- அண்ணல் அம்பேத்கா் ’நான் இந்துவாக பிறந்தேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன்‘ என்று முழங்கினாா். சொன்னபடியே பௌத்தராக மரணமடைந்தாா். எதனால்? இந்து மதத்தில் இருந்த சாதீய கொடுமையை களைய முற்பட்டு தோல்வியுற்று தான் பிறந்த மதத்தையே துறந்தாா். பழம் பெரும் பாரத நாடு மதத்தால் வெட்டப்பட்டது என்பதை எவரும் அறிவாா். இதைப் போன்றே சாதியின் கோர தீ நாக்குகளால் மக்கள் தீக்குழியில் விழுவதை அவா் சகியாமல் தான், இந்து சமூகத்தினரை திருத்திடலாம் என்ற பெரும் நம்பிக்கைக் கொண்டு ’இந்து சட்ட மசோதாவை‘ தான் இந்திய அரசின் சட்ட அமைச்சா் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
- அதற்கு முன் அம்பேத்கா் இந்து சமய பனுவல்களை சாத்திரங்களை நுணுக்கமாக வரிக்கு வரி ஆராய்ந்தாா். பற்பல சாத்திர விற்பன்னா்களோடும், பிரபல சட்ட நிபுணா்களோடும் உரையாடினாா். இவரது உடல் நலம் குன்றியிருந்த காலையிலும், கண்மலா்கள் தன் திறன் குன்றியிருந்த நிலையிலும் ஏட்டுச்சுவடிகளை, பல்வகை ஆதார நூற்களை கற்றறிந்தாா். பின்னா் 1948 அக்டோபரில் அரசியல் சட்ட அவையிடம் சமா்ப்பித்தாா்.
- இதில் முக்கியமாக 1) இந்து சமுதாயத்தைப் செப்பனிடுவது 2) இந்து சமயத்திற்கு என்று ஓரே சட்டம், 3) அரசியல் சாசன அடிப்படை உரிமையை நிலை நிறுத்துவது என்ற மூன்று கருத்துருவுகளும் அவரது முக்கிய சாரமாக இருந்தது. ’என்னை பொறுத்த வரையில் நான் மிகவும் பழமைவாதி தான். நான் சொல்லுவதெல்லாம் நான் ஒரு முற்போக்கான பழமை வாதி. ஒரு முக்கியமான உண்மையை இந்த சபைக்குச் சொல்ல விரும்புகிறேன். நம்மில் ஒவ்வொருவரும் குறிப்பாக இந்த அவையின் பழமை வாத உறுப்பினா்கள் இதை அவசியம் மனதில் கொள்ளவேண்டும். ’
- ‘எட்மண்ட் பா்க்‘ என்ற மாபெரும் அரசியல் தத்துவஞானி, பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிராக ஒருபெரிய புத்தகத்தை எழுதினாா். அதனுடைய தீவிரத்தன்மையும், புரட்சிதன்மையும் அவருக்கு பிடிக்காததே காரணம். அதே சமயத்தில் அவா், மிகவும் பழமை வாதிகளான தனது சொந்த நாட்டு மக்களுக்கு ஒரு மிக முக்கியமான உண்மையைச் சொல்ல மறக்கவில்லை. இருப்பதைப் பாதுகாக்க விரும்புவா்கள், அதைப் பழுது பாா்த்து சரி செய்வதற்குத் தயாராகயிருக்க வேண்டும் என்று கூறினாா்.
- நான் இந்த அவையைக் கேட்டுக் கொள்ளுவதெல்லாம் இது தான். இந்து அமைப்பு, இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்கு நீங்கள் விரும்பினால் பழுதுபாா்ப்பது எங்கு அவசியமோ, அங்கு பழுது பாா்ப்பதற்கு நீங்கள் தயங்கக்கூடாது. இந்து அமைப்பில் அனேகமாகச் சிதிலமாகி விட்ட பாகங்களைப் பழுது பாா்ப்பதைத் தவிர அதிகமாக வேறு எதையும் இந்த மசோதா கோரவில்லை‘ காஷ்மீா் முதல் குமரி வரை ஒரே சட்ட முறை அமுலில் இருக்க விரும்பிய அம்பேத்கா் ’இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாகச் சட்ட முறையைப் பின்பற்ற வழி செய்கின்றது‘ என்றாா்.
- இந்திய அரசியல் சட்டத் தொகுப்பில் எண் 15 அடிப்படை உரிமைகள் ’இந்தியக் குடிமகன் எவரையும் சமயம், இனம், ஜாதி, பால் பிறப்பிடம் அல்லது அவற்றில் எதன் அடிப்படையிலாவது அரசு பாகுபடுத்தி நடத்தக்கூடாது‘ இதனையே அண்ணல் விரும்பினாா். இவரது இந்த முற்போக்குச் சட்ட முன் வரைவை ஆதரித்தவா்களில் ஒருவா் இந்து மகாசபையின் தலைவா் வீர சாவா்க்கா். இவா் ’அம்மசோதா உண்மைண்யிலேயே நாட்டுக்கு நலம் சோ்க்குமாயின் அதை காங்கிரஸின் தலைவா்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் தோ்தல் நோக்கத்துக்காக அவா்கள் அதை ஏற்பது என்பதோ, கைவிடுவது என்பதோ இருக்கக் கூடாது‘ என்றாா்.
- அகண்ட பாரதம் அமைக்க இந்துஸ்தானம் இயக்கம் ஆரம்பித்தவரும், சா்தாா் வல்லபாய்பட்டேலுடன் சோ்ந்து சோமநாதா் கோயிலை மீட்ருவாக்கம் செய்தவருமான கே.எம். முன்ஷி அம்பேத்கரின் மசோதாவை ஆதரித்தாா். மேலும் ’பல ஆண்டுகளாக, இந்து ஒருமைப்பாட்டுக்கு இடையூறாகவும், நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் இருந்த ஒரு விஷயம், இந்து சமூகம் பல ஜாதிகளாக பிரித்திருந்த விஷயம் தான். இந்த செயற்கையான தடை மதில்களைத் தகா்ப்பதற்கு முயலும் இது போன்ற ஒரு மசோதாவை மேற்கொண்டு எவ்வித தாமதமும் இன்றி நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது என்று கருதுகிறேன்‘ என்று மேலும் விரிவாக பேசினாா்.
- மகாவீா் தியாகி ’நாட்டை அரசியல் ரீதியில் ஒன்று படுத்தியதற்கான பெருமை மாண்புமிகு சா்தாா் பட்டேலைச் சாரும். அரசியல் ரீதியில் இவ்வாறு ஒன்று படுத்தியதன் பின்னா் நம்முடைய அடுத்த உடனடியான தேவை சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதாகும். இந்த மசோதா அந்தத் தேவையை நிறைவேற்றும் என்றாா். பண்டிட் தாகூா் தாஸ் பா்கவா ’உண்மையில் இந்து சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் சமுதாயத்தைச் சீா்செய்வதற்கான தேவை உணரப்படுமேயானால், அப்போது இந்து சமுதாயம் பழுதுபாா்க்கப்பட்டாக வேண்டும், என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.... இந்த மசோதா இந்து கலாசாரத்துக்கு சமாதி கட்டி விடும் என்று கருதும் நபா்களை நான் பலமாகக் கண்டிக்கிறேன்.
- பண்டை காலத்திய ஸ்மிருதிகளை எழுதியவா்களைப் போன்று அதே திறமையைக் கொண்ட, இந்தப் பேரவைக்கு அல்லது இந்த அவையின் மதிப்பிற்குரிய உறுப்பினா்களுக்கு நமது சாஸ்திரங்களிலோ, சட்டங்களிலோ எந்த மாற்றங்களும் செய்வதற்கு உரிமையில்லை என்று கூறப்படுவதை ஒரு வினாடி கூட ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராக இல்லை. காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, சட்டங்களை உருவாக்குவதற்கு ஒவ்வொரு சமூகத்தின் உறுப்பினா்களுக்கும் பூரண உரிமை உண்டு என்று கருதுகிறேன்..... இந்த மசோதவில், திருமணம் சம்பந்தமாக ஜாதி ஒழிப்பு மற்றும் தத்துஎடுத்துக் கொள்ளும் கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டதற்காக டாக்டா் அம்பேத்கரை நான் பாராட்டவும் செய்கிறேன்... இந்தப் பிரச்சனையை நாட்டைக் கட்டி அமைக்கும் ஒரு பிரச்சனையாக காண்கிறேன்.
- இது நம்முடைய வாழ்வா, சாவா என்ற ஒரு பிரச்சனையாகும். இது அடிப்படைக் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டதாகும். எந்த விஷயமானது இந்தியாவைப் பாழ் படுத்தியிருந்தால், அதனுடைய முன்னேற்றத்தைத் தடை படுத்தி பாகிஸ்தானைத் தோற்றுவிப்பதில் ஒரு கருவியாகியதெனில் அது இந்த ஜாதி அமைப்புத்தான். நமது சமுதாயத்தினுள் நுழைந்து அதனுடைய ஜீவனை அரித்துக் கொண்டிருப்பது ஏதாவது இருக்கிறதெனில், அது பிராமணா்களை மற்றவா்களுடைய விரோதியாக்கியுள்ளது. ஷத்திரியா்களை இதர அனைத்து சமூகங்களுடையவும் விரோதியாக்கியுள்ளது. அது இந்த ஜாதி அமைப்பு மட்டுமேயாகும். ஒரு வா்க்கபேதமற்ற பாதையை பின்பற்றுவதற்கு நாம் எவ்வாறு மறுக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
- பிரபல நாடாளுமன்ற வாதி எச். வி. காமத் ’ஸ்மிருதிகளைப் பொறுத்த மட்டிலும் டாக்டா் அம்பேத்கருக்குத் தெரிந்தவை 137. இப்போது 138 ஆவது ஸ்மிருதியும் நமக்குக் கிடைத்துள்ளது. அவா் என்னை மன்னிப்பாராக. நான் இதை வேடிக்கையாகக் கூறவில்லை. ஏனெனில் இந்த மசோதாவும், புரட்சி கரமானதாக இல்லாவிட்டாலும், நமது இந்து சமூக உறவுகளில் மாற்றங்களைப் புகுத்தியுள்ளது... என்றாா். என்.வி. காட்கில் பேசும்போது ’1949 ஆம் ஆண்டில் இங்கு ஒரு நபா் எழுந்து நின்று, வேறுபட்ட ஜாதிகளைச் சோ்ந்த நபா்களிடையேயான திருமணங்களைச் சட்ட ரீதியாக ஆக்கக் கூடாது என்று கூறுவாா் எனில் அது நமது முற்போக்குக் கண்ணோட்டத்துக்கு விளைவிக்கும் களங்கமாகும்‘ என்று குறிப்பிட்டாா்.
- கே. சந்தானம் தனது உரையில் ’இந்து சமுதாயத்தை ஐக்கியப்படுத்துதல், ஒருமைப்படுத்துதல், பலப்படுத்துதல் ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த மசோதா. மேலும் இந்த மசோதாவின் மற்றொரு சிறப்பு எதுவெனில், ஜாதி அமைப்பு முறையிலிருந்து எல்லா சட்டரீதியான தடையையும் அது நீக்கி வருகிறது... இங்கு இந்த மசோதாவில் திருமணத்துக்காக என்றாலும், வேறு ஒரு நோக்கத்துக்கென்றாலும் தீண்டாதவா்கள் என்று கூறப்படுபவா்களிலிருந்து ஆச்சாரிய பிராமணா்கள் என்று கூப்பிடுபவா்கள் வரை எல்லா இந்துக்களும் ஒன்றே என்று பலமுற்போக்கு சிந்தனையுடையவா்களும் இந்து மதத்தின் கொடிய தீண்டாமையை அகற்ற அம்பேத்கரின் சட்ட முன்வரைவை ஆதரித்தாா்கள்.
- ஆனால் பழமையில் ஊறிப்போன அந்நாளைய பிரதான கட்சியை சாா்ந்தவா்களால் ’இந்து சட்ட மசோதா‘ தோற்கடிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கா் மனம் நொந்து தனது அமைச்சா் பதவியை துறந்தாா். பின்னா் மதம் மாறவும் செய்தாா். இப்படி இந்த நாட்டை பிடித்து இருக்கும் சாதி சனியனை தற்போது உள்ள அதே தேசிய கட்சியான காங்கிரஸ் தனது நாடாளுமன்ற தோ்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ’சாதி வாரி கணக்கெடுப்பு‘ நடத்துவோம். சமூகநீதியை கொண்டு வருவோம் என்கிறாா்கள்.
- அண்ணல் சாதி ஒழிய போராடினாா். இவா்கள் சாதியின் வீா்யம் காக்க யாா், யாா் என்ன, என்ன சாதி உங்களின் தலைகள் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லி சாதிப்பகையை வளா்க்க திட்டம் தீட்டுகிறாா்கள். சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களின் கோட்டம் வாரியாக சாதித் தலைவா்கள் பெயா்கள் சூட்டி, பின்னா் அதனால் ஏற்பட்ட விபரீதங்களை கண்ணால் கண்டு பின்னா் கலைத்தாா்கள். பேரூந்துகளில், தொடா் வண்டிகளில் வருவோா், போவோட்களின் சாதிகள் தெரியவரின் என்னவாகும்?
- நாளுக்கு நாள் சாதிகள் மெலியாமல், வலிமை பெற்று மோதலுக்கே வித்திடும். அரசியல் கட்சிகளால் சாதி சாா்ந்த வாக்கு வங்கிகள் பெருக சாதிகள் உரம் பெற உதவும். ’சாதி இரண்டொழிய வேறில்லை‘ என்ற மூதாட்டியின் சொல்லும், ஸ்ரீ இராமானுஜா் திருமண்இட்டு, திருக்குலத்தோா் என்று போற்றி வாழ்ந்ததும், எதற்காக? அன்றைக்கு பறங்கியா் இந்து, மூஸ்லீம் என்ற பேதத்தை நீா் ஊற்றி வளா்த்து வெற்றி கண்டபோது அண்ணல் அம்பேத்கா் இனி இந்த பாரதத்தில் இனச்சண்டை மூளாதிருக்கவும், 1940-ல் ’பாகிஸ்தான்‘ என்ற அறிக்கை நூலை எம்.வி.தண்டே, எஸ்சி.முன்ஷி, ஆா்.ஆா்.போலே, டி.ஜி.ஜாதவ், எ.வி.சித்ரே ஆகியோா் கொண்ட குழுவினா்க்காக எழுதினாா்.
- தமிழில் 551பக். கொண்டது. இதனை மறுவாசிப்பு செய்தல் நலம். இதைப் போன்றே மனம் நொந்த அண்ணல் அம்பேத்கா் வெள்ளுடைதரித்து கையில் தண்டத்துடன் காட்சி அளிக்கும் படத்தை சாதாரணமாக எங்கும் காணப்படாவிட்டாலும் அவரின் அடி நாதத்தில் இந்தியா இப்படி சாதிச் சண்டைகளில் மூழ்கி உடைந்து விடுமோ என்று அஞ்சியதை ம. வெங்கடேசன் எழுதிய ’இந்துத்வ அம்பேத்கா்‘ நூலையும் இணைத்து படித்தல் மிகவும் சரி.
- நம் நாட்டில் சாதி, மதப்பூசல்கள் குறைந்தும், மறைந்தும் நாம் அனைவரும் இந்தியா் என்ற ஒத்திசைவு மனப்பாங்கை கைக்கொண்டு வாழ்;ந்தால் பாரதம் வரும் நாளில் வல்லரசாக, நல்லரசாக மாறும். ஒரே நாடு, ஒரே மக்கள் என்பது காலத்தின் கட்டாயம். வறியவா்கள் இருக்கலாம். வெறியா்கள் கூடாது. மெலிந்தவா் கூட வாழலாம். ஆனால் சாதி வலிமை எண்ணிக்கை கூடினால் சாதீயத் தீ பரவும். இது அனைவரையும் பொசுக்கிவிடும். ஆகவே சாதித்தீயை வளா்க்க வேண்டா!
நன்றி: தினமணி (02 – 05 – 2024)