TNPSC Thervupettagam

சாதியின் இருப்பும் முடிவுறா வன்கொடுமைகளும்

August 18 , 2023 512 days 330 0
  • நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய அரிவாள் தீண்டாமையின் குறியீடு எனில், அதற்கு அடித்தளமிடும் சாதி ஒரு பாவச் செயல்; சாதி ஒரு பெருங்குற்றம்; சாதி மனிதத் தன்மையற்ற செயல்என்பதைக் கற்றுத் தராத பாடநூல்களை மட்டும், நாம் ஏன் குற்றம் சொல்லத் துணிவதில்லை?

பிரச்சினை யாரிடம்?

  • தீண்டாமைக் கொடுமைகள் நடைபெறும்போதெல்லாம் அதைப் பொதுவெளியில் கண்டிக்கின்ற ஒவ்வொருவரும் - சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் - ஏதோவொரு சாதியினராக நிலைபெற்றிருப்பதால்தான் (சாதியற்றவர்களான பட்டியல் சாதியினர்கூட இதற்கு விதிவிலக்கு அல்லர்) தீண்டாமை இன்றளவும் உயிரோடு இருக்கிறது என்பது கசப்பான உண்மை.
  • குடும்பத்தில் சாதி அகமணங்களை மட்டுமே அனுமதித்துக்கொண்டு, வணிகத்தில் உறவின் முறையை ஊக்குவித்துக்கொண்டு, பண்பாட்டுக் கூடுகைகளில் அவரவர் குல தெய்வங்களையே முன்னிலைப்படுத்தி வழிபடும் ஒரு சமூகத்தில் உருவாகும் மாணவர்கள் மட்டும் எப்படிச் சாதியை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள்? அதனால்தான் சட்டமும் அரசும் இன்றுவரை சாதியை ஒரு குற்றமாக அறிவிக்கத் தயங்குகின்றன.
  • சாதி அமைப்பை அழிக்காமல் தீண்டாமையை ஒழித்துவிடலாம் என்று நம்புவது வீணானது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்று கருதுவது முற்றிலும் தவறானது. ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாது. சாதி அமைப்பின் நீட்சியே தீண்டாமை.
  • சாதியும் தீண்டாமையும் பிரிந்து நிற்காது. இரண்டும் இணைந்தேதான் நிற்கும்; இணைந்தே தான் வீழும்என்ற அம்பேத்கரின் அறிவாழம் மிக்க கருத்துகளை உள்வாங்கிக் கொண்டால் தான், தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க முடியும்.

தொடரும் வன்கொடுமைகள்

  • அறிவியலுக்குப் புறம்பான, மனிதநேயம் மற்றும் சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரான சாதியைக் கேள்வி கேட்காத அறிவுரைகளால் இங்கு சமூக மாற்றம் நிகழ்ந்துவிடாது. சாதி, உள்சாதி என்பவையெல்லாம் இனக் கோட்பாடுகள் அல்ல; அவை வடிகட்டிய பொய் / மனப்பிறழ்வு என்று அறிவியல் தர்க்கங்களோடு நிரூபித்த அம்பேத்கரின் தலைசிறந்த ஆய்வு நூலான, ‘சாதியை அழித்தொழிக்கும் வழியை (‘Annihilation of Caste’) அவர் எழுதி 87 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.
  • ஆனால், அம்பேத்கரின் இந்நூலை பெரியார் உடனடியாக மொழிபெயர்த்து, 1937 முதல் தாம் இறக்கும்வரை பல்வேறு பதிப்புகளாக ஆயிரக்கணக்கில் வெளியிட்டு, நாடெங்கும் பரப்புரை செய்தார். அந்நூலைப் பள்ளி, கல்லூரிகளில் துணைப்பாடமாகச் (non detail) சேர்ப்பதற்கு, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கு இதைவிட உகந்த தருணம் வேறு இருக்க முடியாது.
  • நீறுபூத்த நெருப்பாக இருக்கும் சாதிய உணர்வுகளை அரசாங்கத்தால் மட்டுமே மட்டுப்படுத்திவிட முடியாது. அதனால்தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் பட்டியல் சாதியினர் - பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தால் வன்கொடுமைகளைத் தடுக்க முடியவில்லை. வன்கொடுமை நிகழ்ந்த பிறகு சில நிவாரணங்களையும் குறைந்த அளவிலான தண்டனையையுமே வழங்க முடிகிறது.
  • கடும் அச்சத்தை விளைவிக்கக்கூடிய ஆணவப் படுகொலையோ, நாங்குநேரி போன்ற வன்கொடுமையோ நிகழ்த்தப்படும்போது மட்டுமே ஆர்ப்பரிக்கும் இச்சமூகம், அருவமாக நிலைத்திருக்கும் சாதியச் சமூக அமைப்பின் மீது குற்றம் காண்பதில்லை. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுக்கும் சாதி அமைப்பு உயிர்ப்போடு இருப்பதற்கு எரிபொருளாக விளங்கும் மத விழுமியங்களை முதன்மைக் குற்றவாளியாக்காமல், அரசையே இச்சமூகம் முதன்மைக் குற்றவாளியாக்குகிறது. இதன் மூலம் சாதிய முரண்களைக் களையும் முயற்சிகள் திட்டமிட்டுத் திசைதிருப்பப்படுகின்றன.

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு

  • சாதிப் பாகுபாடு என்பது பரம்பரை மற்றும் தொழில் (Descent and Work) அடிப்படையில் அமைந்திருக்கிறது என ஐ.நா. அவை வரையறுத்துள்ளது. இத்தகைய பாகுபாட்டைப் பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால், இந்தியக் கிராமங்கள் பிறப்பின் அடிப்படையில்தான் வாழிடங்களையும் (தனிக் கோயில்கள், தனிக் குடிநீர்த் தொட்டிகள், தனிச் சுடுகாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சேரிகள்) தொழில்களையும் உருவாக்கியுள்ளன. மனிதக் கழிவைக் கையால் அள்ளுவது தடை செய்யப்பட்டிருப்பினும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 339 பேர் இறந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • சமத்துவச் சிந்தனையை வளர்த்தெடுக்கும் உயரிய நோக்கத்தில் அம்பேத்கரின் நூல்களைத் தமிழில் வெளியிட 5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள தமிழ்நாடு அரசு, அதேபோல அம்பேத்கர், பெரியாரின் சாதி ஒழிப்புச் சிந்தனைகளைப் பொது இடங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளைச் சமத்துவ நாளாக அறிவித்து, பள்ளி, அரசு அலுவலகங்களில் சமத்துவ உறுதிமொழி ஏற்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
  • ஆனால், அவ்வுறுதிமொழி, ‘சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத - சமத்துவச் சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்என்றிருப்பதற்குப் பதில், ‘சாதியற்ற - சமத்துவச் சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்என்பதாகத் திருத்தப்பட வேண்டும். ஏனெனில், சாதி வேறுபாடுகள் கூடாது எனக் குறிப்பிடும்போது, சாதி இருக்கலாம்; வேறுபாடுதான் கூடாது என்றே பொருள்படுகிறது. தவிர, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளைப் பொருள்படுத்தி, அவற்றைக் களைவது குறித்து விவாதிக்க சிவில் சமூகம் முன்வருவதில்லை.

செய்ய வேண்டியவை

  • நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களை ஒரு சாதிக்குரியவராகப் பார்த்து, அவருக்கு விழா எடுப்பது போன்றவற்றை அரசு அங்கீகரிக்கக் கூடாது. பொதுவெளியில் சாதிக்கு ஆதரவாகப் பேசும் சாதி அமைப்பின் பிரதிநிதிகள், திரைப்படக் கலைஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரை அரசு கடுமையாக எச்சரிக்க முன்வர வேண்டும். சாதிப் பெருமிதங்களைச் சொல்லும் வகையிலும் பட்டியல் சாதியினரை இழிவுபடுத்தும் வகையிலும் எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் எவ்விதக் குற்ற நடவடிக்கைக்கும் உள்படாதவையாகவே இருக்கின்றன.
  • பெயர்களுக்குப் பின்னால் இடம்பெறும் சாதிப் பின்னொட்டுகள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவு எனினும் தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் இன்றுவரை முற்றாக நீக்கப்படவில்லை. சொந்த சாதியில் வரன் தேடும் விளம்பரங்கள் இன்றைக்கு ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும்.
  • மேலும்,‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அம்மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ - 21(2) என்று பட்டியல் சாதியினர் - பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 வலியுறுத்துகிறது. இந்நேர்வில், காவல் - உளவுத் துறை கூடுதல் அக்கறை செலுத்தினால் மட்டுமே வன்கொடுமைகளைத் தடுக்க முடியும்.
  • சாதி என்கிற சமூகப் பிரிவினைக் கோட்பாட்டைத் தகர்க்காமல் நம்மால் ஒரு நாகரிகமான, ஜனநாயகமிக்க சமூகத்தை உருவாக்க முடியாது. சாதி வேண்டும்; ஆனால், தீண்டாமை கூடாது. சாதிப் பெருமிதங்கள் வேண்டும்; ஆனால், இழிவுபடுத்தக் கூடாது. தீண்டாமை குற்றம்; ஆனால், சாதி குற்றமல்ல என்பதான சமூகப் பார்வை முற்றிலும் மாற்றப்படாத வரை, ஒவ்வொரு வன்கொடுமை நடந்து முடிந்த பிறகும் அதற்கு எதிர்வினை ஆற்றுகின்றவர்களாகவே நாம் இருப்போம்.
  • அவ்வாறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமே போராடுபவர்களை நோக்கி அம்பேத்கர் ஒரு முக்கியக் கேள்வியை முன்வைத்தார்: கடைசி தீண்டத்தகாதவன் கொல்லப் படும் வரை, நீங்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கப் போகிறீர்களா?”

நன்றி : இந்து தமிழ் திசை (18– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories