TNPSC Thervupettagam

சாதித்த சாம்பியன்கள்!

September 13 , 2024 124 days 169 0

சாதித்த சாம்பியன்கள்!

  • முதல் முறையாகப் பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கப் பதக்கம் உள்பட 29 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியுள்ளது. இந்த பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பலரும், ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்றவர்களும்கூட.
  • பாரா தடகளம் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 இறுதிச் சுற்றில் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றவர் இவர். தமிழ்நாட்டின் மாரியப்பனுக்குப் பிறகு பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர். 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று ஆசிய சாதனை படைத்தவர்.
  • பாரா தடகளம் ஈட்டி எறிதல் எஃப்41 பிரிவில் நவ்தீப் சிங் தங்கம் வென்று அசத்தினார். தொடக்கத்தில் நவ்தீப் வெள்ளிப் பதக்கம்தான் வென்றிருந்தார். ஆனால், ஈரான் வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நவ்தீப்புக்குத் தங்கம் கிடைத்தது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராதான் இவருடைய முன்மாதிரி. டோக்கியோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்!
  • பாரா ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் எஸ்எல்11 பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் 234.9 புள்ளிகள் ஈட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றவர் இவர். 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி கலப்பு 50 மீ. பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றவரும்கூட.
  • பாரா தடகளம் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் நிஷாத் குமார் தனித்துவமான திறமையை நிரூபித்தார். இந்தப் போட்டியில் 2.04 மீட்டர் தாண்டி பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றவர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2023, 2024இல் முறையே வெள்ளிப் பதக்கங்களை வென்றவர் நிஷாத் குமார்.
  • கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிவரும் சுகாஷ் யத்திராஜ், இரண்டாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தினார். பாரிஸில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.4 பிரிவின் இறுதிச் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் சுகாஷ் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. டோக்கியோ பாராலிம்பிக்கிலும் வெள்ளி வென்றவர். 2024 உலக சாம்பியன்ஷிப், 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்.
  • பாரா தடகளம் ஆடவர் வட்டெறிதல் எஃப்56 பிரிவில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா 42.22 மீ. எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். டோக்கியோவிலும் 42.42 மீ.வீசி இவர் வெள்ளி வென்றிருந்தார். 2018 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 45.18 மீட்டர் வட்டெறிந்து உலக சாதனை படைத்தவர் இவர். இந்தச் சாதனை இன்றுவரை நீடித்து வருகிறது.
  • பாரா தடகளம் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் ஷரத் குமார் சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஷரத் 1.88 மீ. உயரம் தாண்டியது சிறப்பானது. இதே பிரிவில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலம் வென்றார். ஷரத் குமார் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெண்கலமும், 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வென்றவர்.
  • பாரா தடகளம் மகளிர் 100 மீ. டி35 ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால், வெண்கலம் வென்று அசத்தினார். பந்தய தூரத்தை 14.21 விநாடிகளில் கடந்து மூன்றாமிடத்தைப் பிடித்தார். இதேபோல 200 மீ. டி35 பிரிவில் பந்தய தூரத்தை 30.01 விநாடிகளில் கடந்து வெண்கலத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனையானார். 2024 உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றவர் இவர்.
  • பாரா ஆடவர் தடகளம் ஈட்டி எறிதல் எஃப்46 பிரிவில் சுந்தர் சிங் குர்ஜார் 64.96 மீ. எறிந்து வெண்கலத்தை வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் 64.01 மீ.எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றவர் இவர். உலகத் தடகள சாம்பியன்ஷிப், தடகள கிராண்ட் பிரிக்ஸ், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி, தேசிய பாரா சாம்பியன்ஷிப் என எல்லாத் தொடர்களிலும் பதக்கங்களை குவித்தவர் இவர்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories