது. சாட்ஜிபிடி அப்படிச் செய்யும்படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறாக, நான் ஒரு 800 சொற்களைக் கொண்ட கட்டுரை எழுதுவதற்காக ஒரு விஷயம் குறித்து ஆய்வு செய்தால், ஐந்தாறு அதிகாரபூர்வ தகவல்களைக் கொண்ட தளங்களை மட்டுமே நாடுவேன். லட்சக் கணக்கான தளங்களுக்குச் செல்ல மாட்டேன். ஏனென்றால், அவற்றில் பெரும்பாலானவை போலியாகப் பிரதியெடுக்கப் பட்டவை.
  • சாட்ஜிபிடி கட்டுரை வெறும் தொகுப்பு மட்டுமே. நான் எழுதும்போது புதிய சிந்தனைகளைத் தேடி, அத்துடன் என் எண்ணங்களையும் பார்வையையும் பிரதிபலிக்கும் வகையில் இணைத்து எழுதுவேன். அசலானவை, தனித்துவமானவை, புதியவையை மட்டுமே நான் தேர்ந்தெடுப்பேன். அவற்றை என் மனதுக்குள் போட்டுப் பதப்படுத்தி ஒரு புதிய கோணத்தை உருவாக்குவேன்.
  • தெரிந்த தகவல்களை மட்டுமே தொகுத்துத் தரும் ஆய்வுக்கு எந்தப் பயனும் இல்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயம் குறித்து ஏற்கெனவே உள்ள நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள் ஆகியவற்றைத் தொகுக்கும் ஆய்வு என்றால்கூட, அதை வைத்து அந்த விஷயத்தில் நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்.
  • ஆய்வு என்பது விளையாட்டல்ல. பல ஆண்டு களுக்கு முன் என் பேராசிரியரிடம், “என் கட்டுரை களை ஆய்விதழ்களில் வெளியிடுவது எப்படி?” என்று கேட்டேன். நீ ஒரு விஷயம் தொடர்பாக அனைத்தையும் படித்துவிட்ட பிறகு, அது தொடர்பாக ஏற்கெனவே உள்ள ஆய்வுகளை முன்னோக்கிச் செலுத்தும் வகையில் சொல்வதற்கு அசலான ஏதேனும் ஒன்று உன்னிடம் இருக்கும்போதுஎன்று அவர் பதில் அளித்தார். என் தலைசுற்றியது.

முதுகெலும்பை உடைக்கும் வேலை

  • சிறந்த ஆய்வு என்பது முதுகெலும்பை உடைக்கும் வேலை. கடினமான அறிவுசார் பணிகளை உள்ளடக்கியது. ஆய்வு செய்யும்போது நீங்கள் அகலச் செல்லக் கூடாது, ஆழமாகச் செல்ல வேண்டும். ஒரு சிறிய கருத்துருவை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி, அதை விரிவாக ஆய்வுசெய்து, நீங்கள் வந்தடையும் ஒவ்வொரு துணிபுக்கும் நம்பகமான ஆதாரங்கள், பரிசோதனைகள், மாதிரிகள் இவற்றைத் தாண்டிய விஷயங்களைக் கொண்டு வலுசேர்க்க வேண்டும்.
  • அணுவையும் புவியீர்ப்புக் கோட்பாட்டையும் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. சாட்ஜிபிடி இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து தகவல்களைத் தொகுத்துக் கொடுத்துவிடும். ஆனால், இவற்றை மேம்படுத்தும் வகையில் எதையும் செய்துவிடாது. அதற்குத் தேவைப்படும் மனரீதியான வசதியோ திறனோ அதனிடம் இல்லை.
  • எனவே, ஆய்வை, எதிர்கால ஆய்வுப் புலத்தை சாட்ஜிபிடி நீர்த்துப்போகச் செய்யுமா அல்லது பதிலீடு செய்துவிடுமா என்னும் கேள்விக்கான விடை அப்படியில்லை என்பதே. புதிய உடைப்பை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி, ஏற்கெனவே இருக்கும் அறிவை மேம்படுத்துவோருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை, ஆதாரங்களைத் தராத வலைப்பதிவுகளும் வேறோருவரைப் பார்த்து எழுதித் தேர்வில் வெற்றிபெறுவதும் நிச்சயம் பெற்றுத் தந்துவிடாது.
  • இந்த உலகம் விடையில்லாப் பல கேள்விகளைக் கொண்டிருக்கிறது. அத்தகைய கேள்விகள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். சாட்ஜிபிடி தெரிந்த தகவல்களை ஒன்றுதிரட்டிக் கொடுக்கும். அதனால் புதிய கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடையைத் தேட முடியாது. சாட்ஜிபிடி-யின் எல்லை என்பது, தளங்களில் தகவல்களைப் பதிவேற்றுவோரின் எல்லைகளுக்குள் சுருங்கிவிடுகிறது.
  • சாட்ஜிபிடி ஒரு வேலையை வேகமாகச் செய்து முடிப்பதற்கும் ஒரு திட்டத்தைப் பயன்மிக்க வகையில் நிறைவேற்றவும் உதவும் கருவியாகப் பிரபலமடைந்துவருகிறது. நாம் எடுத்துவைத்திருக்கும் தரவுகளைத் தேர்ந்தெடுத்து, வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதற்கு உதவும் ஜீபூம்பாபூதங்களாகத் தொழில்நுட்பம் இருக்க முடியும்.
  • ஆனால், தான் விசாரணைக்கு உட்படுத்தும் விஷயத்தின் குவிமையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது ஆய்வாளரின் பொறுப்பே. ஏனென்றால், சாட்ஜிபிடி தெரிந்த தகவல்களைச் சேகரித்துத் தருகிறது. அதனால், கேள்வி கேட்கவோ பதில்களைக் கண்டறியவோ முடியாது. சாட்ஜிபிடி-யால் தேட முடியும், ஆய்வுசெய்ய முடியாது.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories